சமூகமயமாக்கல் செயல்பாட்டின் குறைபாட்டின் காரணமாக தோன்றும் சமூகப் பிரச்சனைகள்
சமூகமயமாக்கம்(Socialization) என்பது குறிப்பிட்ட சமூகத்தின் விதிமுறைகள், கருத்தியல்கள் ஆகியவற்றை ஒருவர் தனக்குள் உள்வாங்கும் வழிமுறையைக் குறிக்கும். அதாவது ஒரு மனிதன் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஏற்றாற்போல இசைவாக்கம் அடைவது அல்லது பொருத்தப்பாடடைவது என சமூகமயமாக்கலை வரைவிலக்கணப்படுத்த முடியும். எனவே இந்த சமூகமயமாக்கல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு ஆகும். ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை இந்த சமூகமயமாக்கல் இடம்பெற்று கொண்டே இருக்கக்கூடியது. அதே நேரம் எந்த ஒரு மனிதனும் சமூகத்திற்கு ஏற்றார் போல பொருத்தப்பாடு அடையாவிட்டால் அவன் அந்த சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டான் பல இடங்களில் புறக்கணிக்கப்படுவான்.
ஆகவே ஒரு சமூகத்தில் மனிதன் வாழ வேண்டுமாக இருந்தால் அந்த சமூகத்துக்கே உரித்தான கலாச்சாரம், ஆடையலங்காரம், உணவு பழக்க வழக்கங்கள், அன்றாட செயல்பாடுகள் போன்ற அனைத்திலும் அவன் சக மனிதர்களை ஒத்த தன்மைகளை வெளிக்காட்ட வேண்டும் அப்போதுதான் அவன் சமூகத்தினால் ஏற்கப்படுவான். எனவேதான் கிட்டின்ஸ் என்ற அறிஞர் “சமூக தாக்கங்களால் ஒரு மனிதனுள் ஏற்படக்கூடிய நெகிழ்வுத் தன்மை தான் சமூகமயமாக்கல்” என்கிறார்.
அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது ஒரு மனிதன் சமூகத்திற்கு ஏற்றாற் போல பொருத்தப்பாடடைவதில் பல்வேறான சிக்கல்களும் காணப்படுகின்றன. அதாவது பெரும்பாலான இடங்களில் ஒரு மனிதன் பிறந்திருக்கக் கூடிய குடும்பச் சூழல், சமூகச் சூழல் என்பன சரியாக அமைவதில்லை.
•குடும்பத்தில் பெற்றோருக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளும் வன்முறைகளும்
•பிறந்த சமூகம் கொலை, கொள்ளை, போதைவஸ்துப் பாவனை போன்ற சமூக விரோதச் செயல்களை செய்யக்கூடியதாக காணப்படுதல்
•நல்ல குடும்பத்தில் பிறந்தாலும் தவறான நண்பர்களின் பழக்க வழக்கங்களால் நடத்தை பிறழ்வு ஏற்படல்.
•இளவயதில் ஏற்படக்கூடிய வறுமை
•கருக்கட்டலின்போது நிற மூர்த்தங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களும் அவை ஓமோன்களில் ஏற்படுத்தக்கூடிய தாக்கமும்
•தனிமை உணர்வு
•அடிப்படை உடல்சார் தேவைகள் நிறைவேற்றப்படாமை
போன்ற பல்வேறான காரணங்கள் நாம் குறிப்பிட முடியும்.
அந்த மாதிரியான சூழலில் பிறந்து வளர்ந்து ஒருவன் சமூகத்திற்கு வருகின்றபோது அவன் குறைப்பாடான சமூகமயமாக்கம் அடைந்தவனாக இருப்பான். அவனுக்கு சமூகமயமாக்கம் சார்ந்த விடயங்களில் ஏதாவது குறைபாடு காணப்படும். அப்படியான சந்தர்ப்பங்களில் தான் பல பிறழ்வான நடத்தைகளும் சமூக சீர்கேடுகளும் நடைபெறுகின்றன. அதன் அடிப்படையில் திருப்திகரமான சமூகமயமாக்கல் இல்லாத காரணத்தால் ஒரு மனிதனிடம் தோன்றக்கூடிய குறைபாடுகளாக தற்கொலைகள், பிறழ்வான நடத்தை, பாலியல் சார்ந்த குற்றங்கள், கொலைகள், போதைப்பொருள் பாவனை, இளைஞர் விரக்தி, இன வர்க்க முரண்பாடுகள், கலாசார சீர்கேடுகள், முறையற்ற ஆடை அலங்காரங்கள், இளவயதுத் திருமணம், குடும்ப முரண்பாடுகள் போன்ற விடையங்களை எமது சமுதாயத்திலும் நோக்க முடிகிறது.
இவற்றுள் தற்கொலை மிக முக்கியமான இடத்தை பெறுகின்றது தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம் பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம்.
தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி மேற்கோள்ளூம் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. துப்பாக்கி வகைகள், மருந்துகள் மற்றும் நஞ்சுப் பொருட்கள் முதலானவற்றை எளிதில் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதும் தற்கொலையை தடுக்கும் ஒரு முறையாகும். இப்படி தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு உண்மையில் தன்னம்பிக்கை என்ற ஒரு விடயம் இல்லை என்றே கூற வேண்டும் வாழ்வில் எது வந்தாலும் பார்த்துவிடலாம், சமாளித்து விடலாம், ஒன்று போனால் மற்றொன்று கிடைக்கும் என்கின்ற பக்குவம் இல்லாத நேரத்தில் தான் கோழைத்தனமான முடிவுகளை பல பேரும் எடுக்கிறார்கள். எனவே சூழ்நிலைகளை கையாளுகின்ற பக்குவத்தை சமூகமயமாக்களின் மூலமாக அவர்களுக்கு வழங்கவில்லை என்பதுதான் இதன் மூலமாக தெரிய வருகின்றது. இதனைப் பற்றிய கண்ணதாசனின் அருமையான பாடல் வரிகள் பின்வருமாறு கூறுகின்றது.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்”
என்று கூறுகின்றார் இப்படி பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தால் அவர்கள் உண்மையில் தற்கொலை செய்து கொள்வார்களா? என்ற வினாவும் எழுகின்றது. பக்குவம் இல்லாத காரணத்தால் தான் பல தற்கொலைகள் நமது சமூகத்தில் நடைபெறுகின்றன. உண்மையில் தனது உயிரின் பெறுமதியை உணராதவர் தான் தற்கொலை செய்து கொள்வார். சூழ்நிலையை கையாளத் தெரிந்த எவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில்லை. அவர்கள் பிரச்சினை வந்துவிட்டால் அதிலிருந்து விடுபடுவதற்காக அடுத்து என்ன செய்வது என்ற வழியைத் தான் தேடி, இப்பிரச்சனையில் இருந்து சாதுரியமாக வெளிவர முயற்சிக்கிறார்கள்.
இதனை எட்கார் டாலே என்ற அறிஞர் ஒரு பிரச்சனையை கையாளுவதற்கு மூன்று வழிகள் இருப்பதாக சொல்லுகின்றார் அவையாவன ஒன்று
1.பிரச்சனையை மாற்றப் பார்
2.பிரச்சனையை ஏற்றுக்கொள்
3.பிரச்சனையை விட்டு தப்பித்து ஓடு என்று கூறுகின்றார்.
இப்படி ஒரு சூழ்நிலை வருகின்றபோது நம்மால் முடிந்தால் அதனை மாற்ற முயற்சி செய்யலாம் அல்லது இப்படித்தான் இருக்கிறது என்கின்ற நேரம் அந்த பிரச்சினையை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது அந்த பிரச்சினையை விட்டே நாம் தூர விலகி இருப்பதன் மூலமாக எம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்.
அதேபோல இன்றைய நடைமுறை சமூகத்தில் காணப்படக்கூடிய ஒரு பிரச்சனை தான் பாலியல் சார்ந்த குற்றங்கள் ஆகும் பொதுவாக சிக்மன் பிரைட்(Sigmand Fride) என்று அறிஞன் மனிதனுக்கு இயற்கையாகவே சிறு வயது முதல் பாலியல் ரீதியான இன்பம் காணும் முறைகள் காணப்படுவதாக கூறுகின்றார். அவையாவன வாய் வழி இன்பம் (தாயப்பால் குடிப்பதன் மூலமாக பெறக்கூடிய இன்பம்), குதவழி இன்பம் (மலம் கழிப்பதன் மூலம் பெறக்கூடிய இன்பம்), பாலுறுப்பு வழி இன்பம் (தனது பிறப்பு உறுப்பை தொடுவதன் மூலம் பெறக்கூடிய இன்பம்) என்பன ஆகும்.; இப்படியான குழந்தைகள் பிறப்புறுப்பைத் தொடும் போதோ, கண்ட இடங்களில் மலங்களிக்கும் போதோ இச்செயற்பாடுகளை பெற்றோர் தடுப்பதன் மூலமாக அவர்களிடம் பாலியல் வக்கிரங்கள் தடுத்து வைக்கப்பட்டு பிற்காலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள், சமூகத்தால் ஏற்க முடியாத முரணான நடத்தைகளை வெளிக்காட்டுதல் போன்ற செயல்களை அவர்கள் செய்வார்கள். இதற்கெல்லாம் காரணம் குடும்பத்தில் அவர்கள் சரியான முறையில் சமூகமயமாக்கத்திற்கு உள்ளாகாததே ஆகும்.
உதாரணமாக வாய்வழி இன்பம் மறுக்கப்பட்டுள்ள மனிதர்களே அதனைப் பெரும்விதமாக புகைபிடித்தல் பழக்கத்திற்கு கூடுதலாக ஆளாவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இன்று ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பார்க்கும் போது தான் தெரியும் எவ்வளவு தூரம் பெண்கள் மீது வன்முறைகளும் பாலியல் ரீதியான குற்றங்களும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே எமது நாட்டிலும் உள்ளன. உண்மையில் இரவு வேலையானாலும் பெண்கள் சுதந்திரமாக வெளியில் சென்று எவ்வித அச்சமும் இன்றி வீட்டுக்கு வந்து சேர முடியும் என்றால், அதுதான் உண்மையான அபிவிருத்தி என்று நான் கூறுவேன். அதே நேரம் பிள்ளைகள் வளரும் போதும் தமது வயதை விட அதிகமான நபர்களுடன் பெரும்பாலான பிள்ளைகள் நட்பு ரீதியான தொடர்பை வைத்திருப்பார்கள்.
இங்கு உயர்ந்தவர்கள் அவர்களின் வயதுக்கு ஏற்ற செயல்களை செய்கின்றபோது, அதனை பார்த்துக் கொண்டிருக்கின்ற சிறியவன் புகைபிடித்தல், பெண்களைப் பார்த்து கேலி கிண்டல் செய்தல், மது அருந்துதல், கெட்ட வார்த்தைகள் பேசுதல் என்பன ஏற்படுகின்றன. இவற்றுள் பிரதானமாக பாலியல் சார் நெறிபிறழ்வான நடத்தைகளும் காணப்படுகின்றன. பொதுவாக “பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை அவர்கள் கேட்ட வார்த்தைகளை தான் பேசுகிறார்கள்” என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவும் வேண்டும்.
அடுத்ததாக கொலை என்பது ஒரு மனிதரின் உயிரை இன்னொரு மனிதர் எடுப்பது அல்லது அவரது ஆயுள் இயற்கையாக முடிவதற்கு முன்னர் மரணம் அடையச் செய்வதாகும். பல்வேறான குடும்பப் பிரச்சினைகள், நண்பர்களுக்கு இடையில் தோன்றக்கூடிய பிரச்சனைகள், தொழிலில் ஏற்படக்கூடிய போட்டித் தன்மைகள், போட்டி, பொறாமை, சூது போன்ற செயல்களுக்காக ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கொல்கின்ற செயலாகும். இந்த செயல் ஒழுக்கவியல் ரீதியாக பல்வேறாக விமர்சிக்கப்படுகின்றது. சரியான குடும்பத்தில் வழிகாட்டலுடன் வளர்ந்த ஒருவன் பிற மனிதனை கொல்வதற்கு எத்தனிக்க மாட்டான். குடும்பத்தில் அல்லது அவன் வாழ்ந்த சூழலில் இந்த மாதிரியான கொலைகள் செய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்ற போது தான் அவன் இத்தகைய தவறை செய்கின்றான். பெரும்பாலான நேரங்களில் சில மனிதர்கள் சூழ்நிலை கைதிகளாக கொலையை செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
அதனைத் தொடர்ந்து இன வர்க்க முரண்பாடுகள் இன்றைய காலத்தில் சரளமாக ஏற்படுகின்றன. எமது இலங்கை சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் கூட இங்கே தமிழ் சமூகம், இஸ்லாமிய சமூகம், சிங்கள சமூகம், கிறிஸ்தவ சமூகம் போன்ற பல சமூகங்கள் காணப்படுகின்றன, ஆனால் இந்த சமூகங்கள் உண்மையாகவே ஒற்றுமையாக இருக்கிறார்களா? என்று கேட்டால் அவை இல்லை என்று தான் கூற வேண்டும். பல்வேறான நேரங்களில் இனங்களுக்கு இடையே முரண்பாடுகள் தோன்றி கொண்டு தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் எமது கல்வி முறையில் ஒவ்வொரு சமயத்தையும் தனித்தனியாக படிக்கின்றோமே தவிர ஒவ்வொரு சமயமும் கூறக்கூடிய விழுமிய கருத்துக்களை வெளிநாடுகளைப் போல ஒப்பிட்டு படிப்பதில்லை. இந்தியா, மேலைத்தய நாடுகள் போன்றவற்றில் பல்கலாசாரம் பல் சமயம்(ஆரடவi சுநடபைழைn, ஆரடவi உரடவரசந); போன்ற பாடங்களை தான் மாணவர்கள் படிக்கின்றார்கள். ஆகவே பிற சமயத்தவர்களையும் ஏற்று நடக்கின்ற பக்குவத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளுகின்றார்கள்.
உதாரணமாக சுவிஸர்லாந்து நாட்டை எடுத்துக் கொண்டால் அங்கு ரோமானியர்கள், ஜெர்மனியர்கள், ஒஸ்திரியர்கள், யூதர்கள், பிரான்சியர்கள் போன்ற நூற்றுக் கணக்கான இனங்களை சேர்ந்த மக்களும் வாழ்கிறார்கள் அங்கே நம் நாட்டைப் போல இன முரண்பாடுகள் தோன்றுவதில்லை. அதற்கு காரணம் அங்கு காணப்படக்கூடிய கலாச்சார ரீதியான சமூகமயமாக்கம் சிறப்பாக நடைபெறுகின்றமை ஆகும். அந்த நாட்டில் பல்வேறு சமயங்களும் பத்துக்கும் மேலான சிறப்பு மொழிகளும் பேசப்படுகின்றன. அப்படி இருந்தாலும் கூட அந்த நாடு அமைதியான கலாச்சார மற்றும் அரசியல் சூழலை கொண்டுள்ளது. எமது நாட்டிலும் இனங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்தி சிறப்பான சமூகமயமாக்களை ஏற்படுத்தினால் இன முரண்பாடுகளை குறைக்கவும் முடியும்.
அதேபோல எமது சமூகத்தில் அதிகமாக ஊடுருவி இருக்கக்கூடிய ஒன்றுதான் போதைப்பொருள் பாவனை ஆகும் இன்று சிறுவர் முதல் பெரியோர்கள் வரை சமூகத்தில் போதை பொருளுக்கு அடிமையாகுகின்ற தன்மை காணப்படுகின்றது. இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை விட தீமைகளே அதிகமாக காணப்படுகின்றன. மனிதர்கள் தமது சுயநினைவை இழந்து தவறுகள் செய்யவும், தமது உடல் உள்ளுறுப்புகளை சீரழித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் இது ஏற்படுத்துகின்றது. இதனால் மோசமான புற்று நோய்கள் ஏற்பட்டு குறைவான வாழ்நாள் உள்ளபோதே இறப்பு ஏற்படவும் வாய்ப்பாகின்றது. மதுபோதையில் சுய நினைவை இழந்து செய்கின்ற தவறுகளோ ஏராளம்.
அதேபோல சமூகமயமாக்கல் முறையாக இடம்பெறாத காரணத்தால் எமது இளைஞர் சமுதாயம் நமது கலாச்சாரமான உடை அலங்காரத்தையே மறந்து வெவ்வேறு விதமாக உடை அணிகிறார்கள். அதாவது மாணவர்களுடைய தலைமுடி திருத்துவது முதல் பல ஆண்களுக்கு சரியாக இடுப்பு எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அவர்களுடைய கால் சட்டையை அணிவார்கள். அதே போல பெண்களும் கூட காற்றோட்டமான ஆடை கவர்ச்சிகரமான ஆடை என்றெல்லாம் நவ நாகரிகத்திற்கு ஏற்ப அணிகின்றார்கள். ஆனால் இவை எல்லாம் ஒரு மாயை தான் தமிழர்கள் என்றால் அவர்கள் பொதுவாக ஆண்கள் வேட்டி, சட்டை அணிவார்கள் பெண்கள் சாரி போன்ற கலாச்சாரமான உடைகளை தான் அணிவார்கள் அதேபோல இஸ்லாமியர்களுக்கு அவர்களுக்கே உரித்தான ஆடை அலங்காரம் காணப்படுகின்றது.
இப்படி ஒவ்வொரு மதமும் ஒழுக்கமான உடை அலங்காரத்தை தான் ஏற்றுக் கொள்கின்றது. இதனை மீறி உடை அலங்காரங்களை செய்கின்ற போது அது பிறரால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு காணப்படுகின்றது. எனவே சமூகமயமாக்களின் போது பெற்றோர் வீட்டில் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கின்றார்கள் எந்த மாதிரியாக உடைகளை அணிய வேண்டும் எந்த மாதிரி உடைகளை அணியக் கூடாது என்று. ஆனால், இவர்கள் பல்வேறான சம வயது குழுக்களுடன் இணைகின்றபோது அங்கு அவர்களுடைய நடத்தை, நடை, உடை, பாவனை என்பன ஒருவனுடைய நடத்தையில் செல்வாக்கு செல்லுகின்றது. இதனால் இவனும் தன்னுடைய நடத்தையினை மாற்றிக் கொள்ளுகின்றான். சரியான முறையில் சமூகமயமாக்கல் நடந்தால் தான் முறையான உடை அலங்காரத்தை பேண முடியும்.
எனவே சமூகமயமாக்கல் என்பது ஒரு மனிதனை சமூகத்திற்கு ஏற்ப இசைவடையச் செய்வதைக் குறிக்கும். அந்த சமூகமயமாக்கல் சரியான முறையில் இடம்பெறுதல் வேண்டும். அப்போதுதான் அந்த மனிதன் அந்த சூழலில் காணப்படக்கூடிய கலாசார விழுமியங்கள், சட்ட திட்டங்கள், ஒழுக்கமான நடைமுறைகள், வாழ்வியல் அம்சங்கள் என்பவற்றை அனுசரித்து நடக்கக்கூடிய தன்மை காணப்படும். உண்மையில் இவ்வாறு முறையாக சமூகமயமாக்கத்திற்கு உட்படாத நபர் பல்வேறான பிறழ்வான நடத்தைகளை வெளிக்காட்டுவார் என்பது மேற்கூறிய விடயங்களில் இருந்து புலப்படக்கூடியதாக உள்ளது. எனவே ஒரு மனிதனை சமூகமயமாக்கத்திற்கு உட்படுத்தக்கூடிய முகவர்களாக இருக்கின்ற குடும்பம், பெற்றோர்கள், சம வயது குழுக்கள், பாடசாலைகள், தொழில் நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அமுக்க குழுக்கள் என்பன சரியான முறையில் செயல்பட்டு சமூகமயமாக்கலைச் செய்தால் தான் சிறப்பான சந்ததியினை எதிர்காலத்தில் உருவாக்க முடியும்.
இரா.செந்தமிழ்செல்வன்,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவன்,
கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை,
கலைகலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைகழகம்.
