கட்டிளமைப் பருவ மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்களின் செல்வாக்கு

கல்வி

கட்டிளமைப் பருவ மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்களின் செல்வாக்கு

இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலே சமூகம் பல்வேறு வகையிலும் முன்னேறியுள்ளது. அந்த வகையில் கல்விச் சமூகமயமாக்கல என்பது மனித சமூகம் நிலைத்து நிற்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. கல்விச் சமூகமயமாக்கல் என்பது பிறக்கும் பிள்ளை ஒன்றை கல்வியினூடாக அச்சமூகத்திற்கு ஏற்புடையவனாக மாற்றும் செயற்பாடாகும். மனிதன் அடிப்படையில் ஒரு சமூகப் பிராணியாகக் காணப்படுகின்றான். மனிதன் பிறந்து இறக்கும் வரை தாம் வாழும் சமூகத்தில் மிகவும் பின்னிப் பிணைந்து சமூகத்துடன் இணைந்து வாழ்கின்றான். குடும்பத்தில் ஓர் அங்கமாக இருந்து சமூகத்திற்கு ஏற்ப ஒரு மனிதனாக மாற்றுவது அல்லது மாறுவதே கல்விச் சமூகமயமாக்கல் எனப்படும்.


ஒரு மனிதன் அவன் பின்பற்றுகின்ற நெறிமுறைகள், கலாசார நடைமுறைகள், பொருளாதார நடவடிக்கைகள் போன்ற பல விடயங்களை தான் வாழுகின்ற சமூகத்திலிருந்து பின்பற்றுகின்றான். மனிதன் சமூகத்தில் ஒரு அங்கத்தவனாக வாழ்வதற்கான பயிற்சிக்கு காரணம் கல்விச் சமூகமயமாக்கலாகும். அந்த அடிப்படையில் இங்கு பல்வேறுபட்ட கல்விச் சமூகமயமாக்கல் முகவர்கள் செயற்படுகின்றனர்.

சமூகமயமாக்கல் செயற்பாட்டில் கல்வி 19 ஆம் நூற்றாண்டில் உள் நுழைந்ததால் பல்வேறு கல்விச் செயற்பாடுகள் மூலம் சமூகமயமாக்கல் செயன்முறை விரிவுபடுத்தப்பட்டதன் வாயிலாக கற்பித்தலை ஒரு முறைப்படியமைந்த கொள்கையாக எடுத்துக் கொண்டு கல்வியில் பல மாற்றங்கள் ஏற்படலாயின. கல்வியின் இலக்குகள் தனியாள்மயப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து சமூக நோக்குடையதாக விரிவடையலாயிற்று.


கல்விச் சமூகமயமாக்கத்தின் விளைவாக ஒருவர் தனது சுயம் பற்றிய உணர்வையும், அவர் பற்றிய ஏனையவரது மனப்பாங்கு பற்றிய உணர்வையும் பெற்றுக் கொள்கின்றார் என்று கல்விச் சமூகமயமாக்கல் பற்றி குறிப்பிட்டுள்ளார். கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்தும் முகவர்களில் குடும்பம், பாடசாலை, தொழில் நிறுவனம், சமய நிறுவனம் போன்றவற்றில் ஒன்றாக விளங்கும் சமவயதுக் குழுக்கள்; முக்கிய வகுப்பாகக் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக கட்டிளமைப் பருவத்தினர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். சமவயதுக் குழு என்பது ஒரே வயதையுடைய நோக்கத்தாலும், பண்புகளாலும் ஒரே இயல்பைக் கொண்டு ஒத்துச் செல்பவர்களே இவர்களாவர். இவர்கள் தம் பெற்றோரிடம் கற்றுக் கொள்ளாத பல்வேறுபட்ட விடயங்களை சமவயதுக் குழுக்கள் மூலமே பெற்றுக் கொள்கின்றனர். தம் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளாத பல விடயங்களை தம்மை ஒத்த சமவயதுக் குழுக்களுடனே கலந்தாலோசிக்கின்றனர். எனவே இதன் போது அங்கு கல்விச் சமூகமயமாக்கல் செயன்முறை இடம்பெறுகின்றது. சமவயதுக் குழுக்கள் சிறந்த முறையில் கல்விச் சமூகமயப்படுத்தப்படவில்லையெனில் அந்த சமூகம் சீர்குழைக்கப்பட்டு எதிர்காலத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அமையும்.


தனிநபர்கள் விதிகளையும், பழக்க வழக்கங்களையும், விழுமியங்கள் மற்றும் நடத்தைகளை அவர்கள் வாழும் சமூக ஒழுங்குகளினூடாக மரபுரிமையாகப் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை சமூகவியலாளர்கள் சமூகமயமாக்கல் என்று குறிப்பிடுகின்றனர். மேலும் சமூகத்துடன் ஒரு தனிநபர் இடைவினை கொள்வதற்கான திறனுள்ளவராக இற்றைப்படுத்துதலும் சமூகம் தனது பொதுவான விழுமியங்கள், பழக்கவழக்கங்கள், விதிகள், மரபுகள் மற்றும் மொழி போன்றவற்றை பகிர்ந்து கொள்ளவும் கல்விச் சமூகமயமாக்கல் குவியப்படுத்தப்படுகின்றது. ஒருவர் கற்றுக்கொள்வதற்கும் மனிதனாக விருத்தி செய்து கொள்வதற்குமான வாழ்க்கை நீடித்த செயன்முறையே கல்விச் சமூகமயமாக்கல் ஆகும் என்று குறிப்பிடுகின்றார். எனவே கல்வியை வழங்கும் முக்கிய நிறுவனங்களில் பாடசாலை குடும்பத்திற்கு அடுத்த படியாக பிரதான இடத்தை வகிக்கின்றது. எனவே கல்வி என்பது வெறுமனே அறிவை மட்டும் புகட்டாமல் மாணவர்களில் நற்பண்புகளை வளர்த்து சிறந்த சமூகமயப்படுத்தும் கருவியாகவும், சமவயதுக் குழுக்களை ஒன்றிணைக்கும் தளமாகவும் தொழிற்படுகின்றது.

சமவயதுக் குழு என்பது கல்விச் சமூகமயமாக்கலின் மிகவும் பயனுள்ள அம்சமாகும். அத்துடன் சமூக நலன்களைக் கொண்டிருக்கும் ஒரு முதன்மைக் குழுவுமாகும் ஒருவருக்கு குடும்பம் என்னும் சமூக நிறுவனத்திற்கு அடுத்த படியாக பாடசாலையோடு இணைந்ததாக கல்விச் சமூகமயமாக்கலுக்கான அதிக பங்களிப்பைச் செய்யும் ஒரு சமூக நிறுவனமாக இது உள்ளது. சமவயதுக் குழுவானது சம வயதில் உள்ளவர்களைக் கொண்டதொரு குழுவாகும்.


அவ்வாறே சமவயதுக்குழுக்களால் மாணவர்கள் நேர் மனப்பாங்குகளை பெறும் அதே அளவு எதிர் மனப்பாங்குகளையும் கற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக, நேர்மனப்பாங்குகளான கல்வி, குழு முயற்சி, உதவும் மனப்பான்மை, விட்டுக்கொடுப்பு, தலைமைத்துவப் பண்புகள், சட்டத்தை மதித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு சிறந்த நற்பிரஜைகளாக வளரவும் களவு, கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், மது பாவணை, கேலி செய்தல், பெரியோரை இகழ்தல், சட்ட திட்டங்களை மதிக்காமை போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடவும் சமவயதுக்குழுக்கள் முக்கிய காரணியாகத் திகழ்கின்றனர்.


எனவே பாடசாலையில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் ஒரு சமூகத்திற்கு சேவையாற்றும் சிறந்த தனி நபர்களை உருவாக்குகின்றது. அந்த வகையில் மாணவர்கள் தமது நண்பர்களுடன் இணைந்து நேரத்திற்குச் செயற்படும் திறனை வளர்த்தல், தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுதல், பெரியோரை மதித்தல், ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தல், பாதை ஒழுங்குகளை கற்றுக் கொடுத்தல், போன்ற பல விடயங்களை கற்றுக் கொடுக்கும் தளமாக காணப்படுவதோடு இவ் அனைத்து செயற்பாடுகளும் மாணவர்கள் தம்மை ஒத்த நண்பர்களுடன் இணைந்தே கற்றுக் கொண்டு அதன் படி செயற்படத் தொடங்குகின்றனர். எனவே தான் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களைத் தெரிவு செய்து கொடுப்பதையே வலியுறுத்தியுள்ளது.


அவ்வாறே மாணவர்களிடையே சமவயதுக்குழுக்கள் சம அளவில் சாதகமான விளைவுகளையும் பாதகாமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர். அதிகமான மாணவர்கள் தமது நண்பர்களுடனே தமது அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இதனால் குழுவாக இணைந்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் அவர்களிடையே குழு உணர்வும் கற்றல் ஊக்கமும் அதிகரித்துள்ள நிலையைக் கண்டறியமுடிந்தது. அவ்வாறே அதிகமான மாணவர்கள் தமது சமவயதுக்குழுவினரால் உள ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். மேலும் நண்பர்களோடு இணைந்து தமது நேரத்தை சினிமா நிகழ்ச்சிகளிலும், ழுடெiநெ விளையாட்டுக்களிலும் கழிக்கும் நிலையும் காணப்படுகிறது. இதனால் நண்பர்களுடன் இணைந்து தீய செயல்களுக்கு அடிமையாகக் கூடிய நிலை ஏற்படுகின்றது.


ஆகவே பாடசாலைகள் கட்டிளமைப் பருவ மாணவர்களுக்கு போதிய தலைமைத்துவப் பயிற்சிகளையும், விழிப்புணர்வு செயற்றிட்டங்களையும் பாடசாலை மட்டத்தில் பொருத்தமான வளவாளரைக் கொண்டு முழுமையாக செயற்படக் கூடிய வகையில் ஒழுங்கமைப்பது அவசியமாகும். எனவே மாணவர்களை போதிய கல்விச் சமூகமயமாக்கத்திற்குட்பட்ட நற்பிரஜைகளாக சமூகத்திற்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக உருவாக்குவதற்கு இது அவசியமாக உள்ளது.

ம.றஞ்சனா,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை,
மாணவி,
கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை,
கலைகலாசார பீடம் ,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *