🔰 சமூக மாற்றத்திற்கு ஏற்ப கல்வியும் மாற வேண்டியதன் அவசியம்

கல்வி

சமூக மாற்றத்திற்கு ஏற்ப கல்வியும் மாற வேண்டியதன் அவசியம்.


சமூக மாற்றம் என்பது மனித தொடர்புகள், உறவுகள், எண்ணங்கள், நடத்தைகள், பண்பாட்டு விழுமியங்கள், கலாசார நடைமுறைகள் என்பன காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாற்றமுறுகின்ற விதத்தை தான் சமூக மாற்றம் என்று சொல்லலாம். அந்த வகையில் தனி நபர்கள் ஒன்று சேர்கின்ற போது குடும்பம் உருவாகின்றது. பல குடும்பங்கள் சேர்ந்து சமூகத்தை உண்டாக்குகின்றன.

இப்படி மனிதர்களால் உருவான சமூகம் மனித செயற்பாடுகளாலேயே மாற்றத்தை சந்திக்கின்றது. அதன்படி சமூக மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்றால் அது ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் கூட மாறிக்கொண்டே இருக்க முடியும். இதனைத் தான் கிறிஸ்துவுக்கு முன் ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஹெராகிளிட்டர்ஸ் என்ற அறிஞர் “ஓடும் ஆற்றில் ஒரே நீரின் மீது இரண்டு முறை உன்னால் அடி எடுத்து வைக்க முடியாது” என்கிறார். இதே நிலையாமை தத்துவத்தை தான் புத்தரும் வலியுறுத்துகின்றார். எனவே மாற்றம் என்பது சமூகத்தின் மாறாத நியதி.


மாற்றங்கள் காலம் தோறும் நிகழ்பவை ஆயினும் சமூகத்தில் ஆழமான மற்றும் நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. உதாரணமாக தொழிலாளர்களுக்கான உரிமைகள், முன்னைய காலத்தில் அமெரிக்காவினுடைய தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் 20 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய வேண்டிய தேவை காணப்பட்டது. அதிலிருந்து மாறி தான் பல புரட்சிகளுக்கு பின்னர் இன்று எட்டு அல்லது ஒன்பது மணித்தியாலங்கள் ஒரு தொழிலாளர் வேலை செய்கின்ற நிலை வந்தது.


பெண்களின் உரிமைகளிலும் மாற்றம் வந்துவிட்டது. ஒரு காலத்தில் பாரதி கூட “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்ற கேலியான வினாவை கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு பெண்களுக்கு வீட்டில் சமைப்பதும் கணவனுக்கு சிறந்த துணையாக இருப்பதும்தான் வாழ்க்கைக்கான நியதி என்ற நிலை காணப்பட்டது. அதிலிருந்து மாற்றமுற்று இன்று பெண்கள் மருத்துவம், கலை, விஞ்ஞானம், தொழில்நுட்பம், வானியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றார்கள். இன்றைய காலத்தில் மனிதன் என்ற ரீதியில் அனைவருக்கும் சம சந்தர்ப்பம் சமத்துவமான கல்வி வழங்க வேண்டியது பற்றி கல்வியில் வலியுறுத்தப்படுகின்றது.

அதேபோல சால்ஸ் டாவினுடைய On The Origin of the Species என்ற புத்தகத்தில் கூர்ப்புக் கொள்கையை முன்வைத்துள்ளார். அதில் இன்றைய மனிதன் குரங்கினமாக இருந்து பரிணாம மாற்றமடைந்து தான் இன்றைய நிலை மனிதனாக வந்துள்ளான் என்பதை அந்த கோட்பாடு கூறுகின்றது. அதன்படி “ஒரு சூழலுக்கு ஏற்ப தன்னை இசைவாக்கப்படுத்திக் கொள்ளும் உயிரி அந்த சூழலில் தொடர்ந்து வாழும். எந்த உயிரி தன்னை சூழலுக்கு ஏற்ப தன்னை இசைவாக்கிக் கொள்ள முடியாதோ அந்த உயிரி இனமழிதலுக்கு உள்ளாகும்” என்று கூறுகின்றார். இது உயிரினங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். சமூக தேவைகளுக்கும், நலன்களுக்கும், புதிய தொழில்நுட்ப வருகைக்கும், கலாசார நடைமுறைகளுக்கும் ஏற்ப தன்னை இசைவாக்கிக் கொள்ளாத மனிதன் தொடர்ந்து ஒரு சமூகத்தில் வாழ்வது நடைபெறாத காரியம் ஆகும்.


எனவேதான் மாற்றத்தை பெரும்பாலும் ஏற்காதவர்கள் குறித்த துறையிலேயோ, வாழ்விலோ, சமூகத்திலோ நிலைத்திருப்பது கடினம். உதாரணமாக ஒரு ஆசிரியராக இருந்தால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ZOOM, Google classroom, Modern teaching போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. இவற்றை தனது அறிவிற்குள் புகுத்திக் கொள்ளாவிட்டால் அந்த ஆசிரியராலும் தொடர்ந்து கற்பிக்க முடியாமல் போகும்.


சமூக மாற்றத்தினால் கலாசார விதிகள் மாறுகின்றன. உதாரணமாக ஒரு காலத்தில் பெண்கள் மாலை 6:00 மணியாகி விட்டால் வீட்டிற்குள் வந்து விட வேண்டும் என்ற நிலை பெற்றோரிடம் காணப்பட்டது. ஆனால் இன்று பல்வேறான படித்த பெண்கள் ஐவு கம்பெனிகள் போன்ற உயர் தொழில்நுட்ப கம்பெனிகளில் வேலை செய்கிறார்கள். அங்கு இரவு நேர வேலைக்காக செல்லும்போது பெற்றோர்களே இரவு உணவை தயாரித்துக் கொடுத்து பெண்ணை வழி அனுப்பி வைக்கிறார்கள். இதுதான் கால மாற்றம் என்பதாகும்.

இன்று சமூக மாற்றத்தினால் மேற்கத்திய கலாச்சாரம் எமது சமூகத்தில் விரைவாக ஊடுருவி வருகின்றது. அதன் காரணமாக மனிதர்களின் உணவு, உடை, பழக்கவழக்கங்கள் மற்றும் உறவு நிலைகளிலும் பல்வேறான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இன்று எமது சமூகத்திலும் லிவிங் டுகெதர்(Living together) என்ற முறையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் எந்த ஒரு திருமண தொடர்பும் இல்லாமல் ஒன்றாக ஒரே வீட்டில் கூடி வாழுகின்ற முறையாகும். இம்முறை எமது நாட்டிலும் காணப்படுகின்றது.

இவை ஒழுக்க ரீதியாக பார்க்கின்றபோது சரி, தவறு என இருப்பக்கமும் வாதிட்டுப் பேசக்கூடிய தன்மை காணப்பட்டாலும், இதுதான் காலமாற்றம் இதற்கு ஏற்ப தான் எமது இளைய சமுதாயம் மாறிக்கொண்டு வருகின்றது. இதனால் பல்வேறான தீமைகளும், பிரச்சனைகளும், சமூக முரண்பாடுகளும் ஏற்படுகின்றன என்பதனை உணர்தலும் வேண்டும். எமது இளைய சமுதாயத்திற்கு எது நல்லது, எது நாகரீகம், எது அநாகரீகம் என்பதை உண்மையிலேயே புரிந்து கொள்ள முடியாத தன்மை காணப்படுகின்றது. அது பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுக்கக்கூடிய கருவியாக கல்வி காணப்படுதல் வேண்டும். இதனைத் தான் கவிஞர் கண்ணதாசன் தனது வரிகளில் மிக அழகாகச் சொன்னார்.
“பொய்யான சில பேர்க்கு புதுநாகரீகம்…
புரியாத பல பேருக்கு எது நாகரீகம்…
முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்…
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்….”
அது மட்டுமா முன்பெல்லாம் எமது சமூகத்தில் இரு பாலினங்கள் தான் காணப்பட்டன. அதன்படி ஒருவர் ஒன்று ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.

ஆனால் இன்று எமது சமூகத்தில் மூன்றாம் பாலினம்(Trans Gender) என்ற ஒரு விடயம் வந்திருக்கிறது. இந்த மூன்றாம் பாலினத்தில் திருநங்கை மற்றும் திருநம்பி என்போர் காணப்படுகின்றனர். அதன்படி திருநங்கை என்பவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக வாழ்பவர். அதேபோல திருநம்பி என்றால் பெண்ணாகப் பிறந்து ஆண் போல வாழ்பவர் என்ற மூன்றாம் பாலினமும் எம்முள் வந்து சேர்ந்து விட்டது. எனவே மாற்றங்கள் சமூகத்திற்கு இயற்கையானவை. இத்தகைய மாற்றங்களை நிறுத்தவோ தடுக்கவோ முடியாது. இந்த மாற்றங்களை தனக்குள் புகுத்திக் கொண்டு வாழ்வதற்கு தேவையான வழிவகைகளை கொடுக்கக் கூடியதாக கல்வி முறைமை மாற வேண்டும் என்பதுதான் இன்று கல்விச் சமூகவியலில் சுட்டிக்காட்டப்படுகின்றது.


எனவேதான் கல்வியிலும் இன்று எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன. திறன் வகுப்பறைகள், கணினியை அடிப்படையாகக் கொண்டு கற்றல் கற்பித்தல் செயல்முறைகள், புரொஜெக்டர்கள், மேல்நிலை புரொஜெக்டர்கள் பாவனை, அச்சு உபகரணங்கள் பல்வேறான மென்பொருட்கள் என கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமின்றி பாட விடய உள்ளடக்கத்திலும் பல்வேறு மாற்றங்கள் இன்று வந்துள்ளன. அதன்படி நவீன உலகம் தொழில்நுட்பத்தை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் இன்று காணப்படக்கூடிய ஆல்ஃபா தொழிநுட்ப யுகம்(Generation alpha) என்பது கூடுதலாக திறன் தொழிநுட்பம்(Smarttechnology),செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence), ரோபோ தொழிநுட்பம்(Robotics) போன்ற விடயங்களை படிப்பதை கூடுதலாக பிரதானப்படுத்துகின்றது. எனவே இன்றைய நவீன கல்வி முறைகளும் இவ்வாறான விடயங்களை உணர்ந்து தமது சமுதாயத்தின் தேவை மற்றும் உலகத்தினுடைய தேவைகளுக்கு ஏற்ப புத்திஜீவிகளை உருவாக்கும் விதமாக கலைத்திட்டத்தையும் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டையும் ஒழுங்கமைக்க வேண்டியது ஆசிரியர்களினதும் கல்விசார் ஆளணியினரினதும் கடமையாகும். இப்படி தரமான தொழில்நுட்பங்களைக் கொண்டு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கின்ற போது சிறப்பான மாணவர் வெளியிட்டினையும் பெற முடியும்.

இரா.செந்தமிழ்செல்வன்,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவன்,
கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை,
கலைகலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைகழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *