தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது
காத்திரு
நீ விதைக்கும் உழைப்பு
ஒருநாள் பலன் தரும் மரமாகும்..
பொறுமையோடு காத்திரு
வெறுமையாக இருந்திடாதே..
பெருமை கண்டு மயங்கிடாதே
பரந்த மனதை அடக்கிடாதே..
நன்மைகளை அதிகம் எண்ணு
தீமைகள் சிறிதேனும் அகலும்..
உனை சூழும் வினைகள்
உன் திடத்திற்கான சோதனைகள்..
அனைத்தும் துணிந்து எதிர்த்திடு
உன்னை நீ முதல் நம்பிடு..
அனைத்தும் உன் கைசேரும்
அவமதித்தோர் கைகள் தட்டும்!
-தமிழி ஹம்சி-
அசுரனின் ஆட்டம் – 1
கணனிக்கும் கண் உண்டு
கைபேசிக்கும் கண் உண்டு
உன்னை நீ பாராவிடினும்
எங்கிருந்தோ ஒருவர்
இல்லை இல்லை பலரும்
பார்த்துக்கொண்டே இருப்பர்
நீ ஆணா பெண்ணா
இல்லை திருநம்பி திருநங்கையா
இளமையா முதுமையா
இல்லை கருவை சுமக்கும் தாயா
எதுவும் அவர்கள் அறிவை அடையா
உன் உடல் மெய் சரீரம்
உன் பேச்சு உன் செயல்கள்
அனைத்தும் அவர்கள் அறிவர்
நாட்டை காக்க ஒற்றன்
இருந்த காலம் இன்றில்லை
நாட்டை வீட்டை காட்டி கொடுக்கும்
களங்கம் எனும் சாயம் பூசி
அப்பாவி உயிர்களை கரியாக்கிடும்
கறையாய் நம் சமூகத்தில்
ஒட்டிய பீடை அழிவற்ற சைத்தான்
தொழினுட்ப வளர்ச்சி எனும்
அசுரனின் ஆக்கிரமிப்பு
அழிவுப் பாதையில் மனித குலம்!
-தமிழி ஹம்சி-
அசுரனின் ஆட்டம்- 2
மதுவில் போதை
தூளில் போதை
புகையில் போதை
போதையின் உச்சத்தில்
பெண்கள் துச்சமாக..
சிறுமியும் சிறு குழந்தையும்
கிழவியும் கர்ப்பவதியும்
இளம் பெண்களும்
ஆண்களுமென வேற்றுமையற்று
வேட்டையாடப்படும் அவலமிங்கே..
காமுகர்களாக இளம் சமுதாயம்!
போதை தரும் போதைவஸ்து
வாங்குவதற்கு பணமின்றி
திருடும் திருடர்களாய்
நாளைய தலைமைத்துவம்
கேள்விக்குறியாக இன்று..
தடுப்பதற்கு சட்டமெங்கே
நல்வழிப்படுத்த அடங்குவரா?
நாட்டை நாசம் செய்யும்
நாசகார சைத்தானை
விரட்டியடிக்க முன்வருமா
இன்றைய இளையோர் படை?
-தமிழி ஹம்சி-
அசுரனின் ஆட்டம் – 3
பாலின வேறுபாடின்றி
வயது வித்தியாசமற்று
மனித வதை மிருக வதையென
உயிர்களை வதைத்து
குற்றுயிராக்கி கதறுகையில்
போதை காணும் அவலம்
இந்த உலகில் இன்று..
வலைத்தளங்கள் பல
இதற்கென்றே எக்கசக்கமாய்
உயிரை வதைத்து
பணத்தை பெற்று
உண்டு சொகுசாய்
உறங்கும் சைத்தான்கள்
இப் பூமியிலே பாரமாக..
கள்ள சந்தையும் மோசடிக்காரருமென
அக்கிரமகாரர் ஒன்றுகூடும்
இருண்ட வலைத்தளத்தில்
மேலும் பல இருளான பக்கங்கள்
வெளிவராமலே வேலைகாட்ட
வெறிபிடித்த அரக்கர்களை
வீழ்த்தும் வழி இல்லையா
வீணாகின்றன பல உயிர்கள்!
-தமிழி ஹம்சி-
சுமைதாங்கி
முட்டி மோதும் எண்ணங்கள்
கைவிலங்கு போல யோசனைகள்
காத்திருந்து வீணான காலங்கள்…
உறவென உரிமைகொண்டு
மூக்குடைபட்ட தருணங்கள்…
கடமையென கைகொடுத்து
கைவிடப்பட்ட நொடிகள்…
கடிவாளமில்லா குரங்கின் பயணம்!
-தமிழி ஹம்சி-
தேடல் தொடரும்
நீளட்டும் பாதைகள்
தொடரட்டும் வளைவுகள்
கழியட்டும் பொழுதுகள்
தொலைத்த என்னை
தேடும் கனவுகள்…
இரவிலும் பகலிலும்
இடையூறுகள் கடந்தும்
இலக்குகள் கொண்டும்
இளமை இழந்தும்
தேடல்கள் தொய்வின்றி
தொடர்வதனாலே நானும்
உணர்கிறேன் என்னை…
பெறுமதியற்றவளோ என
பல எண்ணங்கள் என்னுள்
அனைத்தும் நொறுங்கின
என்னை பற்றிய தேடல்
தெளிவுற்ற நொடியில்…
கிடைத்தும் தேடுகிறேன்
என் வேறு பரிமாணங்களை
இவளால் முடியுமென.
-தமிழி ஹம்சி-
கைதாகும் மலர்கள்
கண்ணீர் கடலின் நடுவே
உன் இதயத்திற்கோர் வீடு
காதல் எனும் தனி தீவிலே…
சென்றால் சிறை வாழ்வு தான்
உன் யோசனைகளை இரையாக்கி
காதல் நோயில் நீ பித்தாகி
மனப்பிறழ்வில் அரைநிலை
இலவச இணைப்பாக…
எதிர்காலம் என்னவாகும்
நிகழ்காலம் தொடர்ந்திடுமா
நினைவுகள் நீங்கிடுமா?
இதயத்தில் நிரந்தர வடுவாய்
காதலின் ஞாபகங்கள்…
கடைசி வரை காதல் கைதியாய்
மாறனின் சிறைச்சாலையிலே
சிந்தித்து முடிவெடு சித்திரவதைக்கு!
-தமிழி ஹம்சி-
இதுவா காதல்
உன்னை தேடும்
எந்தன் கண்கள்..
உயிரை குடிக்கும்
உந்தன் பார்வையில்..
கயிறாய் திரியும்
மனதை கடத்தி..
பசலை தீயில்
என்னை இட்டு..
கனவில் உன்னுடன்
காலங்கள் கடந்து..
காயங்கள் ஆற்றும்
தாய்மடியாய் இருந்து..
இதுதான் காதலென
உணர்ந்து விட்டதோ..
-தமிழி ஹம்சி-
மௌனம்
விடையில்லா வினாக்கள்
விடாது துரத்தும் கனாக்கள்
விலக்கி வைக்கும் காலம்
விளக்கிடுமா ஏனென்று
விபரீதமா வாழ்க்கை?
விரையமாகுதே நொடிகள்…
-தமிழி ஹம்சி-
பணம்
ஒரு ஐயாயிரம் ரூபாய் தாள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதி வெறும் ஐயாயிரம் மட்டுமே. அந்த ஐயாயிரம் ரூபாய்க்கு ஒருவன் ஆக ஒரு நேர உணவு வாங்கி உண்ண செலவழிக்கிறான். ஆனால் இன்னொருவன் கையில் அதே ஐயாயிரம் ரூபாய் கிடைத்தால் ஆறு, ஏழு நாட்களுக்கு உணவு உண்டு அவன் பசியை தீர்க்க பயன்படும். இன்னுமொருவருக்கு மருத்துவ செலவுக்கு பயன்பட்டு ஓர் உயிரை காக்கும். ஆக ஒருவனின் உயிரை காக்கும் போது அவன் உயிர்க்கு நிகராகும் பணம், இன்னொருவனின் பல நாள் பசி தீர்த்து அவனை பட்டினியிலிருந்து காக்கின்றது. இன்னொருவனுக்கு அதே பணம் வீணாக
செலவாகிறது. ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப அதன் பெறுமதி மாறுபடும்.
இங்கு பணம் என்பது ஒரு தாள் மட்டுமே. ஒருவர் வைத்திருக்கும் பணத்தை கொண்டு அவரின் தகுதியை, திறமையை மதிப்பிட முடியாது. ஒவ்வொரு தனி நபரின் வாழ்விலும் பணம் ஒவ்வொரு விதமாக அதன்
ஆதிக்கத்தை செலுத்துகிறது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பணத்தை
மையமாக வைத்தே அனைத்தும் நடக்கிறது.
-தமிழி ஹம்சி-
இது போன்ற உங்களுடைய ஆக்கங்களையும் [ கவிதை,சிறுகதை,கதைகள்,கட்டுரை,சித்திரங்கள்,etc ] கீழ் உள்ள எங்களுடைய WhatsApp இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள் எங்களுடைய இணையதளம் மற்றும் எங்களுடைய WhatsApp Group களில் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயார்
🪀 WhatsApp No : 0714814412
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நாங்கள் தயார்.