கல்வி சமூகமயமாக்கலில் பால்நிலை சமத்துவம்.
ஒரு நாட்டினை சுமூகமான முறையிலும் அமைதியான முறையிலும் கொண்டு செல்ல வேண்டுமாயின் முதலில் நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அமைதியை சீர்குழைக்கும் காரணிகளை கண்டறிந்து அதனை தீர்த்து வைக்க வேண்டும். அதன் படி எமது நாட்டை பொறுத்தவரையில் இன்று பாலியல் வன்புணர்வு, வேலையில்லா பிரச்சினை, சமூக வலைத்தளங்களின் பாவனை போன்ற பல காரணிகள் முக்கிய காரணிகளாக விளங்குகின்றது. அவற்றுள் இன்று அண்மைக்காலமாக வலைத்தளங்களிலும் கருத்தாடல்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பேசப்பட்டுவரும் ஒரு முக்கியமான எண்ணக்கருவாக இந்த பால்நிலை சமத்துவம் காணப்படுகின்றது.இன்றைய நிலையில் இவ் எண்ணக்கரு சார்ந்த விடயங்கள் ஒரு சமூகத்திற்கு தேவைப்படுகின்றது என்றால் அதன் இருப்பில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும். எனவே பால்நிலை சமத்துவம் என்ற எண்ணக்கருவை தெளிவுப்படுத்தி அதன் ஊடாக சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இக் கட்டுரையின் நோக்கமாகவும் அமைகிறது.
- பனை மரத்தின் பயன்கள்
- நான் விரும்பும் பெரியார் திருவள்ளுவர் கட்டுரை
- சந்திரயான் 3
- கிட்னி செயலிழப்பு காரணம்
- செப்பேடுகள் என்றால் என்ன?
பால்நிலை எனும் எண்ணக்கருவை விளங்கிக் கொள்ள முதல் பால்நிலை என்பது குறித்து விளங்கிக் கொள்ள வேண்டும். இயற்கையின் பிறப்பில் அடிப்படையாக வருவது “பால்”; என்ற எண்ணக்கருவாகும். அதுவே சமூகமயமாக்கல் செயல்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற போது “பால்நிலை” எனப்படுகின்றது. பால் என்ற எண்ணக் கருவை எம்மால் மாற்ற முடியாது. ஆனால் பால்நிலை மாறும் தன்மை கொண்டது. உதாரணமாக ஒரு பெண் தாய்மை அடைவதை மாற்ற முடியாது. ஆனால் ஒரு ஆணால் ஏற்படுத்தக்கூடிய கனரக வாகனங்களை செலுத்தவும், விண்வெளிக்கு செல்லவும், நாடாளவும் ஒரு பெண்ணால் முடியும். எனவே பால்நிலை சமத்துவம் என்பது ஆணும் பெண்ணும் “பால்”;; என்னும் வேறுபாட்டுக்கு அப்பால் சமமானவர்கள் என்பதை குறிக்கின்றது. சமுதாயத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் சமமான உரிமைகளை வழங்குவது பாலின சமத்துவமாகும். எல்லா இடங்களிலும் சம வாய்ப்புகளை வழங்குவது எல்லா இடங்களிலும் சமமாக மதித்து நடக்கப்படுவது பால் ரீதியான சமத்துவம் எனப்படுகிறது. மேலும் பால்நிலை சமத்துவத்தைப் பற்றி யுனிசெப் “பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள,; சிறுவர்கள் ஆகிய சமமான உரிமைகள், வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்றுபோல் நடத்தப்பட வேண்டும்”; எனவும் கூறுகின்றது.
இன்றளவும் அதிகமான இடங்களில் ஒரே மாதிரியான வேலைகளை செய்யக்கூடிய ஆண்களுக்கு அதிக ஊதியமும் பெண்களுக்கு குறைவான ஊதியமும் வழங்கக்கூடிய நிலை தான் உள்ளது. இது கலையப்பட வேண்டும். ,நத நிலை மாற்றப்பட வேண்டும். சமமான வேலைக்கு சமனான ஊதியம் வழங்கப்படுவது அவசியமானதாகும். பெண்களையும் பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு அரசு பணத்திட்டங்களையும் நல்ல உதவிகளையும் வழங்குகின்றது. ஆனாலும் பெண்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
இவ்வாறு சமூகத்தில் நிலவும் பால்நிலை சமத்துவமின்மைக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றது. மக்களிடையே காணப்படும் கல்வி அறிவின்மையும் ஒரு காரணியாகும். அதாவது ஆண்களை விட பெண்களின் கல்வி நிலை குறைவாக காணப்படுகிறது. இதனால் பெண்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். அடுத்ததாக குழந்தை திருமணம் – குறிப்பாக பெண் குழந்தைகள் மிகவும் இள வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர். இது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஆபத்தானது மற்றும் அவர்களின் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றது.
அடுத்ததாக சமூகத் தீமைகள்- வரதட்சனை முறை, சாதி, கற்பழிப்பு, பெண்களுக்கு எதிர்மறையான வன்முறை போன்றனவும் பெண்களின் குறைந்த நிலைக்கு காரணமாகின்றன அடுத்ததாக ஆணாதிக்கம்- பெண்நிலைவாதிகள் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த போதிலும் கூட பாரம்பரியமாக எமது சமூகத்தில் ஆண் தலைமை என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. தந்தை, மூத்த சகோதரன், கணவன் போன்றோரின் ஆணைக்கு கீழ்படிந்து பெண்கள் இருக்கின்றனர். சாதாரணமாக ஒருவேலைக்கு விண்ணப்பிப்பதற்கான அனுமதி, நேர்முக பரிட்சையில் கலந்து கொள்ளல், உயர் பதவிகளுக்கு விண்ணப்பித்தல் என தொழில் தொடர்பான அனைத்துமே ஆண்களின் அனுமதியின் கீழே தங்கி உள்ளது. எனவே பெண்கள் தங்கள் முன்னேற்றத்தை குறித்து எவ்விதமாக சுயமான முடிவையும் எடுக்க முடியாத நிலையும் ஆண்களின் அனுமதியினை பெற வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.
மேலும் நேரம் போதாமையாலும் தமக்குரிய அடையாளத்தை உருவாக்கி கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். அதாவது குடும்ப சுமை, கணவன் பராமரிப்பு வேலைகள், சமையல் வேலை, வீட்டு வேலை, திருமண வீடு, மரண வீடு செல்லுதல், பிள்ளைகளின் கல்வி போன்ற பல வேலைகளில் ஈடுபடுவதால் உயர் பதவிகளுக்கு விண்ணப்பித்தல், பயிற்சிக்கு தயாராதல் போன்ற செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபட நேரம் போதாத நிலை காணப்படுகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் கூட ஆண்கள் பெண்களுக்கு இது போன்ற பணிகளில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்காத நிலையில் காணப்படுகின்றது. பெண்கள் சுதந்திரமாக தமக்கு பிடித்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காத நிலை காணப்படுகின்றது. ஆண்கள் பெண்களிடம் “இதெல்லாம் ஒன்றும் தேவையில்லை பேசாமல் இரு” என்று கூறி பெண்களை முடக்கி வைத்து தாங்கள் மட்டும் தங்கள் நிலையிலிருந்து முன்னேறி செல்வதற்கு வழிகளை தேடிக்கொண்டிருக்கும் நிலைகளை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு பெண்கள் தமது முன்னேற்றத்தை குறித்து அதிகம் பாதிப்புறும் அதே வேலை இது பால்நிலை சமத்துவமின்மையை எடுத்து காட்டுவதாக அமைகின்றது. அதுமட்டுமன்றி குடும்ப சுமையும் திருமணத்தின் பின்னரான வாழ்வில் மாற்றம் கலாச்சார காரணிகள் போன்றவையும் பால்நிலை சமத்துவமின்மையை ஏற்படுத்துவதில் தாக்கம் செலுத்தி வருகிறது.
எனவே இவ்வாறான பல்வேறு காரணிகள் பால்நிலை சமத்துவத்தை ஏற்படுத்த தடையாக இருப்பதோடு இக்காரணிகள் தான் இன்று சிறுமியர் முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகின்றமைக்கு பின்புலமாக அமைகின்றது. இதனை இன்றைய ஊடகங்களும் உலகுக்கு வெளிப்படுத்தி வருவதை அறியமுடிகின்றது. மிகக்கொடூரமான செயல்களில் ஈடுபடும் அளவுக்கு இன்றைய சமுதாயம் பிற்போக்கான சிந்தனையில் வாழ்ந்து வருகிறது. பெண் விடுதலை, பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. உதாரணமாக குழந்தை திருமண தடைச் சட்டம், திருமண சட்டம் பெண்களின் வயது 21 ஆக உயர்த்தப்பட்டமை, விதவைகள் மறுமண சட்டம், வரதட்சனை ஒழிப்பு சட்டம், பெண்கள் அநாகரிகமாக காட்டப்படுவதை தடை செய்யும் சட்டம், வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம், முதலான பல சட்டங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இவை எல்லாம் இருந்தும் பயனேதும் இல்லை. பாலியல் ஒடுக்கு முறைகள் நடந்த வண்ணமே தான் உள்ளது.
இவற்றையெல்லாம் தாண்டி இன்று பால்நிலை சமத்துவமின்மைக்கு காரணமாக மக்கள் சமூகத்தில் உள்ள மரபு வழி சிந்தனைகளும் உள்ளன. அதாவது பெண்கள் குறித்தும் அவர்களின் பிறப்பு குறித்தும் தாழ்வான சிந்தனை காணப்படுகிறது. பெண் பிள்ளைகள் என்றால் சத்தமாக சிரிக்க கூடாது, கண்டவாறு வெளியே தெரியக்கூடாது, இப்படித்தான் வளர வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று பல சட்டங்களை வகுத்துள்ளனர். “பெண் என்றால் பேயும் இறங்கும்”, “மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும்”, “பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி”, என பெண்களுக்கு கற்பனைகளை கட்டமைத்து சாஸ்திரங்களை கட்டமைத்து வாய் மூடி இருக்கும் படி தனது சமூகத்தை அடக்கி வைத்துள்ளது. ஆண்கள் என்றால் அவன் இப்படித்தான் “சேற்றைக் கண்ட இடத்தில் மிதித்து தண்ணீரை கண்ட இடத்தில் கழுவுவான்”; என இன்னும் சிலர் கூறி வருவதை காண்கின்றோம். சாதாரணமாக விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுக்கும் போது கூட பெண் பிள்ளைகளுக்கு சமையல் சமைக்கும் பாத்திரங்களும், பொம்மைகளும் வாங்கிக் கொடுத்துவிட்டு ஆண் பிள்ளைகள் என்றால், வாகனங்கள் வாங்கி கொடுக்கிறார்கள். இவ்வாறு சாதாரண விளையாட்டுப் பொருட்களில் கூட ஆண் பெண் வேறுபாட்டை உருவாக்கியுள்ளமை தான் இந்த பால்நிலை சமத்துவத்திற்கு அடித்தளமாக அமைகிறது எனலாம். பெண்களுக்காக ஒதுக்கப்படும் கட்டுப்பாடுகள் வரைமுறைகள் தான் இன்று பெண்களை பலவீனமானவர்களாக நோக்கவும் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்படாமைக்கும் ஆண்களால் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவதற்கும் முக்கிய காரணமாகும்.
அன்னை தெரேசா, கல்பனா சாவ்லா, சிறீமாவோ பண்டாரநாயக்க என வரலாற்றில் சாதனை படைத்த பெண்களை குறித்து பேசும் நமது சமூகத்தில் தான் பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. “காதல் ஒருவனை கைப்பிடித்தே அவன் காரியங்கள்; யாவிலும் கைகொடுத்து” என பெண் விடுதலை கும்மியை பாரதி அன்று பாடினார், இல்லை என்று கூறவில்லை. அன்றைய சமூகநிலையில் பெண்கள் இருந்தமைக்கும் இன்றைய நிலைக்கும் இடையில் பாரிய இடைவெளி இருக்கும் அதே நேரம் முன்னேற்றமும் இருக்கிறது தான். ஆனால் பால் நிலை சமத்துவம் இல்லை. இதுவே சமூகத்தில் வீழ்ச்சிக்குரிய காரணியாகவும் அமைகின்றது.
எனவே ஒரு சமூகம் சுபீட்சமான பயணத்தை நோக்கி செல்ல சமூக மாற்றம் அவசியமாவதுடன் இச்சமூக மாற்றத்தை சமூகத்துடனே இருக்கும் பால்நிலை சமத்துவத்தின் போக்கு மாற வேண்டும். எனவே பாலின சமத்துவம் சமுதாயத்தின் ஒரு சாபக்கேடு. எனவே நாடு முன்னேற பால்நிலை சமத்துவமின்மையை நாம் சமூகத்திலிருந்து அகற்ற முயற்சிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் போதுதான் ஒரு நாடு முன்னேற முடியும். வளமிகுந்த ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்புவதில் பெண்களின் பங்கு அளப்பரியது. அவர்கள் முடிவெடுத்தல், பொருளாதாரத்தை கையாளுதல், அதிகாரத்தில் பங்கு கொள்ள வைத்தல் போன்றவற்றில் மூலம் ஒரு சமுதாயத்தை முன்னேற்ற முடியும்.
அதுமட்டுமன்றி குடும்பத்தில் பெற்றோர்கள் பெரியோர்களினூடாக சிறுவயதிலிருந்து பிள்ளைகளுக்கு ஆண்- பெண் என்னும் வேறுபாட்டை ஏற்படுத்தி உள ரீதியாக பிளவுபடுத்தாது, பால் வேறுபாட்டிற்கு அப்பால் பெண்பிள்ளைகளை தைரியமாக சிந்திக்க வைப்பதற்கும் சமூகத்தில் எதனையும் எதிர்கொள்வதற்கான வழிவகைகளையும் பெரியோர்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்க சமூகத்திலுள்ளவர்கள் முன்வர வேண்டும். இளையோர்களின் சிந்தனை மாறவேண்டும் என்றால் முதற்கண் அவர்களை உருவாக்கும் இல்லம், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பழமையில் ஊரிய முதியவர்கள் அவர்களின் வழித்தோன்றல்கள், ஒழுக்கத்திற்கு இலக்கணம் கற்பித்து மரபின் பிடியில் சிக்குண்டு நாளைய தலைவர்களையும் அதன்பால் கொண்டு சென்று பள்ளத்தில் தள்ளும் பலம் பெருச்சாலிகளுக்கே முதற்கண் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.
அடுத்து பாடசாலை மட்டத்தில் பால்நிலை, பால்நிலை சமத்துவம் ஆகிய எண்ணக்கரு சார்ந்த உயரிய சிந்தனைகளை பரீட்சைக்குரிய பாடமாக மாற்றாது எவ்வாறு ஒவ்வொரு பாடசாலையிலும் உடற்பயிற்சி கட்டாயமாக பின்பற்றப்படுகின்றதோ அதேபோன்று செயல்முறை சார்ந்த விழிப்பூட்டலாக பால்நிலை சமத்துவம் கட்டாய பாடமாக்கப்படல் வேண்டும். இவை தொடர்பான கருத்தரங்குகளை செயன்முறையினூடாக மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் சிறந்த சிந்தனைகளை உருவாக்கி ஊக்குவிக்க முடியும். இவைதவிர அரசாங்கம் பால்நிலை சமத்துவம் தொடர்பான விழிப்பூட்டல்களை ஒரு சட்டமாகவும் கட்டாயத்திற்குரிய ஒன்றாகவும் மாhற்ற வேண்டும். அரச தனியார் நிறுவனங்களின் கல்விகற்ற புத்திஜுவிகள் இளையோர் மத்தியில் ஏற்படுத்தும் விழிப்புணர்வே எதிர்காலத்தில் சுபீட்சமான எதிர்காலத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.
எனவே இவற்றை தொகுத்து நோக்கும்போது இன்றைய சமூகத்தில் அதிகம் பேசப்படும் பிரச்சினைகளில் ஒன்றான பால்நிலை சமத்துவமின்மையானது தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நாட்டின் சுபீட்சமான வளர்ச்சிக்கும் அமைதிக்கும் இது இன்றியமையாத ஒன்றாக இருப்பதோடு அதனில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ,ளைய தலைமுறையினருக்கே பாரிய பொறுப்பும் சவாலும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. இளையோர்கள் மூலம் ஒரு சமூகம் விடிவைத் தேடுகின்றது என்றால் முதலில் இவர்களை தாக்கி கொண்டிருக்கும் பால்நிலை சமத்துவமற்ற போக்கு மாற வேண்டும். இதற்கு சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமாகின்றது. சமூக பங்களிப்பு எனும்போது சமூக நிறுவனங்களான குடும்பம், பாடசாலை, அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன. இவற்றின் மூலமே இளையோர்களுக்கு நல்ல சிந்தனையை ஏற்படுத்தி சமூக மாற்றத்தை கொண்டுவர முடியும். எனவே பால்நிலை சமத்துவத்திற்கான பாதையை இளையோர்களிடையே திறக்கும்போது ஒரு சமூகம் சிறந்து விளங்க முடியும் என்பதோடு சுபீட்சமாக எதிர்கால பயணத்தை நோக்கியும் நகர முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஜோன்சன் மரியசந்துன்
நான்காம் வருட சிறப்புக்கற்கை மாணவி
கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை
கலை கலாசாரப்பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
வந்தாறுமூலை.