கல்விச் சமூகமயமாயக்கல் முகவராக பாடசாலையின் பங்களிப்பு
சமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் புதிய உறுப்பினர்கள் சமூக நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள் குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டு ஒரு தனித்துவமான சுய உணர்வை அடைய உதவும் சமூக செயல்முறைகளைக் குறிக்கிறது. ஒரு குழந்தையை ஒரு சமூகத்தின் பண்பாட்டு வழிகளில் திறமையான சுய விழிப்புணர்வு, அறிவார்ந்த நபராக மாற்றும் செயல்முறையே சமூகமயமாக்கல் ஆகும்.
மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற அடிப்படையில் அவனால் ஒரு நாளும் தனித்து வாழ முடியாது. சமூகத்துடன் இரண்டறக் கலந்து பழகும் மனிதன் ஒவ்வொரு நொடியும் சமூக மயமாக்கத்திற்கு உட்பட்டுக் கொண்டே இருக்கின்றான். சமூக மயமாக்கம் என்பது பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு செயற்பாடு எனலாம். அந்த வகையில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் கல்வி சமூகமயமாக்கல் தொடர்பான கருத்துக்கள் தோற்றம் பெற்றுக் கொண்டது. கல்வி சமூகமயமாக்கலில் பாடசாலைகள் ஒரு மிக முக்கிய அங்கமாகும். இந்த வகையில் பாடசாலைகள் கல்வி சமூகமயமாக்கலில் பாரிய பங்களிப்பு செய்கின்றன.
ஒரு மாணவன் தன்னுடைய அறிவுவிருத்தி, ஆளுமைவிருத்தி என்பவற்றை விருத்தி செய்வதோடு எதிர்கால உலகின் கல்வி, சமூக, பொருளாதார, அரசியல் போன்ற விடயங்களுக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் மாணவர்களை எதிர்கால உலகிற்கு தயார்படுத்தும் ஒரு சமூக நிறுவனம் பாடசாலை ஆகும். “ஆயிரம் ஆலயங்கள் கட்டப்படுவதை விட ஒரு பாடசாலையினை கட்டுவது சால சிறந்துது” என்கிறார் மகாகவி பாரதியார். அதாவது ஒரு சமூகத்தில் ஆயிரம் ஆலயங்கள் கட்டுவதைக் காட்டிலும் ஒரு பாடசாலையினை கட்டுவதன் மூலமே அச்சமுதாயமானது சிறப்படையக் கூடும். என்பதே இதன் பொருளாகும் இதற்கமைய சமூகத்தின் எதிர்கால நிலையினைத் தீர்மானிக்கும் பாடசாலைகளின் இருப்பு சமூகத்தில் இன்றியமையாததாகும்.”
பாடசாலையும் சமூகமும் ஒன்றோடொன்று இணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படும் போதுதான் பாடசாலையும் சமூகமும் எதிர்பார்த்த பயனை உரியவாறு அடைய முடியும். பாடசாலையானது பரந்த சமூகத்தில் செயற்படுகின்ற உப தொகுதியொன்றாகும். அங்கு நடைபெறும் கருமங்கள் சமூகத்தை நேரடியாகப் பாதிக்கும். அதனால் பாடசாலைக்கும் பரந்த சமூகத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்பு நிலவுதல் அவசியமாகும்.
பாடசாலைகள் ஒரு சமூகத் தொகுதி என்ற வகையில் பாடசாலையும் சமூகமும் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டு காணப்படுகிறது. சமூகத்தில் காணப்படும் பல்வேறு நிறுவனங்களில் பாடசாலையும் ஒரு நிறுவனமே ஆகும். சமூகத்தின் உறுப்புக்களில் ஒன்றாக பாடசாலையும் அமைந்து விடுகின்றது. சமூகத்திலிருந்து வேறுபடுத்தி நோக்க முடியாத ஒன்றாக பாடசாலை காணப்படுகின்றது. சமூகத்தொகுதிக்கு மனிதர்கள் எந்தளவு அவசியமோ அந்தளவுக்கு சமூகம் இயங்குவதற்கு அங்கு சமூக நிறுவனங்கள் பல தேவைப்படுகின்றன. அவ்வாறு தேவைப்படும் நிறுவனங்களில் பாடசாலைகள் மிக முக்கியம் பெறுகின்றன.
பாடசாலை என்பது சமூக, கலாசாரச் சூழமைவில் இயங்குவது, சமூகத்தின் கல்விசார் தேவைகளை நிறைவு செய்ய உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். சமூகம் என்பது ஒரு பகிரப்படும் கலாசாரம் பண்பாட்டியல்புகளுடன் இணைந்து வாழும் ஒரு மக்கள் குழுவினரைக் குறிப்பது. இவ்விரு நிறுவனங்களும் தமது பரஸ்பர குறிக்கோள்களை அடைந்து கொள்ள தொடர்ந்து இணைந்து செயற்படுவதனால் சிறந்ததொரு சமூகமயமாக்கப்பட்ட சமூகத்தை உருவாக்க முடியும். சமூகத்திலிருந்தே மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்கின்றார்கள். பாடசாலையில் இருந்தே சமூகத்திற்கு நற்பிரஜைகள் உருவாகின்றனர். உதாரணமாக பாடசாலையில் இளமையில் கல்வி கற்று சிறப்பான ஒழுக்க பண்புகளை பின்பற்றி சட்டதிட்டங்களை மதித்து மாணவன் பாடசாலை என்ற நிறுவனத்திலிருந்து சமூகத்திற்கு வருகின்றான். இதன் மூலம் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு காணப்படுவதால் பாடசாலையினூடாக ஒரு சிறந்த கல்வி சமூகமயமாக்கம் இடம்பெறுகின்றது.
பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவன் அங்கு பின்பற்றப்படும் கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், நியதிகள், மரபுகள், கலை கலாசார அம்சங்கள் அனைத்தையும் சமூகத்தில் பிரயோகிக்கின்றான். சமூகத்தில் பிரயோகிக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பாடசாலை உறுதுணையாகவும், பக்கபலமாகவும் அமைகின்றது. அந்த வகையில் கல்வி சமூகமயமாக்கல் நிறுவனமாக பாடசாலை தொழிற்படுகிறது எனலாம்.
கல்வி சமூகமயமாக்கலில் பாடசாலை ஒன்றின் பங்களிப்பு தொடர்பாக நோக்குமிடத்து, சமூகத்தினால் பண்பாட்டை பேணும் வகையில் தலைமை நிலையமாக உருவாக்கப்பட்ட நிறுவனமே பாடசாலை ஆகும். அறிவு, திறன், மனப்பாங்கு, விழுமிய விருத்தி சிறந்த வாழ்க்கைக்குரித்தான பழக்க வழக்கங்களை விருத்தி செய்தல் போன்றன கல்வியினூடாக பாடசாலையினால் வழங்கல் மற்றும் கலாசார, பாரம்பரிய, பழக்கவழக்க விருத்தி மற்றும் தொழிலொன்றுக்கான முன்திறன் விருத்தியை வழங்கல். பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல் போன்றவற்றை வளர்த்தல். போன்ற செயற்பாடுகள் பாடசாலையினால் கல்விச் சமூகமயமாக்கலுக்காக மேற்கொள்ளப்படும் பங்களிப்புக்களாக காணப்படுகின்றது.
இலங்கையில் பாடசாலையும் சமூகமும் இணைந்து செயற்படுவதற்கான ஏற்;பாடுகள் தொடர்பாக நோக்கிமிடத்து, 1960 களில் “வேலை அனுபவம்” எனும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதாவது வேலைத்தளங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அது தொடர்பான அனுபவங்களை அவர்வகளுக்கு பெற்றுக் கொடுத்தல், 1977 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர் கல்லூரிகளில் பாட ஏற்ப்பாட்டில் “மக்கள் கல்வி” என்ற அம்சம் சேர்க்;கப்பட்டது. 1979ல் பெற்றோர் சாசனம் உருவாக்கப்பட்டது. 1984ல் பாடசாலை மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை உருவாக்குதல் போன்ற பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. மேற்குறிப்பிட்டசெயற்பாடுகளையெல்லாம் பாடசாலையில் நடைமுறைப்படுத்தவேண்டுமேயானால் அந்த பாடசாலை சமூகத்துடன் இணைந்து செயற்படுதல் அவசியமானதொன்றாகும்.
இவ்வாறான செயற்பாடுகளை கல்வியில் உட்புகுத்தி அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாடசாலையினூடாக சிறந்ததொரு கல்விச் சமூகமயமாக்கல் இடம்பெறும். பாடசாலையில் காணப்படக் கூடிய குழுமங்கள் தொடர்பாக நோக்குமிடத்து, மற்றும் சமய கலாசார ஒழுங்கமைப்புக்கள், சுகாதார ஒழுங்கமைப்புக்கள் பழைய மாணவர் அமைப்புக்கள் நலன்புரி அமைப்புக்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கலை இலக்கிய சங்கங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
பாடசாலைக்கும் சமூதாயத்துக்கும் இடையே தொடர்பை வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள். சமூதாயத்தினதும் பாடசாலையினதும் தேவைகளை வெவ்வேறானதாக இனங்கண்டு அத் தேவைகளை முன்னுரிமைப்படுத்தல் வேண்டும். மற்றும் நடைமுறைப்படுத்தக் கூடிய செயற்றிட்டங்களைத் தெரிவுசெய்தல். பாடசாலையை சமூதாயத்தை ஈர்க்கும் இடமாக மாற்றியமைத்தல். சமூதாயத்தினருக்கு அறிவு, ஆலோசனைகள், வழிகாட்டல்களை வழங்கல் போன்ற செயற்பாடுகளைக் கூறலாம்.
பாடசாலையில் சமூகமயமாக்கல் செயன்முறைகளின் குறைபாடுகள் காரணமாக தோன்றும் சமூகப் பிரச்சினைகள் தொர்பாக நோக்கும்போது, தற்கொலை முயற்சிகள். சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுதல். போதைக்கு அடிமையாதல் தொலைத் தொடர்பு சாதனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல். இனப்பிரச்சினையை ஏற்படுத்தல் போன்றன பாடசாலையினூடாக கல்விச் சமூகமயமாக்கல் இடம்பெறாத சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றது.
செ.லிவிகரன்,
கல்வியியல் சிறப்பு கற்கை மாணவன்,
கல்வி, பிள்ளைநலத் துறை,
கலை கலாசாரப்பீடம்,
கிழக்கு பல்கலைக்கழகம்.