🥀 காத்திருந்து கலைந்தது ஓர் ஓவியம் தொடர்கதை – Episode 01

கதைகள்

காத்திருந்து கலைந்தது ஓர் ஓவியம்

Episode 01


தனது விளையாட்டுப் பொருட்களை அறை எங்கும் கலைத்து விட்டு விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயதான சிறுமி சனாவிற்கு சட்டென்று தாயின் எண்ணம் வந்ததும் கண்களை கசக்கிக் கொண்டு தொலைபேசியில் தோழிகளுடன் க்ரூப் சாட் செய்து கொண்டிருந்த தனது தாயின் முந்தானையைப் பிடித்து ” என்னோடு சேர்ந்து விளையாட வாங்கம்மா என்னை தனியா விளையாட விட்டுடு எப்பவும் தொலைபேசியோடுதான் இருக்குறிங்க எனக்கு கதை சொல்லுங்க” என அம்மாவின் கையைப்பிடித்து மழலை மொழிகளால் பேசினாள். “அம்மாவின் தோழியோட பேசுறன் இரு மகள் பேசி முடிந்ததும் இருவரும் விளையாடுவோம்” என மகளிடம் கூறினாள். “சரி அம்மா” என கூறிவிட்டு தனது விளையாட்டு பொம்மையுடன் சனா விளையாடிக் கொண்டிருந்தாள். நீண்ட நேரமாகியும் அம்மா அவளுடன் விளையாட வராததால் மீண்டும் தாயை நோக்கிச் சென்று “அம்மா… அப்பாவை நான் இப்போதே பார்க்க வேண்டும் ” என்று அடம்பிடித்து அழுதாள். தொலைபேசியில் தோழியுடன் பேசியதை நிறுத்தி விட்டு மகள் சனாவின் கண்ணத்தில் வழிந்த கண்ணீரை இருகைகளாலும் துடைத்துக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு் ” அப்பா வேலையாக இருப்பார் வேலை முடித்து வந்ததும் பேசலாம்” என சனாவை சமாதானப்படுத்தி விட்டு தன் இரு கைகளால் அவளை தூக்கிக்கொண்டு தன் மடியில் உறங்க வைத்தாள்.

அப்பாவை பார்க்க வேண்டும் என்ற சிறுமியின் ஆவல் அவள் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது. “அம்மா… அப்பா எப்போது வருவார் ? பக்கத்து வீட்டுல இருக்குற என் ப்ரெண்டு அவ அப்பாவோடு எவ்ளோ சந்தோசமா விளையாடுறா நான் எப்போ அம்மா அப்பாவோட விளையாடுற அவ அப்பா எல்லாம் வாங்கி கொடுக்கார் எனக்கு அப்பா ஏன் வாங்கி தாரதில்ல என் அப்பாவோடு நான் விளையாடனும் என தேம்பி அழுதாள்”. ” அப்பா சீக்கிரமா வந்திடுவார் என் செல்லம் என் சமத்துப் பொண்ணுலா நீ தூங்கு அப்பாக்கிட்ட நான் இந்த செல்லக்குட்டிய சீக்கிரமாவே பார்க்க வரச் சொல்ல சொல்லுறேன்” என அவளை சமாதானப்படுத்தி உறங்க வைத்தாள். பின் சனாவின் திறந்திருந்த இமைகளுக்குள் தூக்கம் உள் நுழைந்து அவளை தூங்க வைத்தது.

நள்ளிரவு ஒரு மணியளவில் சனாவின் இரு கண்களும் பூக்கள் மலர்வதைப் போன்று மெதுவாக விழித்துக் கொண்டது. போர்வையை விலக்கிக் கொண்டு தந்தையின் புகைப்படம் இருக்கும் பக்கம் தன் இரு கால்களையும் நகர்த்தினாள். புகைப்படத்தை தடவியபடி “அப்பா எப்ப வருவிங்க? எனக்கு உங்களோட கதைக்கனும், விளையாடனும் என் ப்ரென்ட்ஸ்கிட்ட அறிமுகப்படுத்தனும் சீக்கிரம் வந்துடுங்க” என அப்பாவின் புகைப்படத்தை முத்தமிட்டு தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டு படுக்கை விரிப்பினுள் நுழைந்து உறங்கிக் கொண்டாள்.

கணவரின் அழைப்பை எதிர்பார்த்திருந்த சனாவின் தாய் அழைப்பு தாமதமானதால் அவர் வேலை விட்டு வந்ததும் அழைப்பார் என தொலைபேசியை பக்கத்தில் இருந்த மேசையில் வைத்து விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

காலை நேரம் சூரியன் கண்விழிக்கும் முன் சனாவின் கண்கள் விழித்துக் கொண்டது. கதவைத் திறந்து வெளியே சென்ற சனா அங்கு தன் போன்ற சிறுவர்கள் தனது அப்பாவின் கைபிடித்து நடப்பதையும் செல்லமாக விளையாடிக் கொண்டிருப்பதையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

வீதி எங்கும் ஆட்கள் நடமாடிக் கொண்டிருக்க வீதியில் ஏதோ வாகனம் ஒன்று விரைந்து வரும் சத்தம் சனாவின் காதை திசை திருப்பியது. யார் வாகனத்தில் வந்திருப்பாங்க என கண்களை இமைமூடாது உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். வாகனத்தில் இறங்கியவரைக் கண்டதும் பெரும் ஆச்சரியமடைந்தாள்.

சனாவின் தந்தைதான் அது. உடனே அம்மாவிடம் “அப்பா வந்திருக்கிறார் “என கூறிக் கொண்டே அப்பாவை நோக்கி ஓடினாள். அப்பாவின் அருகே “சென்று ஜ லவ் யூ பா உங்கள ரொம்ப மிஸ் பண்ணினேன்” என கூறிக் கொண்டு அப்பாவை தழுவ அருகே சென்றதும் அப்பா சனாவை விட்டு சற்று தள்ளிப் போனார். வாசற்படியில் அப்பாவை கட்டியணைக்க ஓடி வந்த சனா பெரும் ஏமாற்றத்தை சந்தித்தாள்.

தனது மகளைக் கண்ட ஆனந்தத்தை ஒருபுறம் விலக்கி விட்டு “சனாவா இது வளர்ந்துட்டு புள்ள” என மனைவியைப் பார்த்து கூறிவிட்டு உடனே வீட்டிற்கள் நுழைந்தார் . அப்பா ஏன் என்னை விட்டு தள்ளி போனார் என மலர்ந்திருந்த அவளின் பிஞ்சு இதயம் வாடிக் கொண்டு கண்ணீரை கண்களில் பிரசவித்தது. ஏமாற்றம் தாங்காத சனா வீட்டின் பின் புறம் சென்று விம்மி அழுதாள். சனாவின் தாய்க்கு எதுவும் புரியவில்லை.ஏன் இப்படி செய்றார் என யோசித்துக் கொண்டு அவர் பின்னாள் சென்றாள். முகங்களைக் கழுவிக் கொண்டு உடைகளையும் மாற்றி விட்டு தந்தை சனாவைத் தேடி ஓடி வந்து மகளே என அவளை தூக்கி அணைத்துக் கொண்டு தன் முத்தங்களை சனாவின் பிஞ்சுக் கண்ணத்தில் பதித்துக் கொண்டார் . ” நான் வெளிநாடு இருந்து வந்தேன் கொரோனா காலம் கைகளை கழுவாமல் உடனே உன்னை தொட்டுவிட கூடாது ஏதாச்சும் கிருமிகள் உன்னை ஒட்டிக் கொள்ளாமல் இருக்கத்தான் அப்பா அவசர அவசரமா கைகளைக் கழுவி உன்னை தூக்க ஓடி வந்தேன்” என பதிலளித்து தன் மகளை ஆழ்ந்த சந்தோத்தில் பயணிக்க விட்டார்.

மகளுக்காக வாங்கிவந்த அத்தனை பொருட்களையும் , இனிப்புப் பண்டங்களையும் மகளிடம் ஒப்படைத்தார். பொருட்களை கவனம் கொள்ளாது தந்தையின் அன்பையே முக்கியமாகக் கருதியவள் தந்தையுடனே தன் அத்தனை ஆசைகளையும் மழலைப் பேச்சுக்களால் அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

தனது பக்கத்திலுள்ள தோழிகளிடம் சென்று ” அப்பா வந்து விட்டார் எனது அப்பா நிறைய சாமான் வாங்கி வந்திருக்கார்” என தன் சந்தோசங்களை பகிர்ந்து காெண்டாள்.

சனாவின் தாய் சாப்பாடு சமைத்து முடித்து விட்டு ” இருவரும் சாப்பிட வாங்க” என அழைத்தாள். இருவரும் சாப்பாடு மேசையில் அமர்ந்தனர். தனது கையால் மகளுக்கு உணவை ஊட்டி விட சனா தந்தைக்கு உணவை ஊட்டி விட இப்படி அப்பா மகள் பாசம் தொடர்ந்தது. பின்னர் சனாவை வெளியே அழைத்துக் கொண்டு பல இடங்களை சுற்றிக் காட்டினார். தனது தந்தையின் கைபிடித்து நடக்க தவமிருந்த சனாவின் ஆசை நிறைவேறியது. எப்போதும் தொலைபேசியில் சமூக வலைத்தளங்களிலே பொழுதைப் போக்கிய சனாவின் தாய் சனாவுடனே பொழுதைக் கழிப்பதை எண்ணி இன்புற்றாள். பாடசாலைக்கு சனா தந்தை கைபிடித்தே பல பேச்சுக்களைப் பேசிக் கொண்டு செல்வாள். இப்போது சனா ஓரு சுதந்திரப்பறவையாய் தந்தையுடன் உலகை வலம் வந்தாள். ஆரம்பத்தில் இருவரும் தொலைபேசியுடனே பொழுதைக் கழித்ததை வெறுத்த சனா இப்போது இருவரும் தன்னோடு பொழுதைக் கழிப்பதை எண்ணி இன்புற்றாள்.

“இதுபோல் எப்பவும் என்னோடு இருக்கனும்” என இருவரிடமும் கண்டிப்புடன் கூறினாள். வீட்டின் கூறை வழியே பனித்துளிபோல் மழைத்துளி அவள் கண்களில் விழுந்து சனாவின் கனவிலும் சந்தோசத்தை நிலைக்க விடாமல் இடை நிறுத்தியது. ஆம் அவள் கண்டது கனவு. கண்களை விழித்துக் கொண்ட சனா அத்தனையும் கனவா என நினைத்து ஏமாற்றமடைந்தாள். “இந்தக் கனவு நிஜமாகக்கூடாதா ” என ஏங்கினாள்.

கனவில் தனது தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை தாயிடம் சொல்ல அருகில் பார்த்தாள் . தாய் அருகில் இல்லை. படுக்கையிலிருந்து எழும்பி முகங்களை கழுவிக் கொண்டு தாயிடம் சென்று “அம்மா நான் இரவு கனவு கண்டேன் அப்பா என்னோட மகிழ்ச்சியாக இருந்தார் என்னோட அதிக நேரம் செலவு செய்தார். அப்பா கைபிடித்து உலகத்தையே சுற்றி வந்தமாதரி இருந்திச்சி ரொம்ப சந்தோசமா இருந்தேன்” என தாயிடம் கூறினாள். தாய் சாதாரணமாக “அப்படியா?” என கேட்டு விட்டு தனது வேறு வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.

சனாவின் தாயின் தொலைபேசி சினுங்கியது. தொலைபேசியை ஆன்சர் பண்ணியவள்

” யார் நீங்கள்? புதிய நம்பரில் அழைத்திருக்கிங்க “என வினவ

“நான் தான் என சனாவின் அப்பா பதில் கூறினார். நாளை நான் நாட்டிற்கு வருகிறேன். திடீரென நாடு போக சொல்லிட்டாங்க எல்லாம் வந்து பேசுகிறேன் . பிள்ளையிடம் கதைக்க வேண்டும் செல்போனை கொடுங்க ” என கூறி தன் மகளிடம் சனா “அப்பா நாளை வீட்டிற்கு வருகிறேன்.” என தகவலை குழந்தையிடம் சொல்லிவிட்டு போனை கட் பண்ணினார்.

தான் கண்ட கனவு நிஜமாகப் போவதை எண்ணி தடதடவென நிலத்தை மிதித்தபடி அக்கம் பக்கம் எல்லோரிடமும் சொல்லித்திறிந்தாள் சனா. இராப்பொழுதாகிவிட்டது. விடிந்தால் தந்தையை சந்தித்திடுவேன் என்ற சந்தோசத்தில் துள்ளிக்குதித்தாள்.

“அப்பா நாளை வந்தால் நேர காலத்தோடு எழும்ப வேண்டும் தூங்குங்க” என சுவர்மூலைக்குள் மினுங்கிக் கொண்டிருந்த அரிக்கன் லாம்பை அணைத்துவிட்டு தூங்கினாள் அம்மா. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சனாவை அப்பா வந்து கொண்டிருக்கிறார் என சொல்லுவது போல் சேவல்கள் ஒன்று சேர்ந்து கூவி தூக்கத்தை கலைத்து அவளை துயில் எழுப்பியது. மிக்க ஆர்வத்தோடு எழும்பி குளித்து விட்டு புதிய ஆடைகளை அணிந்து வாசலில் விழி நோக்கி தந்தையின் வருகைக்காய் காத்திருந்தாள்.

தாய் சனாவை நோக்கி ” காலைல சாப்பிடாம அப்பாவ பார்த்திருக்காம சாப்பிடு அப்பா வந்திடுவார் ” என தட்டில் சாப்பாட்டை வைத்துக் கொண்டு சென்றாள்.

“இல்லை எனக்கு வேண்டாம் அப்பாவுடன் சேர்ந்து சாப்பிடுகிறேன்.” என அடம்பிடித்தவளை ஒருமாதரியாக சமாதானம் செய்து இரு வாய் சாப்பிட வைத்து விட்டாள். தண்ணீரை குடி சனா என தாய் சொல்ல மடக் மடக்கென்று குடித்து விட்டு வீட்டின் வாசல் வழியே கால் கடுக்க காத்திருந்த சிறுமியை குளிர்ந்த காற்று சில்லென்று அவள் கண்ணத்தைக் கிள்ளிச் சென்றது.

வீதிகளில் ஜீப் ஒன்றில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி ஓர் அறிவிப்பை கூறிச் சென்றது. வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் பதினான்கு நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் உறவுகள் பதினான்கு நாளின் பின்னர் தான் அவர்களை சந்திக்க வேண்டுமென்று. தந்தை நாடு வந்து விட்டார் பதினான்கு நாள் கழித்துத்தான் வீடு வருவார் உள்ளே வா சனா என அழைத்தாள் தாய். தந்தைக்காக அலங்கரித்த அலங்காரங்களை அலங்கோலமாக்கி அழுதாள். அவளின் சின்ன சின்ன கனவுகள் ரோஜா இதழ்கள் ஒவ்வொன்றாய் உதிர்வது போல் விழுந்தது. இப்படியே பதினான்கு நாள் கழிந்து விட்டது. எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தவள் எதிர்பார்ப்பதை நிறுத்திக் கொண்ட தருணம் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. யாரது என கதவைத்திறந்தாள் சனாவின் தாய் முன்னிலையில் தன் கணவர் நிற்பதை கண்டு சந்தோசப்பட்டு

“உள்ளே வாங்க உங்கள எதிர்பார்த்து தூக்கமில்லாம நம்மட பிள்ள காத்துக் கொண்டிருந்தா. நீங்களே போய் எழுப்புங்க சந்தோசப்படுவா ” என சொன்னாள்.உடனே சனாவின் தந்தை சனா தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்று அவளை எழுப்பினார். சனாவின் உடல் அதிக சூட்டை வெளிப்படுத்தியது. எழும்ப முடியாமல் ” அப்பா அப்பா” என உளரிக் கொண்டிருந்தாள்.சனாவின் தந்தையின் இரு கண்களும் கண்ணீர் மழ்க அழுதார். உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்.

“எனது குழந்தைக்கு என்ன ஆச்சு டொக்டர் எப்படியாச்சும் என் குழந்தைய குணப்படுத்திருங்க” என கதறினார். வைத்தியர் குழந்தைக்கு “பல நாள் காய்ச்சல் இருந்திருக்கு யாருமே கண்டுக்காம விட்டிருக்கிங்க. ஆபத்தான இறுதிக்கட்டத்துல கொண்டு வந்திருக்கிங்க குழந்தை பிழைப்பது இறைவன் கையில்தான் இருக்கு பிரார்த்திங்க ” என சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

மனைவியை நோக்கியபடி “குழந்தைய கவனிக்காம அப்டி என்ன பண்ணின உனக்கு போன்தான் முக்கியம் போனை கையில் எடுத்தா குழந்தைய கவனிக்கவே மாட்டல்ல சமூக வலைத்தளங்கள்ல அடிக்கடி ஆரோக்கியப் பதிவெல்லாம் போட்ட உனக்கு உன்னோட குழந்தைய கவனிக்க நேரமில்லாம போய்ட்டா உனக்கு லைக் கொமான்ட் மட்டும் போதும் அந்த லைக் கொமாண்ட் இப்போ குழந்தைய காப்பாத்திடுமா குழந்தை இப்படி ஆனதுக்கு காரணம் நீ வீணா தொலைபேசில கவனம் செலுத்தி குழந்தைய கவணிக்காம விட்டதுதான்” என கண்டபடி மனைவியை திட்டினார்.

“என்ன மன்னிச்சிடுங்க சமூக வலைத்தளத்துல நான் அடிமையானதுல எனக்கு குழந்தைய சரியா கவனிக்கமுடியாம போய்ட்டு சாப்பாட்ட டைம்கு குடுத்துட்டு நான் போன்லயே காலத்த கழிச்சுட்டன் எல்லாம் என்னோட அஜாக்கிரதைதான் என்ன மன்னிச்சிடுங்க” என தலையைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

சனாவின் தந்தை வைத்தியசாலையை விட்டு நகர்ந்து வீடு வந்து தனது குழந்தைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டார். சனாவின் தாய் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன்னை திருத்திக் கொண்டாள். வேலைகள் முடித்து கிடைக்கும் நேரமெல்லாம் தொலைபேசி பாவிப்பதை விட்டு நேரம் கிடைக்கும் போது மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.

சனாவின் அப்பா பிரார்த்தனையை முடித்து விட்டு சோபாவில் உட்கார்ந்து தனது பிள்ளையை எண்ணி அழுதார். அப்போது சனா ஒரு நாள் பேசிய விடயம் அவர் நினைவலைகளில் தோன்றியது.

“அப்பா நீங்கள் என்னோட பெரிதாக கதைப்பதில்லை. வெளிநாட்டில் இருக்கும் அனைவரும் உறவுகளோடு தொலைபேசியில் பேசுறாங்க நீங்க வெளிநாடு போனா என்னோடு தினமும் பேசுவிங்களா? உங்களோட பேச தினமும் எதிர்பார்ப்பேன். அப்பா நான் ஒன்று கேட்கவா” என வினா எழுப்பினாள் சனா. “என்ன கேளு” என தொலைபேசியில் கவனத்தை செலுத்தியவாறே கூறினார். “உங்களிடம் தொலைபேசி இருக்கு நானும் இருக்கேன் தொலைபேசியோடு பாசம் அதிகமா என்னோடு பாசம் அதிகமா?” எனக் கேட்டாள் பதில் சொல்ல முடியாமல் தொலைபேசியை அருகே வைத்து விட்டு மகளின் கையைப் பிடித்து தன் மடியில் அமர்த்தி

“எனக்கு நீதான்டா முக்கியம் உன்னோடதான் பாசம் அதிகம்” என பதிலளித்தார்.

“இல்லை அப்பா உங்களுக்கு தொலைபேசியையத்தான் பிடிக்கும். என்னோடு உறவாடுவதைவிட தொலைபேசியோடுதான் அதிகம் உறையாடுவிங்க விலை கொடுத்து வாங்கி அதை பத்திரமா பாதுகாக்கிங்க எங்க போனாலும் கூடவே கொண்டு போறிங்க. ஆனா என்னோட நீங்க அப்படி இல்ல தொலைபேசிய ஒரு நாள் கூட தொடாம இருக்கமாட்டிங்க உங்க குழந்தைமாதரி கைலயே வச்சிருப்பிங்க ஏன் அப்பா தொலைபேசி என்னவிட அதிகமா உங்களுக்கு பாசம் தருதா?” என கேள்விகளை தொடுத்தாள்.

சனாவின் தந்தைக்கோ பதில் சொல்ல முடியாமல் திகைத்தார். கண்கலங்கியது.

“இனிமே அப்படியெல்லாம் செய்யமாட்டன் என் தங்கத்தோடதான் என் பொழுதுகளை கழிப்பேன்” என சத்தியம் செய்துவிட்டு சற்று நேரம் சனாவுடன் விளையாடினார். தந்தையின் வார்த்தை சனாவை மேலும் மகிழ்ச்சிப்படுத்தியது.

“இந்தமாதரி எப்பவும் என்னோடு இருக்கனும்பா ஜ லவ் யூ பா” என தனது அன்பு முத்தத்தை பொழிந்தாள். இந்த நினைவு சனாவின் தந்தையை மேலும் விம்மி அழவைத்தது.

வெளிநாடு சென்றும் நான் குறைவாகத்தான் பேசியிருக்கேன். ஒரு நாள் சனா தொலைபேசியில்

“நீங்கள் வேலை என்று சொல்லி குறைவா பேசி வச்சிடுவிங்க. வெளிநாட்டில் உள்ளவங்க நண்பர்களோடு தொலைபேசியோடு பொழுதை கழிப்பாங்களாம் என் தோழி சொன்னா. அம்மாவும் அப்படித்தான். நான் தனியாகவே விளையாடுவன்” என்று பேசியதும் நினைவில் வந்தது அவன் நெஞ்சின் ஆழத்தில் ஏதோ குத்தியது போன்ற வலியை உணர்ந்தான்.” வேலை வேலை என்று பிள்ளையோடு பேசாம விட்டுடனே… பிஞ்சு மனசு எவ்ளோ வேதனைப்பட்டிருக்கும்.”

பிள்ளையோடு கொஞ்சமாக பேசிவிட்டு நேரம் கிடைத்த போதெல்லாம் நண்பர்களோடு அரட்டை அடித்து முகநூல்களின் முகம் தெரியாதவர்களுக்காக அதிக நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன். எனது பிள்ளை என்னோடு நிறைய பேசுவதற்காகவே காத்திருந்திருக்கிறாள். இப்போ என் பிள்ளையோடு பேச நான் ஏங்குறன் பேச முடியாம தூங்குறாளே என கதறி கதறி அழுகின்றான்.

இனியாவது வீணாக தொலைபேசியில் நேரங்களை செலவிடாமல் தேவைக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும். வேலை முடிந்ததும் உறவுகளுடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும். என தனக்குள் எண்ணிக் கொள்கிறான். தொலைபேசி எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் ஒன்று போனால் மற்றொன்று வாங்கலாம் உறவும் பாசமும் அப்படியில்லை. உறவை இழந்தால் திரும்ப பெற முடியாது என்ற உண்மையை உணர்ந்து இனி தனது வாழ்நாளை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என முடிவு செய்கின்றார் .

வைத்தியசாலைக்கு சென்று “டொக்டர் பிள்ளையின் நிலை இப்போது எப்படி?” என கலங்கியவாறு கேட்கின்றார் . அதற்கு வைத்தியர்

“மனதளவில் குழந்தை பெரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளது அதன் பாதிப்பினாலே இப்போது சுய நினைவை இழந்துள்ளது . எங்களால் முடிந்தளவு சிகிச்சை வழங்கிருக்கிறோம். காய்ச்சல் குணமாகி விட்டது. குழந்தையை வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள். ஏங்கிய பாசம் திரும்பக் கிடைத்தால் பழைய நிலைக்கு திரும்பலாம் “என கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

இருவரும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தனர். சுயநினைவை இழந்த குழந்தையை எண்ணியும் குழந்தைக்கானநேரத்தை செலவிட தவறியதை எண்ணியும் இருவரும் கதறினர். மேசையின் கீழே கிடந்த குழுந்தையின் நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்த தாய் பின் புறத்தில் எழுதப்பட்டிருந்த குழந்தையின் கையெழுத்து அவள் மனதை ரணப்படுத்தியது. அதில்….

“அப்பா அம்மா நான் சிறுமி உங்களுக்கு எப்படி பாசம் காட்டுவது என தெரியவில்லை. அதிக நேரம் போனோடுதான் இருக்கிறீர்கள் அதனோடுதான் சிரிக்கிறீர்கள் அதைத்தான் தினமும் கையோடு வைத்திருக்கிறீர்கள். நான் இந்த உலகிலே வெறுத்ததும் பொறாமைப்பட்டதும் தொலைபேசியோடுதான். ஏனென்றால் அதுதான் எனது அப்பா அம்மாவை என்னைவிட்டு தூரமாக்கியது. அடுத்த ஜென்மம் இருந்தால் உங்களுக்குப் பிடித்த தொலைபேசியாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” என பிஞ்சுக்கரத்தால் எழுதியிருந்தாள் சிறுமி. இருவரும் குழந்தையை அணைத்தபடி மனங் கதறி அழுதனர்.

இப்போது தொலைபேசியை தொட ஆர்வமின்றி குழந்தை நினைப்பிலே வாழ்கின்றனர். இப்போது மனதில் வந்த அடைமழை வேதனையால் கண்களில் கண்ணீர் வெள்ளம் மட்டுமே மிஞ்சியது. நேரம் ஒதுக்கிய தொலைபேசி அவர்களுக்கு எந்தப்பயனையும் கொடுக்கவில்லை. ஓடித்திரிந்து விளையாடிய குழந்தையும் உணர்வில்லாம்ல் இருக்கிறது வாழ்க்கையின் நேரங்கள்தான் வீணாய்ப்போனது. கண்ணீர் மட்டுமே கடைசியில் மிஞ்சியது. என வாழ்வை உணர்ந்து கொண்டு தாய் பிள்ளையின் தலையை தடவியபடி அழுதாள். பின் மாலை நேரப்பொழுதொன்றில் இருவரும் கடற்கரைக்கு பிள்ளையை அழைத்துச் சென்றனர்.அங்கு அத்தனை பொருட்களையும் தன் பிள்ளையிடம் காண்பித்து என்னடா வேணும் உனக்கு எங்களப்பாருடா பார்த்து ஒரு வார்த்தையாச்சும் பேசுடா என தந்தை கண்ணீர் விட்டு பிள்ளையின் முகம் பார்த்து அழுதான். பிள்ளையின் கண்கள் மெல்ல திறந்தன. “வாப்பா வாப்பா” என அனுகினாள். “வாப்பா வந்துட்டன்டா” என தந்தை சத்தம் போட்டு அழ…. இதைக் கேட்ட பிள்ளை தந்தையை கட்டியணைத்து கண்ணீர் சிந்தினாள். இருவரின் பிள்ளையின் அருமையை உணர்ந்து பிள்ளைக்காகவே தங்கள் நேரங்களை தயார் செய்தனர்.

படிப்பினை : கிடைக்கும் நேரமெல்லாம் தொலைபேசியைப் பயன் படுத்தாமல் நேரம் கிடைக்கும் போது பயன்படுத்துங்கள். இருக்கும் காலத்தை உறவுகளோடு சந்தோசமாய் வாழுங்கள்.

Story Writer : மஜினா உமறு லெவ்வை
மாவடிப்பள்ளி

மஜினா உமறு லெவ்வை எழுதிய காத்திருந்து கலைந்தது ஓர் ஓவியம் தொடர்கதையின் அனைத்து பாகங்களையும் வாசிக்க எங்களுடைய WhatsApp Group யில் இணைந்து கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *