கௌரவம் சிறுகதை

கதைகள்

சிறுகதை

கௌரவம்!

அவன் வீதியோர ஆரஞ்சுக் கடைமுன் தனது உயர்ந்த ரகக் காரை நிறுத்தி இறங்கினான். அவனது காதலியும் வந்திருந்தாள். “இந்த ஆரெஞ்சு என்ன விலை?”என்ற அவனது மிடுக்கான கேள்வி அந்தக் கடைக்குச் சொந்தமான முதியவரை மதிப்பதாக இல்லை! பணம் அவனுக்கு மேலதிகமாக ஒரு எலும்பைக் கொடுத்திருந்தது. அதற்கு அந்த முதியவர்….”மகனே! ஒன்று 100 ரூபாய்க்கு விற்றேன் இப்போது 80 ரூபாய்க்குத் தருகிறேன்! இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிடும்”என்றதும்…..

மகனே என்ற வார்த்தையையும் அந்த முதியவரின் தோற்றத்தையும் ஏற இறங்கப் பார்த்தவாறே அவனது காதலி”டியர்! போகலாம் வேற நல்ல இடம் முன்னால இருக்கும்?” என்று சொல்லவும் அந்த முதியவரின் உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகைவர அதை அடக்கிக் கொள்வது தெரிந்தது. “இல்ல டியர்! அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு எந்தக் கடையும் இருக்காது!”என்ற அவனது பதிலுக்கு அவள் மௌனமானாள். பேரம்பேசல் தொடர்ந்தது.

“இங்கபார் 6 காய் 400 ரூபாய்க்கு தருவதாக இருந்தால் தா இல்லைன்னா தேவையில்ல!”என்று முதியவரை நோக்கி வீசிய வார்த்தையின் அடி அவனை மகனே எனக் காதலிக்குமுன் கூறிய கோபத்தையும் தொட்டு நின்றது.

அதை புரிந்து கொண்ட அந்த முதியவரும்…”சரி சேர்! இன்று எனக்கு வியாபாரமே பெரிதாக நடக்கவில்லை!”என்றவாறு ஆறு பழங்களை ஒரு பையில் போட்டுக் கொடுக்க அதை வாங்கியபடியே தனது டவுசர் பாக்கெட்டில் இருந்து 500 ரூபா நோட்டை எடுத்து நீட்டவும் அதை வாங்கி 100 ரூபாய் மீதியையும் கொடுத்தபடி…” மிக்க நன்றி சேர்! இதுதான் இப்போதைக்கு எனது வருமானம். இன்னும் கொஞ்ச நேரத்தில கடைய மூடிட்டு போகனும்.

கடைசி பஸ் போயிடும்.” என்று கூற அந்த வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமலே அவர்களிருவரும் சென்று காரில் ஏறிப் பறந்தனர். அவர்கள் சென்ற பின்தான் அந்தப் பெரியவர் கண்ணில் நிலத்திலிருந்த ஏதோவொன்று அந்த மெல்லிருட்டிலும் கண்ணில் பட்டது. அவர்களிருவரும் ஆரேஞ்சினை சுவைத்தவாறே கொஞ்சும் ஆங்கிலத்தில் கெஞ்சும் காதல்மொழி பேசியவாறு பயணித்தனர்.

அடுத்த இரண்டுமணி நேரத்தில் அந்த உயர் ரக ரெஸ்டூரண்டை அடைந்தனர். அங்கு சென்று உணவருந்த மேசையில் அமர்ந்தவாறு உணவுகளை Order செய்து உண்டனர். பின் 4000 த்து சொச்ச ரூபா பில் வர 5000 ரூபா பணத்தை எடுத்து வைத்து…”தங் யூ” என்று விட்டுஎழும்பவும் அந்த பணியாளர் முகத்தில் திருப்திப் புன்னகை. ஏறத்தாழ 700 ரூபாவுக்கு மேல் அவனுக்கு கிடைக்கும்!!! பவ்வியமாக தலையை குணிந்து…. “யூ ஆர் வெல்கம் சேர்” என நாடகபாணியில் கூறியது இருவரையும் பலமடங்கு திருப்திப்படுத்தியது.

இருவரும் ரிசப்சனைத் தாண்டும் போது… “சேர் உங்க வாகன இலக்கம் AU – 5960 தானே!?” என ரிசப்சனிஸ்ட் கூறவும் அந்த வாகன இலக்கம் சரியாக இருக்க அவன் தலையாட்டியபடி….. “ஆமா எதுக்காக கேக்குறீங்க?”என்றவும்…. “உங்களை யாரரோ சந்திக்கனுமாம்! முக்கியமான விசயம்னு சொன்னாரு!”என்று பதில்வர…அவன் காதலியின் முகத்தை கேள்விக் குறியோடு பார்க்கும் போதே அந்த ஆரேஞ்சுப் பழக்கடை முதியவர் சிரித்தவாறு இவர்களை நோக்கி வருவது தெரிந்தது.அதைக் கண்ட அவனது காதலி மறுபடி முகத்தை சுளித்தவாறு இவனது முகத்தைப் பார்க்கவும் அந்த முதியவர் அருகில் வந்து….”மன்னிக்கவும் சேர்! இதை கடையில தவறவிட்டுட்டீங்க!”எனக்கூறி கிரடிட் காட்டை நீட்ட அப்போதுதான் பெற்றோல் செட்டில் பணம் செலுத்திவிட்டு கார்ட்டை டவுசர் பாக்கெட்டில் வைத்ததும், அது அந்த 500 ரூபாவை எடுக்கும் போது அந்த முதியவரின் கடையில் விழுந்துள்ளதும் இவர்களுக்குப் புரிந்தது.

அந்த முதியவரின் நேர்மை கண்டு அவனும் காதலியும் திகைத்துப் பார்க்கவும்…. இது எதனையும் கவனியாது அந்த முதியவர் திரும்பிச் சென்றார். சில நிமிடங்களில் நடந்து முடிய அவன் சுதாரித்தவாறு அந்த முதியவரை நோக்கி ஓடினான்.”சாரி அங்கிள்! எங்களால உங்களுக்கு சிரமம்!”என இவன் கூற அந்த முதியவர்….”மன்னிக்கனும் சேர் அந்த பஸ்ஸினை இதற்காக இவ்விடத்தில் நிறுத்திவிட்டு வந்தேன்.”என முதியவர் கூறியபடி செல்ல அவன்….”நான் உங்க இடத்தில கொண்டு போய் விடுறேன்!” எனக் கூற”இப்போது பேச நேரமில்லை சேர்…. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

எங்களால யாரும் சிரமப்படக் கூடாதென்பது தான் முக்கியம்! கௌரவம் எங்கிறது பணத்திலயோ தோற்றத்திலோ இல்லை சேர்!”என்றுவிட்டுச் செல்ல ஏதோ பலது அந்த வார்த்தைகளில் அவனுக்குப் புரிந்தது.

அருகில் வந்த காதலியின் முகத்தைப் பார்த்த அவன் தன் இயல்பு நிலையை இழந்திருந்தான். அருகில் வந்த அந்த ரெஸ்டூரன்ட் பணியாளன்…”ஏதாவது உதவி வேண்டுமா?”என்று கேட்க அதிலிருந்த பகட்டுத் தனம் முதற்தடவையாக அவனுக்குப் புரிந்திட அவசரமாக தன் காதலியுடன் காரில் ஏறி அந்த பஸ்ஸினைப் பின் தொடர்ந்தான்.

முற்றும்

சுவை கதம்பம்

இது போன்ற உங்களுடைய ஆக்கங்களையும் [ கவிதை,சிறுகதை,கதைகள்,கட்டுரை,சித்திரங்கள்,etc ] கீழ் உள்ள எங்களுடைய WhatsApp இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள் எங்களுடைய இணையதளம் மற்றும் எங்களுடைய WhatsApp Group களில் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயார்

🪀 WhatsApp No : 0714814412

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நாங்கள் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *