கலாசார ஊடுகடத்தலில் பாடசாலையின் வகிபங்கு
உலகின் வாழுகின்ற ஒவ்வொரு மக்கட் பிரிவினரும் தமக்கே உரித்தான ஏனைய சமூகத்திடம் இருந்து தங்களை தனித்துவமாக எடுத்துக்காட்டுகின்ற பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கின்றனர். இதன் அடிப்படையில் உலகில் வாழுகின்ற ஒவ்வொரு சமூகத் தொகுதியினரும் தம்மை அடையாளப்படுத்தும் விதமான கலாச்சாரங்களை கொண்டிருப்பர்.கலாச்சாரம் என்பது மொழி, மதம், உணவு வகைகள், சமூகப் பழக்கவழக்கங்கள், இசை மற்றும் கலைகளை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பண்புகள் மற்றும் அறிவு எனலாம்.
மேலும் கூறுவதாயின் சமூகமயமாக்கல் மூலம் கற்றுக் கொள்ளப்படும் நடத்தைகள் மற்றும் தொடர்புகளின் பகிரப்பட்ட வடிவங்கள், அறிவாற்றல் கட்டமைப்புகள் மற்றும் புரிதல் கலாச்சாரமாகும்.
இக் கலாச்சாரத்தை தலையாயக் கொண்டு சமூகங்கள் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு அவற்றை சிறப்பான முறையில் எடுத்துச் செல்வதற்கான ஊடு கடத்தும் ஆயுதமாக கல்வியை நம்பியுள்ளனர். கல்வியே அழியாச் செல்வம் என்கின்ற அவர்களது நம்பிக்கையின் பால் தமது கலாசார ஊடுகடத்தலுக்கு சிறந்த வழிமுறை இதுவே என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இக்கல்வி செயன்முறையை வழங்குவதற்காக வேண்டி முறையான விதத்தில் சமூகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஓர் நிறுவனமாக பாடசாலைகள் திகழ்கின்றன. இங்கு நாம் கலாச்சார ஊடுகடத்தில் பாடசாலை வகிபங்கை ஒரு சில உபதலைப்புகளூடாக ஆராய்வோம்.
அந்த அடிப்படையில் கலாச்சார ஊடுகடத்தல் ஏன் அவசியம் என்பது எம்மில் அனைவருக்கும் தோன்றும் வினாவாகும் ஒரு சமூகம் தன்னுடைய பாரம்பரியத்தை பாதுகாத்து தமது அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வேண்டியும் தமது சொந்த வரலாற்றை தெரிந்து தமது பெறுமதியை உணர்ந்து கொள்வதற்கும் தேசிய உணர்வு மிக்க மாணவச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கும் பண்டைய மக்கள் கலாச்சார ஒழுக்கங்களோடு எவ்வாறு நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவினர் என்பதை தெரிந்து கொள்ளவும் அம் மக்கள் தங்களுடைய கலாச்சார விழுமியங்களை எவ்வாறு பிரயோசனம் மிக்கதாக சமூகத்திற்கு வழங்கினர் என்பதை அறியவும் மாணவர்களின் தற்கால தவறான நடத்தைகளான போதைப்பொருள் கொலை, கொள்ளை, துஸ்பிரயோக நடவடிக்கையில் இருந்து தவிர்ந்து எமது கலாச்சாரத்தில் கூறப்படுகின்ற ஒழுக்க விழுமியங்கள் நன்னடத்தைகள் ஆன்மீக வளர்ச்சிக்கான செயன்முறைகள் சமூக ஒற்றுமைக்கான உத்திகள் என்பவற்றை அறிந்து கொள்வதற்காக வேண்டியும் இக்கலாச்சார ஊடுகடத்தல் பிரதானமான ஒன்றாக திகழ்கின்றது.
அதேபோல இக்கலாச்சார ஊடு கடத்தல்களை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் ஏற்படும் விளைவுகளாக நாட்டில் அமைதியான சமூகமாகவும் தேசிய ஒற்றுமையுடன் கூடிய ஒரு சமூக வாழ்வை உருவாக்கக் கூடியதாக இருக்கும். மேலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற தற்கால சமூகங்களிடையே கட்டுக்கோப்பான சமூக அமைப்பையும் அவற்றுக்கிடையேயான முரண்பாட்டுத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாக அமைவதோடு நாட்டை பல்வேறு இன்னல்களைக் கடந்து அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டு சென்ள முன்னைய கலாச்சார விதிமுறைகளை தற்காலத்திற்கு ஊடுகடத்துதல் பிரதானமானதாக காணப்படுகிறது. ஒவ்வொரு சமூகமும் தமது தனித்துவ தன்மைகளை வெளிக்காட்டி தமக்கான உரிமைகளை பெற்றுக் கொண்டு சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கு இவை வழி வகுப்பதோடு ஒரு நாடு பிரதானமான உபகலாச்சாரங்கள் பல ஒன்றிணைந்து நாட்டின் கலாச்சாரம் வெளிக்காட்டப்படுவதன் மூலமாக கலாச்சார ஊடுகடத்தில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் காலாகாலத்துக்கும் சர்வதேச சமூகத்தில் நல்லிணக்க மிக்க நாடாக பெறுமதி மிக்க நாடாக மதிக்கத்தக்க வகையில் உருவாகுவதற்கு இவை உறுதுணையாக அமைகின்றன.
இக்கலாச்சார ஊடுகடத்தில் பிரதான முகவராக பாடசாலைகள் செயற்படுகின்றன. பாடசாலையானது சமூக மாற்றத்திற்கு ஏற்பவும் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பவும் தன்னுள் பல விடயங்களை உள்ளடக்கிக் கொண்டு செல்கின்ற அமைப்பாக காணப்படுவதனால் இங்கு கலாச்சார ஊடுகடத்தலுக்கான பல்வேறு விடயங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
அந்த வகையில் பாடசாலைகளில் முறையான கலைத்திட்டத்தின் மூலம் பாடசாலை கலாச்சாரத்தையும் அச்சமூகத்தினுடைய பாரம்பரிய கலாச்சாரத்தையும் பாதுகாக்கின்றது உதாரணமாக இந்து சமய பாடசாலைகளில் அதனோடு தொடர்புடைய கலாச்சாரமும் இஸ்லாமிய பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சாரத்தோடு தொடர்புடைய விடயங்களும் பௌத்த மற்றும் கிறிஸ்தவ பாடசாலைகளில் அந்தந்த கலாச்சாரங்களில் வெளிப்படுத்துகின்ற அடையாள சின்னமாகவும் பாடசாலைகளின் கலைத்திட்டம் நேர முகாமைத்துவம் பாடத்தெறிவு சமயக் கிரியைகள் என்பன பிரதானமானவையாக இடம் பெறுகின்றன.
அத்துடன் நாடளாவிய ரீதியில் கலாச்சார ஊடுகடத்திலே உறுதி செய்யும் வகையில் அந்தந்த கலாச்சாரங்களுக்கான சமய பாடங்கள்( இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து – சைவநெறி, பௌதர்கள் – புத்தாகமய) போன்ற பாடங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு பாடசாலைகளில் மறை கலைத் திட்டச் செயற்பாடுகள் ஊடாக அந்த சமூகத்தின் கலாச்சாரங்கள் முறையாக பின்பற்றப்படுகின்றது உதாரணமாக காலை கூட்டங்களில் அந்தந்த சமய கலாச்சாரங்களை வெளிக்காட்டும் வண்ணம் இந்துக்கள் கோயிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவதோடு முஸ்லிம்கள் சலவாத் ஓதியும், கிறிஸ்தவர்கள் தேவாரம் பாடியும,; பௌத்தர்கள் அவர்களது சமய பாடல்களை பாடியும் நடைமுறைப்படுத்துவதோடு அதனோடு தொடர்புடைய பல்வேறு விழாக்கள் (இஸ்லாமியர்களை பொறுத்தவரையில் மீலாது நபி விழா, இந்துக்கள் சரஸ்வதி பூஜை சிவராத்திரி விழா என்எனவும் கிறிஸ்தவர்கள் பெரிய வெள்ளி கிறிஸ்தவ விழா) போன்ற மறைமுகமான கலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி செயற்படுத்துவதோடு ஒவ்வொருவரும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தலை வணங்குதல் அன்பாக நடத்தல் என்ற அடிப்படையில் அந்தந்த கலாச்சாரங்களுக்கான விடயங்களை மறைக்கலை திட்டம் ஊடாக நடைமுறைப்படுத்துகின்றனர்.
மேலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் ஊடாக தமிழ்மொழி தின போட்டிகள் சமய போட்டிகள் மற்றும் சாரணர் இயக்கங்கள் என்பவற்றின் ஊடாக அவை ஊடுகடுத்தப்படுவதுடன் குறித்த கலாச்சாரங்களை மாணவர்களுக்கு வெளி காட்டும் வண்ணம் செயலமர்வுகள் பயிற்சி பாசறைகள் கருத்தரங்குகள் என்பன நடைமுறைப்படுத்தப்படுவதோடு தேசிய தினங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை கொண்டு நடத்துவதற்கான திட்டமிடங்களுடன் செயற்படுவதோடு அந்தந்த கலாச்சாரங்களோடு தொடர்புடைய நட்புறவு சுற்றுலாக்கள் தமது சமூகத்தை சூழ உள்ள மத நிறுவனங்களான பள்ளிவாசல் கோயில் பௌதவிகாரை கிறிஸ்தவ தேவாலயம் என்பவற்றோடு இணைந்து பல்வேறு சமயம்சார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் ஊடாக இவை மாணவர்களுக்கு ஊடு கடத்தப்பட வேண்டும்.
இவ்வாறான ஊடுகடத்தல் செயல்முறை பாடசாலைகளில் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆரம்ப கால சமூகம் எவ்வாறு ஒற்றுமையோடு செயற்பட்டு நாட்டை தன்னிறைவு மிக்க பொருளாதாரத்திற்கு இட்டுச் சென்றதோ அந்த அடிப்படையில் செயல்பட வேண்டுமாயின் அந்தந்த கலாச்சார பாரம்பரியங்களை ஊடுகெடுத்தும் வகையிலான ஒழுக்க கோவைகளை ஆசிரியர் குழாத்திற்கும் மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் அத்துடன் தமது கலாச்சார ஊடுகடத்தலோடு மாத்திரம் தம்மை சுருக்கி கொள்ளாமல் பல்லின கலாசார சமூகங்களை ஏற்று நடந்து அந்நிகழ்வுகளை முன்வந்து நடத்துவதற்கு ஒவ்வொரு சமூகமும் தயாராக வேண்டும் மேலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் கலாச்சாரத்தின் பெறுமதி தொடர்பான ஊக்குவிப்பு பயிற்சிகள் பாசறைகள் வழிகாட்டல் நிகழ்வுகள் என்பன உருவாக்கப்பட்டு கலாச்சாரத்தை நடைமுறை ரீதியாக எடுத்து நடப்பதற்கான தெளிவு வழங்கப்படுவதோடு இவற்றோடு தொடர்புடைய சஞ்சிகைகள் ஆய்வு கட்டுரைகள் என்பவற்றை அவர்கள் ஊடாகவே உருவாக்கி வெளியிடுவதற்கான செயற்பாடுகளை வெளியிடும் பணிகளை ஏனைய கலாச்சாரங்கள் பாதிக்காத வண்ணம் நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் சிறப்பான விளைவுகளை ஒட்டுமொத்த நாடும் எதிர்நோக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது கலாச்சாரத்தை ஊடுகடத்துகின்ற பிரதான தளமாக பாடசாலைகள் காணப்படுகின்றன. அங்கு இப் பணி சீராக இடம் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் அவை நாட்டை அபிவிருத்திப்பாதைக்கும் கல்வி குறிக்கோள்கள் கல்வி இலக்குகள் அடைவதற்கும் அத்திவாரமாக காணப்படுவதோடு அவை முறையாக பின்பற்றப்படாத சந்தர்ப்பத்தில் பாடசாலை வினைத்திறன் அற்றதாகவும் சமூகத்திற்கு பிரயோசனமற்றதாகவும் உருவாகின்ற நிலைமை கவலைக்குரியதாகும். எனவே இவற்றை கடந்து கல்வி கற்ற இளம் சமுதாயமான நாம் ஒவ்வொருவரும் எம்முடைய கலாச்சாரம் யாது அவற்றின் பெறுமதி யாது? அவற்றை தொடர்ந்து பாடசாலை ஊடாக எடுத்துச் செல்வதற்கான வழிவகைகள் திட்டமிடல்கள் உளத் திருப்தியோடும் அர்ப்பணிப்போடும் உருவாக்கப்படுமானால் நிச்சயமாக பல்கலாசார ஊடுகடத்தலின் மூலம் எமது நாட்டின் இலக்குகள் அனைத்தையும் அடைந்து நாட்டின் நிலையான வெற்றிக்கான பங்குதாரர்களாக நாம் மாற முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
எம் .வை.எம்.அர்சாத்,
நான்காம் வருடம் முதலாம் அரையாண்டு,
சிறப்பு கற்கை நெறி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்