சமூகப் பிரச்சினைகளும் கல்வியும்

கல்வி

சமூகப் பிரச்சினைகளும் கல்வியும்


சமூகத்திலிருந்து எழும் முரண்பாடுகளை சமூகப் பிரச்சினைகள் எனலாம். சமூகத்திலே தோன்றக்கூடிய பிரச்சினையானது ஒரு தனி மனிதன் அல்லது குழுவினாலேயே தோற்றுவிக்கப்படுகின்றது சமூகமானது நேர்வழியில் இருந்து விலகுதல், முரண்படுதல், சமூக நீதிப் புறக்கணித்தல், சமூக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தல், மக்களின் சகிக்கும் எல்லையை மீறுதல் முதலியவை சமூகப் பிரச்சினைகளின் பரிமாணங்களாகின்றன.


சமூகம் ஒழுங்கு குலைவடையும் போது நடப்பில் உள்ள சட்டங்களும், விழுமியங்களும், கல்வியும் செயலாற்றம் குன்றும். அதேநேரம் சமூகத்தில் ஒரு பிரச்சினை தோன்றும் போது அது கல்வியின் மூலம் தீர்க்கப்படும் என்பதுடன் ஒரு சமூக பிரச்சினை தோன்றுமானால் அது கல்வியையும் பாதிப்பும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் சமூகப் பிரச்சினைகளும் கல்வியும் பல்வேறு வகையாக தொடர்பு கொண்டு பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவிக்கின்றன.


தனி மனிதன் நடத்தைகள் எதிர்நிலைக்கு தள்ளப்படுதலும், பொதுவான நடத்தைகளில் இருந்து வேறுபடுதலும் மனித இருப்போடு இணைந்த செயற்பாடாகும். இந்த மனித இருப்பையும் சமூக இயல்பையும் பற்றிய தெளிவான ஒரு விளக்கத்தை கல்வி செயல்முறையானது ஏற்படுத்துவதை தவறவிடும் பட்சத்தில் தனி மனித விலகலை ஏற்படுத்தக் கூடும். இதுவே முதலாவதாக சமூகப் பிரச்சினை தோன்ற வழி செய்வதாக இருக்கும். இந்த நிலையில் தனி மனிதனின் எதிர்விலகள் நடத்தை சமூக நிலைப்பட்டதும், உளவியல் நிலைப்பட்டதுமாகும். இந்நிலைத் தோன்ற காரணம் தனிமனிதன் தன்னையும் சமூகத்தையும் விளங்கிக் கொள்ள முடியாத அறிவின் அவலம் எனலாம். இவ்வாறு இருக்கையில் சமூகத்தில் ஒரு பிரச்சினை ஏற்படுகின்றது என்றால் பிரச்சினைக்குரிய மூல காரணிகளை கண்டறிந்து தடுக்கக்கூடிய செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக பொருத்தமான விழுமிய கல்வி வழங்கப்படாமையினால்தான் இளம் குற்றவாளிகள் தோன்றுகின்றனர் எனப்படுகின்றது. ஆனால் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின்படி இந்த கருத்தானது முறியடிக்கப்பட்டு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமையே இளம் குற்றவாளிகளின் பெருக்கத்துக்கு காரணம் என்ற ஒரு முடிவும் பெறப்பட்டுள்ளது.


இவ்வாறான சமூக பிரச்சினைகள் தோன்றுவதற்கு அடிப்படையான காரணங்கள் என்று நோக்கும் போது முதலாவதாக தனிமனித நடத்தையினை கூறலாம். தனி மனிதனானவன் சமூகத்துக்கு ஒவ்வாத நடத்தையினை வெளிப்படுத்தும் போது அது சமூகப் பிரச்சினையை தோற்றுவிக்கக் கூடியதாக இருக்கின்றது. தொடர்பாடல் இடைவெளிகள் சமூகப் பிரச்சினைகளை தோற்றுவிக்க கூடியதாக இருக்கின்றது. சமூகமானது பல பரிமாணங்களின் திரண்ட வடிவமாக காணப்படுகின்றமையானது. அது முறையான தொடர்பாடலின்படி இயக்கம் பெறக்கூடியதாக இருக்க வேண்டும். தொடர்பாடலானது கீழிருந்து மேல் நோக்கியும், மேலிருந்து கீழ்நோக்கியும், பக்கவாட்டிலும் சரியான முறையில் இடம்பெறும் பட்சத்தில் அங்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதாக இருக்கும். அடுத்த காரணியை நோக்குவோமானால் கைத்தொழில் வளர்ச்சியை தொடர்ந்து நகரமயமாக்கல் சமூகப் பிரச்சினையை தோற்றுவிக்கின்றது. இந்நிலையில் இட நெருக்கடி, வீட்டு பிரச்சினை, நீர் பிரச்சினை, போக்குவரத்து நெருக்கடி, சூழல் மாசடைதல், வேலையின்மை, பாடசாலைகளில் நெருக்கடி முதலிய பல்வேறு சமூக பிரச்சினைகள் தோன்றுவதற்கு இந்த கைத்தொழில் வளர்ச்சியோடு தொடர்ந்த நகரமயமாக்கல் செயற்பாடுகளே அடிப்படை காரணமாக அமைகின்றது.


அடுத்த காரணியாக பொருளாதார காரணிகள் மட்டுமன்றி இயற்கை மற்றும் புவியியல் காரணிகளும் சமூகப் பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியதாக உள்ளது. நிலநடுக்கம், ஆழிப்பேரலை, புயல், வெள்ளம், நீடித்த வறட்சி, பயிர்வளர்ப்பு பீடைகள் முதலியவை சமூக வாழ்க்கையில் தாக்கத்தை விளைவிக்கும் பொழுதும் இயற்கைக்கு எதிரான போராட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது. கல்வி வழி இடம்பெறும் கண்டுபிடிப்புகள் இயற்கை நிகழ்த்தும் எதிர்வினைகளுக்கு மாற்று விசைகளை உருவாக்கினாலும், இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் அறிவு எல்லைப்பாடு நீடித்து நிற்கின்றது எனலாம். அடுத்த காரணியாக சமூகப் பிரச்சினைகளை தோற்றுவிப்பதில் அரசு வலுவுள்ள ஒரு விசையாக தொழிற்படுகின்றது. அரசானது அதிகாரத்தின் வடிவமாக காணப்படுகின்றமையும், ஒடுக்கு முறையும், அதிகாரமும் இணைந்து இயங்கும் போது ஒடுக்கப்படும் சமூகங்கள் பல்வேறு பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் சமூகப் பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக அமைகின்றது. மேலும் சமூகத்தில் எழக்கூடிய இனப் பிரச்சினைகள், மோதல்கள், போராட்டங்கள் போன்ற பலவற்றைக்கும் இந்த அரசியல் காரணிகளின் செல்வாக்கே காரணம் என்றும் கூறலாம்.


தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணி கொரோனா பெருந்தொற்றை கூறலாம். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து நாடு முடக்கத்திற்கு வந்ததன் பிற்பாடு அதன் பின் விளைவாக தற்போது நாம் முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை உயர்வுகள் என்பவற்றை சமூகத்தில் தோற்றுவித்த பெரும் பாதகமான ஒன்றாக காணப்படுகின்றது
இவ்வாறு பல்வேறு காரணிகளால் நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சனைகளாக இன முரண்பாடு, இன ஒடுக்கு முறைகள், யுத்தமும் இடப்பெயர்வும், வறுமை, ஏழ்மை, வேலையின்மை, அனர்த்த தாக்கங்கள், குறை உழைப்பு, செல்வ பங்கீடு முரண்பாடு, நகரமயமாக்களும் சூழல் மாசடைவுகளும், குடியகல்வு, போதை நுகர்ச்சி, பிரதேச முரண்பாடு, இளம் குற்றவாளிகள் உருவாக்கம், முதியோர் புறக்கணிப்பு, நிலப் பிரச்சினை, உயிர் மற்றும் உடைமைகள் பாதுகாப்பின்மை, பாலியல் நோய்கள் மற்றும் பாலியல் தொழில்கள், லஞ்சம் ஊழல், விபத்துகளினால் அதிகரிக்கும் உடல் ஊனம் மற்றும் உயிரிழப்புக்கள், உளநல வீழ்ச்சி, பெருந்தொற்று பரவல் மற்றும் அதனுடனான பாதிப்புக்கு பொருளாதார நெருக்கடி போன்றவற்றை குறிப்பிடலாம்.


இவ்வாறான சமூகப் பிரச்சினைகளை அடியொட்டியே கல்வியோடு தொடர்புடைய சமூகப் பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்படுகின்றது. கல்வியோடு இணைந்த சமூக பிரச்சினைகள் தோன்ற அடிப்படை காணிகளாக மேற்கூறப்பட்ட அனைத்து காரணிகளும் பிரச்சினைகளும் தாக்கம் செலுத்துவதாக உள்ளது. அது தொடர்பாக நோக்குவமாயின் இடைவிலகல், மீளக்கற்றல், கல்வி இழப்பு, கற்றல் வீழ்ச்சி, கல்விக்கான வளப்பற்றாக்குறை, பிள்ளைகளின் பிறழ்வான நடத்தைகள், கல்வி நிறுவனங்களினுடைய ஏற்றத்தாழ்வுகள், சமவாய்ப்பும் சமகணிப்பும் இன்மை, பொருத்தமற்ற கற்றல் அணுகுமுறைகள், பொருத்தமற்ற கற்றலுக்கான சூழல், நடைமுறைக்கு ஒவ்வாத கணிப்பீட்டு முறைகள், நடைமுறைக்கு பொருத்தமற்ற போட்டிகள், சரியான ஊக்குவிப்பின்மையும், பொருத்தமற்ற ஊக்குவிப்புகளும், கற்றலுக்கான தடைகள், கல்வி சார்ந்த வேலையின்மையும், குறை உழைப்பும், எழுத்தறிவின்மை, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப கல்வி இணக்கப்பாடு இன்மை, தொழில் உலகுக்கும் கல்வி உலகுக்கும் இடையிலான தொடர்பானது குறைவாக காணப்படுகின்றமை போன்றவற்றை சமூகப் பிரச்சினைகளோடு இணைந்த கல்வி பிரச்சனைகளாக குறிப்பிடலாம்.


இவ்வாறு நோக்குகையில் சமூகப் பிரச்சினைகளை வெளிகாட்டும் கருவியாகவும், அந்த பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை தரக்கூடிய ஒரு நுட்பமாகவும் கல்வி அமைகின்றது. சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய அறிவை உருவாக்கும் வகையில் கல்வியானது ஒழுங்கமைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். கல்வியின் அடிப்படையான நோக்கங்களில் தலையாய நோக்கமாக காணப்படுவது சமூகத்தை அநீதியற்ற முறையில் இங்கிதமாக அமைத்து தருவதாகும். நீதியும் செயற்திறனும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு பொறிமுறையாக கல்வி அமைதல் வேண்டும். இவ்வாறாக சமூக பிரச்சனையானது கல்வியினால் தீர்க்கப்பட வேண்டுமாயின் பின்வரும் வழிமுறைகளை முன்னெடுக்கலாம்.
அவையாவன நடைமுறைக்கு பொருத்தமான சட்டங்கள் வாயிலாகவும் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும் தீர்வுகளை எட்ட முயல்வதுடன் இதனை கல்வியினூடாக ஊடுகடத்தும் போது அது சரியான முறையில் நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் சென்றடைந்து சமூக பிரச்சனையை தீர்க்கக் கூடியதாக இருக்கும். சீரிய ஒழுக்கமுள்ள ஒவ்வொரு பிரஜையும் அடிப்படை கல்வி நிலையங்களில் இருந்தே உருவாக்கும் போது சமூகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறைவடையும், அதேநேரம் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான கூடிய நபர்களையும் குழுக்களையும் உருவாக்க முடியும். பிரச்சினைகளை தவிர்க்கப்பட முடியாதவை என்று அவற்றோடு இசைந்து வாழப் பழகாமல் எதிர்நீச்சல் அடித்து பிரச்சினையை சீராக்க வேண்டும். இதற்கான அணுகுமுறைகள் பற்றிய தெளிவையும் விளக்கத்தையும் ஏற்படுத்தும் பொறுப்பு கல்வியிடமே இருக்கின்றது. இவ்வாறு பிரச்சினையை முறியடிக்க கூடியதாக இருக்கும் ஒரு சமூகத்திலே தோன்றக்கூடிய பிரச்சினையானது ஒரு தனி மனிதன் அல்லது குழுவினாலேயே தோற்றுவிக்கப்படுகின்றது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் ஓரளவேனும் அறிவைப் பெற்றிருப்பானாக இருந்தால் அங்கு பிரச்சினையானது சரியான முறையில் தீர்க்கப்படுவதுடன் பிரச்சினை மேலெழுந்து முரண்பாடுகள், மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு நோக்கும் போது கல்வியும் சமூக பிரச்சினைகளும் பல்வேறு வகையாக தொடர்பு கொள்வதுடன் இவை சமூகத்தில் பல தாக்கங்களையும் ஏற்படுத்த கூடியதாக இருக்கும். இவ்வாறு பிரச்சனைகளுக்கான தீர்வு கல்வியினூடாக தீர்க்கப்படுமாயின் சமூகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தடுக்க கூடியதாக இருப்பதுடன், அது கல்வியின் மீது செலுத்தக்கூடிய தாக்கங்களையும் முறியடிக்க முடியும்.

கனேசன் பவித்ரா,
நான்காம் வருட சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கலை கலாசார பீடம்,
கிழக்கு பல்கலைக்கழகம்.
வந்தாறுமுலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *