கல்விச் சமூகமயமாக்கலும் ஆசிரியர்களும்
உலகில் காணப்படும் அனைத்து தொழில்களிலும் மேலான தெய்வீகத் தன்மை வாய்ந்த ஒரு தொழிலாக ஆசிரியர் தொழில் காணப்படுகின்றது. மற்றைய தொழில் துறையினரைக் காட்டிலும்; அதிகமான பொறுப்பும், முக்கியத்துவமும் வாய்ந்தவர்களாக இந்த ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
பெற்றோர்கள் குழந்தையை உலகிற்கு தருகின்றனர் ஆனால் ஒரு நல்ல ஆசான் அந்த உலகையே குழந்தைக்கு வழங்குபவர்களாக காணப்படுகின்றனர். நான் உயிருடன் இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கின்றேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனும் அலெக்ஸாண்டரின் கருத்தும் அதனையே பறைசாற்றுகின்றது.
ஒரு பிள்ளை பிறந்ததிலிருந்து ஐந்து அல்லது ஆறு வயது வரைக்கும் பெற்றோரின் வழிகாட்டலில் வளர்கின்றனர் அதற்கடுத்ததாக பாடசாலைக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரைக்கும் அப் பிள்ளையை வழிநடாத்தும் ஒரு நபராக இவ் ஆசிரியர் விளங்குகின்றனர். இங்கு பாடசாலைக் காலத்திலேயே பெரும்பாலும் இவர்களின் பங்கானது சிறப்பானதாக காணப்படுகின்றது.
இன்றைய நிலையில் பெற்றோர்களின் அன்பானது பெரும்பாலான பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை காரணம் இன்றைய நவீன உலகில் பெற்றோர்கள் தொழிலுக்கு முக்கியத்துவமளித்து ஓடி ஓடி உழைக்கின்றனர் அதனால் அவர்கள் பிள்ளைகளை கவனிப்பதும் அவர்கள் மீது அன்பும் காட்டுவதில்லை அதனால் பிள்ளைகள் அவர்களுக்கு அடுத்து அன்பினை செலுத்தும் ஆசிரியர்களின் மீது கவரப்படுகின்றனர்.
மாணவர்கள் பெரும்பாலான நேரத்தை பாடசாலையிலேயே செலவிடுகின்றனர். உயர் கல்வியை பொருத்த வரையில் இதன் தன்மை மிகக் குறைந்த பட்சமே காணக்கூடியதாக உள்ளது. ஒரு சிற்பி ஒரு வடிவில்லாத கல்லை செதுக்கி உருவம் கொடுக்கின்றானோ அதே போல் ஒவ்வொரு பிள்ளையையும் சிறந்த ஒழுக்கமுடைய அறிவுமிக்க பிள்ளையாக மாற்றும் ஒருவராக ஆசிரியர் காணப்படுகின்றார்.
உலகின் தொன்மையான வாண்மைகளுள் ஒன்றாக விளங்கும் ஆசிரியத்துவம், வரன்முறை நிலையிலும் வரன்முறைசாரா நிலையிலும் சமூக மயமாக்கற் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் துணை நின்று வந்துள்ளது.
ஆசிரியத்துவத்தின் தோற்றம் பட்டறிவைக் கையளிப்பதிலிருந்தும், சடங்குகளை மேற்கொண்டு ஆற்றுப்படுத்தலை மேற்கொள்வதிலிருந்தும், மாயவித்தைகளை ஆற்றுகை செய்வதிலிருந்தும் வளர்ச்சியடைந்ததாக அறிகை மானிடவியலிலே குறிப்பிடப்படுகின்றது. ஆசிரியத்துவத்தின் வளர்ச்சி சமூக வளர்ச்சியோடிணைந்த வகிபங்குகளை உள்ளடக்கியதாக எழுச்சி கொண்டது. அரசுகளின் தோற்றத்தோடு அதிகாரங்களை அறிவு பூர்வமாக நிலை நிறுத்தும் கரங்களாக ஆசிரியர் உருவாக்கம் பெற்றனர்.
தென்மையான கிரேக்க மரபில் ஆசிரியர்கள் தர்க்கம், இலக்கணம், கணிதவியல், சொல்லாடல் முதலாம் அறிவுப் புலங்கள் வாயிலாக அரச அதிகாரத்தை வலிமைப்படுத்தும் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இதன் ஒப்புமையைப் பண்டையத் தமிழகத்திலும் காணமுடியும்.
வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் சமூகமயமாற் செயற்பாடு ஆசிரியரிடம் கையளிக்கப்படுகின்றது. தாயின் கரங்களும், தந்தையின் கரங்களும் தழுவிய சிறார்கள் ஆசிரியரின் கரங்களுக்கு ஒப்படைக்கப்படுகின்றனர். பல்வேறு விதமான ஆற்றுகைகளை மேற்கொள்ளும் ஆசிரியர் குடும்பம் மேற்கொள்ளாதுவிடும் சமூகமயமாக்கற் செயற்பாட்டு இடைவெளிகளை நிறைவு செய்ய முயற்சிக்கின்றனர்.
சமகாலப் பாடசாலைகள் மனநிறைவுக்கு ஊற்றாக மட்டுமன்றி, மனமுறிவுக்கும் ஊற்றாக விளங்குவதால் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் வாண்மை நடவடிக்கைகள் முரண்பாடுகளையும் சிக்கல்களையும் உள்ளடக்கியிருத்தலை மனங்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான முரண்பாடுகளைத் தெளிவானதும் முற்போக்கானதுமான கருத்தியல் வலிமையுடன் கையாளும் ஆசிரியரே பொருத்தமான சமூக இயல்பை முன்னெடுப்பவராக அமைய முடியும். மேலும், பாடசாலைகளும் ஆசிரியர்களும் மத்தியதர வர்க்கத்தின் மனோபாவங்களையும், சமூகமயமாக்கலையும் பிரதிபலிக்கும் நிலையில் அடிமட்ட வகுப்பு மாணவர்கள் உளமோதல் நிலைகளுக்கு உள்ளாதல் நடப்பியல் நிலவரமாகவுள்ளது.
சமூகமயமாக்கலில் ஆசிரியரின் வகிபாகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் பொழுது “அறியப்படாத ஆசிரியர்” என்றதொடர் முக்கியத்துவம் பெறுகின்றது. அதாவது, சமூகச் செயற்பாடுகளிலே வெற்றியீட்டியவர்களது பின்புலத்தில் இயங்கிய அவர்களது ஆசிரியர்கள் அறியப்படாது அமிழ்ந்தி நிற்றல் உண்டு. ஆசிரியரிடத்துக் காணப்படும் புலமைவலு (Academic Stength) நேர்முகமாகவும், மறைமுகமாகவும், கருத்தேற்றமாகவும், வலுவூட்டலாகவும் மாணவரிடத்தே தொழிற்பட்டுக் கொண்டிருக்கும். இச்செயற்பாடு அறிகை நிலையில் மாணவரிடத்து, மேம்பாட்டை ஏற்படுத்துதல் மட்டுமன்றி சமூகத் தொழிற்பாட்டு நிலையிலும் மேம்பாடுகளை நோக்கி நகர்ந்து செல்வதற்குத் துணையாகவுள்ளது.
உளநலம் மிக்க சமூகமும், உள நலம் மிக்க தனி மனிதரும் வேறு பிரிக்க முடியாதவை. உள நலம் குன்றிய ஒரு சமூகத்திலே உளநல மேம்பாடு கொண்ட தனிநபர்களை உருவாக்கிக் கொள்ள முடியாது. சமூக உளநலத்தின் வழியே தனி நபர் மேம்பாட்டை நோக்கிச் செல்லும் செயற்பாட்டினை முன்னெடுக்கும் ஆசிரியத்துவப் பணி “சமூகத்தள” ஆசிரியத்துவப் பணியாகின்றது. முற்போக்கு ஆசிரியத்துவம் சமூகத்தளம் பற்றிய சிந்தனையை வலுவூட்டி வளர்த்து வருவதாகவே அமையும். இவ்வகை ஆசிரியத்துவமே சமூகப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கக் கூடிய மாணவரை உருவாக்கும் ஆசிரியத்துவமாக அமையும். ஆசிரியத்துவத்தின் சமூகப் பரிமாணம் வீழ்ச்சியடையும் பொழுது, சமூகப் பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கிய அந்நியப்படும் மாணவரின் உருவாக்கமே நிகழ்ந்து கொண்டிருக்கும்.
சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக்கூடிய மாணவர்களுக்கு அறிவுப்பலமும் நடத்தைப்பலமும் இருத்தல் வேண்டும். இவை இரண்டும் சமூகத்தில் ஆற்றலுடன் தொழிற்படுவதற்குரிய இயக்கவியல் (Dynamic) ஆற்றல்களையும், இயக்கவியற்பண்பு கொண்ட தலைமைத்துவத்திறன்களையும் வளர்த்தெடுப்பதற்குத் துணை செய்யும். இவற்றை உரிய முறையில்வளர்த்தெடுக்கும் ஆசிரியர் “அறிவாற்றுனர்” (Mentor) மட்டுமன்றி சமூக சேவை வழங்குநர் என்ற செயற்பாட்டையும் முன்னெடுக்கின்றார்.
ஆசிரியர் சமூக இயல்பின் குறியீட்டு வடிவினராக மட்டுமன்றி சமூகத்தின் எதிர்விசைகளுக்கு எதிர்விசை கொடுப்பவராகவும் இருக்கும் பொழுது “எதிர்ப்பின் எதிர்ப்பு” ஆக்க வளர்ச்சிக்குரிய முன்னோக்கிய பாய்ச்சலாக உருவெடுக்கின்றது.சமூகத்தை வளம்படுத்துவதற்கும் முன்னேற்றம் நோக்கி நகர்த்துவதற்குமுரிய ஆற்றல்களுள் ஒன்றாக “எழுதொடங்கல்”(Initiative) அமைகின்றது. மாணவர் பருவத்திலிருந்தே எழுதொடங்கல் ஆற்றல்களை வளர்ப்பதிலும், சமூகப் பயனுள்ள எழுதொடங்காற்றல்களுக்கு இட்டுச்செல்வதிலும் ஆசிரியரின் வகிபங்கு முக்கியத்துவம் பெறுதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஆக்கமலர்ச்சியும் எழுதொடங்காற்றலும் சமூக நோக்கில் ஒன்றிணைக்கப்படும் பொழுது பயனுள்ள விளைவுகளைச் சமூகத்தினாற் பெற்றுக்கொள்ள முடியும்.
கல்வியைச் சமூகத்தின் தழை நீக்கலுக்கு (Emancipation) உரியதாக மாற்றியமைக்கும் விசையைப் பிறப்பிக்கும் பொழுது ஆசிரியத்துவம் உன்னதங்களை நோக்கி மேலுயர்த்தப்படுகின்றது. இப்பணியை மேற்கொள்ளும் பொழுது ஆசிரியர் வினைப்படுவோராய் (Activist) மட்டுமன்றி புத்தாக்கம் செய்யும் சமூகப் பொறியியளாளர்களாகவும் வளர்ச்சி பெறுகின்றனர். ஆசிரியத்துவப் பணி அறிவுப் பாதுகாப்பையும் (Knowledeged Security)சமூகப் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்தலாகும். இந்த இரு பணிகளும் ஒன்றிணைக்கப்படும் பொழுதுதான் நிறைவுள்ள அல்லது சமநிலையுள்ள ஆசிரியத்துவம் உருவாக்கம் பெறுகின்றது. இந்தப்பணிகளை மேற்கொள்ளும் பொழுது உயிரியல் வழியான விளைவுகள் சமூக வழியான விளைவுகளாக நிலை மாற்றம் பெறுகின்றன.
மேலும், தனி வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்குமிடையேயுள்ள இடைவெளி சுருங்கி விடுகின்றது. அகப் பேச்சுக்கும் புறப்பேச்சுக்குமிடையேயுள்ள அகலம் குறுகிவிடுகின்றது.
ஆசிரியரின் சமூகப்பணிகள் பற்றிக் குறிப்பிடும்பொழுது, மாணவரை “மனச்சான்றுப்படுத்தல்” (Conscientization) முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. சமூக ஒடுக்கு முறைகள், மேலாதிக்க முறைகள், முரண்பாடுகள் முதலியவற்றை அறிகை நிலையிலும் உணர்ச்சி நிலையிலும் பகுத்தாராய்ந்து தமது மனச்சான்றுப்படுத்தும் உள்ளுணர்வுப் பதிவுகளை வலுப்படுத்தி கொள்ளும் பொழுது சமூகத்துக்குரிய செயலாற்றுகை வளமுள்ளவலுவும் பெற்றுக்கொள்ளகின்றது.
சமூகம் தொடர்பான போலி அறிதலைப்புக்களையும் (Themes) நடப்பியல் அறிதலைப்புக்களையும் பிரித்தறியும் ஆற்றல்கள் மாணவர்களிடத்தே வளர்த்தெடுக்கப்படும் பொழுது ஆசிரியத்துவத்தின் பணி சமூகப் பயனுள்ள பணியாக நிலைமாற்றம் பெறுகின்றது. ஆசிரியரும் மாணவரும் “கற்போர்” என்ற தளத்தில் ஒன்றிணையும் பொழுதும், ஒன்றிணைந்து கற்றலின் தரமேம்பாட்டை முன்னெடுத்துச் செம் பொழுதும் ஆசிரியரின் சமூகப்பங்களிப்பு வளமும் வலுவுகின்றது. சமூகம் தொடர்பான கருத்து வினைப்பாடுகள் (Discourse) ஆசிரியராலும் மாணவராலும் முன்னெடுக்கப்படும் பொழுது முன்னேற்றம் நோக்கிய சமூக அசைவுகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.
ஆசிரியர்களிடமிருந்து கூடுதலான சமூகப் பங்களிப்புக்களையும் விளைவுகளையும் சமூகம் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளது. கல்வியாலும், பாடசாலைகளாலும், ஆசிரியர்களாலும் சமூகப் பிரச்சினைகள் மற்றும் நடத்தைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும் என்ற அதீத எதிர்பார்ப்புகளும் முன்வைக்கப்படுகின்றன.
பாடசாலைகள் சமூக வரையறைகளுக்கு உட்பட்ட நிறுவனங்கள் என்பதையும், ஆசிரியர்கள் சமூகக் கட்டமைப்பைப் பிரதி பண்ணும் பொறிகளாகக் கட்டுமை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் மனங் கொள்ளல் வேண்டும்.“சமூகப் பொறியியலாளர்”களாக (Social Engineer) கருதும் உளப்பாங்கு மட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது.
ஆசிரியர் என்ற வகையில் கல்விச் சமூகவியலினைப் பயில்வதன் அவசியமும் பயன்களும் (சமூகவியலறிவு அவசியத்திற்கான காரணம்) கல்விச் சமூகவியல் பற்றிய அறிவு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்
மாணவர்கள் தனியாள் வேறுபாடுகளை நலன் அறிந்து வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் அந்த வேறுபாடுகளை மாணவர்களின் முன்னேற்றத்துக்குரிய விசையாகவும், சமூகத்துக்கு பயனுள்ள விசையாகவும் மாற்றியமைக்கும் பொழுது ஆசிரியப் பணி உச்சங்களை நோக்கி மேலெழுச்சி கொள்ளத் தொடங்குகின்றது. தொடர் தொழில் ஆற்றுபபடுத்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர் குறித்த மாணவரது தனித்துவங்களை அடியொற்றி எதிர்கால கல்விக்கும் எதிர்கால தொழிலுக்கும் உரிய செவ்விய ஆற்றுப்படுத்தற் செயலை முன்னெடுக்கும் பொழுது மாணவரும் உச்சப் பயன்பெறுகின்றனர். சமூகமும் உச்ச அளவிலான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுகின்றது.
ஆசிரியர் பாடசாலையில் செயற்பாடுகளை மேற்கொள்வதில் சமூகமயமாக்கல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றார். ஆசிரியர் மாணவர்களிடையே நடந்து கொள்ளும் விதம் மாணவருக்கு முன்னுதாரணமாக இருந்து மாணவர்களை ஒழுங்குபடுத்துவது உடன் அவர்கள் சக மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவது ஆசிரியரின் கடமையாகும். ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த மாணவரின் அறிவை அடிப்படையாகக் கொண்ட சில பொருள் பொதிந்த விளக்கங்களை உருவாக்கி தாம் கற்பிக்கும் பாடங்களிலும் மாணவரின் உளவியல் மற்றும் சமூகப் பணிகளிலும் விளக்கம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். செயலின் மூலம் மாணவர்களது சூழலை விளங்கிக் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
கற்பித்தல் மூலம் மனவெழுச்சிக்கான பயிற்சிகளும் கற்பதற்கான தூண்டுதல்களும் உண்டாவதால் எதிர்கால வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்யப்படுகின்றனர். வகுப்பறையிலேயே ஆசிரியர்கள் செயற்பாடுகள் பற்றிய கோட்பாடுகளை விளக்குதல் போதிய ஊக்கங்களை வழங்குதல். கல்வி செயல்பாடுகளை வாழ்க்கை அனுபவங்களுடன் இணைத்தல், மாணவர்களிடையே காணப்படும் தனியாள் வேறுபாடுகளை அறிதல் ஜனநாயக வழிமுறைகளை கற்பித்தல், மாணவர்களின் ஆக்கத் திறனை மேம்படுத்துதல் என்பவற்றின் வாயிலாகவும் சமூகமயமாக்கல் உதவலாம்.
அறிஞர்களால் சமூகவியல் நோக்கில் தீர்மானிக்கப்பட்ட கல்வியின் நோக்கங்கள் இன்னும் பெறுமதி மிக்கதாகக் கல்விக் கொள்கை வகுப்போரால் கருத்திற் கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக சிந்திக்குமிடத்து இளந்தலைமுறையினரை முறையாக சமூக மயமாக்குவதே கல்வியின் பிரதான பணி எனக்கூறலாம். அத்துடன் கல்வியின் மூலமே ஒரு சமூகம் வேண்டி நிற்கின்ற விழுமியங்கள் உடலியற் திறன்கள் அறிவுசார் திறன்கள் என்பவற்றை பெறுக்கொடுக்கவும் முடியும். இதனையே DELORS அறிக்கை பின்வருமாறு கூறுகிறது.
சமூக நிறுவனங்களின் பங்கு மற்றும் தனி மனிதர்களோடு அவற்றுக்குள்ள தொடர்புகளை தெரிந்துக் கொள்ளவதுடன் கல்வியின் உண்மையான இலக்குகள் தனியாள் மற்றும் சமூக சார்ந்த கல்வி இலக்குகளில் தங்கியுள்ளன என்பதை நாம் அறிவோம். தனியாள் ஒருவருடைய இருப்பானது அவர் சமூகத்தில் உள்ள பல்வேறு குழக்களிடையே காணப்படும் தொடர்புகளை உறவுகளை பற்றியறிவதில் கவனம் செலுத்தியுள்ளது.
கல்வி அடிப்படைத் தொழிற்பாடுகள் என்ற வகையில் இரண்டு விடயங்களை எடுத்துக் காட்டலாம். பிள்ளைகளின் ஆளுமையில் முழமையான விருத்தியை உருவாகுதல் சமூக பயன்பாட்டுள்ள உறுப்பினராய் பிள்ளை வளர துணையாதல்.இறுதியாக பண்பாட்டு சூழலானது தனியாள் மீது செலுத்தும் செல்வாக்கினை ஆராய்வதுடன் அச்சூழலை மாற்றியமைக்கும் வழிமுறையாகவும் அமைகின்றது. என்ற ரீதியில் கல்வி சமூகவியலானது தனியாள் ரீதியில் தொடர்பபடுகிறது எனலாம்.
சமூகத்தில் ஒரு நற்பிரஜையாக வாழ்வாங்கு வாழ்வதற்குறிய அறம், ஒழுக்கம் மற்றும் பொருத்தமான கீழ்ப்படிவுகளை பாடசாலையானது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளின் மூலமாக வழங்கி மாணவர்களினை நல்வழிப்படுத்துகின்றது. அத்துடன் பாடசாலைகளில் இன, மத பேதமின்றி நடத்தப்படும் நிகழ்வுகளினால் மாணவர்களிடத்தே எதிர்கால சமூகத்தில் எவ்வித பாகுபாடும் இன்றி ஒற்றுமையாக வாழ்வதற்கான அடித்தளம் இடப்படுகின்றது.
அவ்வாறே இங்கு மேற்கொள்ளப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகள், போட்டி நிகழ்ச்சிகள், கல்வித்திட்டங்கள் என்பன வாயிலாகவும் சகல அடிப்படை தேர்ச்சிகளையும் வழங்கி சிறந்த சமூக உறுப்பினராக மாணவர்களை மாற்றியமைக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. கல்வி நிலையங்கள் எவ்வழியோ சமூகமும் அவ்வழி என்பது நடப்பியலாகும். இங்கு சமூக இயல்புக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்தவும், இசைவு மிக்கவர்களாக உருவாக்கவும் தேவையான பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பபடுகின்றன. அவ்வகையில் சமூக உணர்வை வளர்த்தல், சமூக நடத்தைகளுடன் இசைவுபடுத்தல், சமூக கட்டுபாடுகளுக்கு கீழ்படியச் செய்தல், சமூக விழுமியங்களை புகட்டல், புதிய தொழிநுட்ப அறிவுக்கு இசைவுபட வைத்தல், சமூக தொடர்பாடலை வளமாக்கிக் கொள்ள உதவுதல் போன்றன அவற்றில் முக்கியமானவையாகும்.
சமூக உறவினை ‘கற்றல்’ என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரும் பணியினை பாடசாலை செய்வதுடன் என்றுமே முதல் தர கல்வி நிறுவனமாகவும் இது தொழிற்படுகின்றது. சமூகத்துடனான உறவை ஏற்படுத்தும் அடிப்படை அம்சம் தொடர்பாடல் ஆகும். வினைத்திறன் மிக்க தொடர்பாடலுக்கான அடித்தளத்தை உருவாக்குவதில் பாடசாலை முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தோடு பாடசாலைக்குரிய தனித்துவமிக்க ஆளுமையானது மாணவர்கள் மீதும் சமூகத்தின் மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்கினை செலுத்துவதோடு சமூகத்திற்கும் பாடசாலைக்குமான உறவினை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைகின்றது.
பாடசாலையுடன் சார்ந்த நபர்களின் முன்மாதிரியான சிறந்த வாழ்க்கையே எதிர்கால மாணவ சமூகத்தின் வாழ்வை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. எனவே பாடசாலையின் வெற்றியே சமூகத்தின் வெற்றி என்பதை மனதில் நிலைநிறுத்தி செயற்பட வேண்டும்.
சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கினை தெளிவாக்கி அதை மேலும் முக்கியமானதாக உயர்த்துதல் சமூக நிலையங்களில் கல்வி பயன்களை ஆராய்தல். ஆசிரிய மாணவர்;கள் தொடர்பின் சமூக விளைவுகளை உயர்த்தும் கற்றலை ஊக்குவிக்க இவற்றை பயன்படுத்தல். பாடசாலை அமைந்திருக்கும் சமுதாயத்தின் தேவைகளை உணர்தல் பள்ளிக்கும் பிறசமூக நிறுவனங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பினை உருவாக்கல். சமுதாயத்தில் இன்று காணப்படும் பல்வேறு போக்குகளை ஆராய்ந்து தனி மனிதர்களையும், பள்ளிகளையும் இவை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை தெளிவாக்கல் போன்றவையாகும். இவ்வாறு இதன் முக்கியத்துவத்தினை ஆராயலாம்
ஜயலக்சனா இரகுநாதன்
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கலை கலாசாரபீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
வந்தாறுமுலை.