கல்விச் சமூகமயமாக்கலில் சமூகம்….
ஒரு தனி மனிதன் குடும்பம் ஆகின்றான். குடும்பங்கள் பல இணைந்து குலங்கள் ஆகின்றன. குலங்கள் பல இணைந்து சமூகமாகின்றன. சமூகங்கள் இன்று ஒவ்வொரு தனி மனிதனது வாழ்வியல் அம்சங்களிலும், அவனது முன்னேற்றத்திலும் தனியொரு இடத்தினைக் கொண்டுள்ளது. அந்த வகையில் கல்வி சமூகமயமாக்கலில் சமூகத்துக்கு தனி ஒரு பங்கு காணப்படுகின்றது.
கல்விச் சமூகமயமாக்கல் என்பது கல்வியினூடாக சமூகத்திற்கு ஏற்புடைய தனிநபர்களை உருவாக்குவதாகும். இன்றைய 21ம் நூற்றாண்டில் சமூகம் பல்வேறு வகையில் மாற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் கல்வியின் பிரதான இலக்கு சமூகத்திற்கு பொருத்தமான நற்பிரஜைகளை உருவாக்குவதாகும். அதற்கமைவாக கல்வியின் இலக்குகள் தனியாள்மயப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து சமூக நோக்குடையதாக விரிவடைந்து காணப்படுகின்றன. இன்று கல்வி சமூகமயமாக்கலில் சமூகத்தின் பங்கு முக்கியமானது.
ஒருவர் தனது சமூகச் சூழலிலுள்ள நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்தப்பாடு அடைவதை சமூகமயமாக்கல் (Socialization )எனலாம்.
தான் வாழும் சமூகம் பற்றி அறிந்து கொள்வதற்கும், சமூகத்திற்கு இசைவாக்கம் அடைவதற்கும், சமூக சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடப்பதற்கும், சமூகத்திற்கு உதவுவதற்கும், சமூக நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் அவ்வப்போது பொருத்தப்பட அடைவதற்கும் கல்விச் சமூகமயமாக்கல் ஒருவனுக்கு அத்தியாவசியமாகின்றது.“மனிதன் ஒரு சமூகப் பிராணி” என்ற ரீதியில் அவன் சமூகத்திலிருந்து செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என அனைத்தையும் கற்றுக் கொள்கிறான். இன்று கல்விச் சமூகமயமாக்கலுக்கும் சமூகத்திற்கும் நேரடியான தொடர்பு நிலவுகின்றது.
பாடசாலைக்கும் சமூகத்துக்கும் இடையிலான நல்லுறவில் இன்று கல்விச் சமூகமயமாக்கலில் சமூகம் பங்கு கொள்கின்றது.
ஒருவன் சமூகத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதில் கல்விச் சமூகமயமாக்கலின் பங்கு அளப்பரியது.
எமது சமூகத்தை பொறுத்தவரையில் அதன் வளர்ச்சி போக்கு எவ்வளவு தூரம் வினைத்திறனாக அமைகிறதோ அதற்கேற்றார் போல மறுபுறம் சமூகத்தின் பிரச்சினைகள் வெகுவாக இடம் பெற்ற வண்ணமே காணப்படுகின்றன. அதன்படி மனித சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து சமூகத்தினை நெறிப்படுத்துவதற்கு கல்வி சமூகமயமாக்கல் துணை புரிகின்றது.
சமூகத்தில் தற்கொலை முயற்சிகள், பாலியல் வக்கிரங்கள், போதைப் பொருள் பாவனைகள், சாதி இன,கலாச்சார, சமய வேறுபாடுகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள், ஆண், பெண் பரஸ்பரம், முறைகேடான ஆடை அலங்காரம், முறையற்ற வாழ்க்கை முறை, ஆபத்தான நோய்கள் போன்ற சமூகப் பிரச்சினைகள் மித மிஞ்சி காணப்படுவதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் முறையான சமூகமயமாக்கல் செயன்முறைக்கு உட்படுத்தப்படாததே காரணமாக அமைகின்றது.
ஒவ்வொருவனும் தனது குடும்பத்தில், பாடசாலையில் கற்றுக்கொள்ளாத விடயங்களை சமூகத்தில் இருந்து கற்றுக் கொள்கின்றான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமூகம் ஏதாவது ஒரு விடயத்தை ஒருவருக்கு கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. இதன்போது அங்கு கல்விச் சமூகமயமாக்கல் செயன்முறை இடம்பெறுகிறது. ஒரு மனிதன் சிறந்த முறையில் கல்வி சமூகமயப்படுத்தலுக்கு உட்படாவிடின் அந்த சமூகமே சீர்குலைக்கப்பட்டு எதிர்காலத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கு உந்து சக்தியாக அமையும்.
கல்விச் சமூகமயமாக்கல் முகவர்களாக செயற்படும் குடும்பம், பாடசாலை, சம வயது குழுக்கள், தனியார் வகுப்புக்கள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்தும் சமூகத்திலேயே தங்கியுள்ளன. கல்விச் சமூகமயமாக்கல் முகவர்களின் வினைத்திறனான செயற்பாட்டுக்கு சமூகமே அடித்தளம் ஆகும்.
மனிதன் சமூகத்தில் ஒரு அங்கத்தவனாக வாழ்வதற்கான பயிற்சிக்கு காரணம் கல்வி சமூகமயமா மக்கலாகும். கல்விச் சமூகமயமாக்கல் சமூக உணர்வுடனே நெருங்கிய தொடர்பு கொண்டதாக காணப்படுகின்றது. சமூகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாட்டிலும் கல்வி சமூகமயமாக்கல் தங்கி இருக்கின்றது.
கல்வி சமூகமயமாக்கலின் பிரதான நோக்கங்களாக கல்வியினை சமூகம் சார்ந்த நோக்கில் அணுகுதல், கல்விக்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பினை அறிந்து கொள்ளல், கல்வி நிறுவனங்கள், கல்வியின் கலாச்சார மற்றும் பொருளாதார பின்னணிகள், சமூகம் சார்ந்த மன பாங்குகள், தனியார் ஒரு விரல் செல்வாக்கு செலுத்தும் சமூகவியல் காரணிகளை பற்றி ஆராய்தல் என்பனவாகும்.
கல்விச் சமூகமயமாக்கலானது சமூகத்தில் பின்வருமாறு இலக்குகளை கொண்டுள்ளது.
- கற்றல் கற்பித்தல் சமூகக் கல்வி நிலையை உருவாக்குதல்.
*சமூக நோக்கும், சமூகப் பொறுப்பும் மிக்கோரை கல்வியால் உருவாக்குதல். - கல்வி வழியாக சமூக நீதியை நிலை நாட்டுதல்.
- சமூகத் தொடர்பாடல் மேம்பாட்டிற்கு உதவுதல்.
- சமூக நினைவுகளை பாதுகாத்தலும், வளர்த்தலும், பரப்புதலும்.
- சமூக ஒத்துணர்வை வளர்க்க உதவுதல்.
- சமூகமயமாக்கல் செயனாமுறையை பொறுப்பேற்றல்.
- சமூகப் பிணைப்பு சக்திகளுக்கு வலுவூட்டல்.
- சமூக தேர்ச்சிகளை மேம்படுத்துவதற்கு கல்வி உதவுதல்.
- சமூகப் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய அறிகை ஆற்றலையும், செவ்விய சமூக புலக்காட்சிகளையும் வளர்ப்பதற்கு உதவுதல்.
ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை சமூகத்தில் தான் விரும்பியோ விரும்பாமலோ தங்கி இருக்க வேண்டியது கட்டாயமாகும். சமூகமயமாக்கல் சகல விதமான சமூக சந்திப்புக்களின் சாராம்சமாகும்.
கரீம்தீன் என்பவர் தனிநபர்கள் விதிகளையும், பழக்கவழக்கங்களையும், விழுமியங்கள் மற்றும் நடத்தைகளை அவர்கள் வாழும் சமூக ஒழுங்குகளினூடாக மரபுரிமையாக பெற்றுக்கொள்ளும் செயன்முறையை சமூகவியலாளர்கள் சமூகமயமாக்கல் என்று குறிப்பிடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கமைவாக ஒருவன் தான் கற்றுக் கொள்வதை சமூகத்தில் பிரதிபலிக்கும் போது அங்கு சமூகம் மாற்றமடைகின்றது.
உதாரணமாக இன்று திரைப்படங்களின் ஊடாக நேரடியாக மதுபாவனை, பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பன காண்பிக்கப்படும் போது அதனை பார்ப்பவர்கள் சமூகத்தில் அவ்வாறே பிரதிபலிக்கும் போது சமூகத்தின் நிலை மாற்றத்திற்கு உள்ளாகின்றது. ஒருவருக்கு நாம் எதை விதைக்கிறோமோ அந்த விதை தான் மரமாகின்றது. எனவே நாம் அடிப்படையில் விதைக்கும் போதே நல்லதை விதைத்தோமானால் நல்ல சமூகத்தை பெற முடியும்.
கல்வி வெறுமனே அறிவை மட்டும் புகட்டுவதில்லை. சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கு மாணவர்களை பயிற்றுவிக்கின்ற தளமாகவே பாடசாலைகள் காணப்படுகின்றன. பாடசாலையில் இருந்து சமூகத்திற்கு வெளி வருகின்ற ஒவ்வொரு மாணவனும் கல்வி சமூகமயமாக்கலினை முறையாக கற்ற ஆற்றல் உடையவனாகவே வெளி வருகின்றான். எனினும் அவனை இந்த சமூகம் தனது சுய இலாபத்துக்காகவும், சமூக ஒருங்கிணைப்புக்காகவும் மாற்றி அமைத்து விடுகிறது.
பாடசாலையில் கல்விச் சமூகமயமாக்கலின் ஊடாக கல்வி, பிறருக்கு உதவுதல், விட்டுக்கொடுப்பு, தலைமைத்துவப் பண்புகள், குழு மனப்பாங்குகள், ஒற்றுமை, பிரச்சினைகளை தீர்த்தல், சமூக சட்டத்தை மதித்து நடத்தல், சமூகத்தில் நற்பிரஜையாக திகழ்தல் போன்ற பண்புகளை கற்றுக் கொண்டவர்கள் பாடசாலையில் இருந்து சமூகத்திற்கு வெளிவரும்போது சமூகம் மாற்றீடாக நல்லதையும் விதைக்கிறது. கெட்டதையும் விதைக்கிறது.
நல்லவனை தீயவனாக மாற்றும் ஆயுதமும், தீயவனை நல்லவனாக மாற்றும் ஆயுதமும் சமூகமென்றால் மிகையாகாது.
குடும்பங்களிலும் பாடசாலைகளிலும் நிறைவேற்ற முடியாத பல விடயங்களை இன்று சமூகங்கள் நிறைவேற்றுகின்றன. சமூகத்துடன் இசைவாக்கம் அடைவதற்கான பின்னணியையும், சமூகமயமாதல் செயன்முறையினையும் கல்வி சமூகமயமாக்கல் கற்றுத் தருகின்றது. அதற்கமைவாக சமூகத்திற்கு கல்வி சமூகமயமாக்கலில் தனி ஒரு பங்கு காணப்படுகிறது.
நாம் பிறக்கும் போது நம் பெற்றோரை தெரிவு செய்து பிறக்கவில்லை.“மனிதனின் மனம் எதை நினைக்க முடிகிறதோ அதனால் அதை சாதிக்க முடியும்” என்ற கிளமென்ட் ஸ்டோன் என்பவரின் கூற்றுப்படி ,நாம் வாழும் சமூகத்தை நாம் தெரிவு செய்ய முடியாது. ஆனால் நம் வாழும் சமூகத்தை நாம் மாற்றியமைக்க முடியும். சமூகத்தின் மாற்றத்துக்கு கல்வி சமூகமயமாக்கல் இன்றியமையாது.
மாணிக்கவாசகர் பிரஷாந்திகா,
நான்காம் வருடம்,
கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி,
கல்வி மற்றும்
பிள்ளை நலத்துறை,
கலை கலாச்சார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.