தாய்
“மகள்.. மகள் .. இங்க வாங்க” எதையும் கேட்காதது போல் மகள் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறாள். தாய் மகள் அருகே வந்து “மகள் நான் கூப்பிடுறது விளங்கல்லயா ? வாப்பா வார நேரமாகுது. சீக்கிரம் சமைச்சு முடிக்கணும் வந்து சின்ன சின்ன உதவிகளை செய்ங்க. எனக்கும் இன்டைக்கு உடம்பு முடியாம இருக்கு தலவலியும் வேற”
“உம்மா கொஞ்ச நேரம் இந்த படத்த பார்த்து முடிச்சிட்டு வாரேன்மா ப்ளீஸ்” தொலைக்காட்சியை ஆப் செய்கிறாள் உம்மா. உங்களுக்கு எப்ப பார்த்தாலும் எனக்கிட்ட வேலை சொல்றதுதான் உங்க வேலையாப் போச்சு” எனக் கூறிக் கொண்டே மகள் சமையலறை செல்கிறாள்.
“உம்மா இன்னைக்கு கறி என்ன?”
” வாப்பா கொஞ்ச நாளா வேலைக்கு போகல அதனால இன்னைக்கு மரக்கறி தான்… அந்த தேங்காய துருவி தா மகள்”
“உம்மா எனக்கு இன்னைக்கு இந்த கறி புடிக்கல. எனக்கு பிடிக்காத மாதிரி சமைக்கீங்க வேல செய்ய எனக்கு ஏலா நீங்களே செய்ங்க.” என சாட்டு சொல்ல வாய்ப்பு கிடைத்ததை பயன்படுத்திக் கொண்டு பக்கத்து வீட்டு பெரியம்மாவின் வீட்டிற்கு தன் கால்களை நகர்த்துகிறாள்.
“இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு நினைச்ச மாதிரி கறி வேணும் வீட்டு நிலமைய அதுகள் நினைச்சுக்கூட பாக்குதுமில்ல” என தனக்குள்ளே புலம்பியவாறு சமைக்கிறாள் தாய். ஐயோ… தல ரொம்ப வலிக்குது… இடுப்பு வேற எழும்ப முடியாம ரொம்ப நோவா இருக்கு ஒத்த புள்ளைய பெத்ததால உதவிக்கொரு துணை இல்ல. அவரும் சாப்பாட்டுக்கு வரும் நேரமாச்சு” என தன் உடல் அசதிகளையும் சமாளித்துக் கொண்டு சமைத்து முடிக்கிறாள் உம்மா.
தொலைபேசி அழைப்பு வருகின்றது.
“ஹலோ… யாரு?”
“றினா இல்லயா ?” என அவளின் தோழி வினவ “றினா பெரியம்மாட வீட்ட போயிருக்கு ஐந்து நிமிஷம் கழிச்சு எடுக்கிங்களா மகள்”
“ஓகே” என்று சொல்லி போனை கட் செய்கிறாள் சீமா. “றினா எங்க ராத்தா றினா வந்தலா”
“ஓ அங்க ரூமுக்க கதைச்சிட்டு இருக்காங்க”
“ஆரோ புள்ள காேல் எடுத்துச்சு அதை சொல்லத்தான் வந்த”
“இப்ப இடுப்பு நோவு தலவலி எல்லாம் எப்படி இருக்கு “
“அப்படித்தான் இருக்கு கொஞ்சமும் குறையல்ல நாளைக்கு ஹாஸ்பிடல் போய் செக் பண்ணனும்”
“நீ இதத்தான் டெய்லி சொல்லிட்டு இருக்காய் நாளைக்காச்சும் போய் மருந்து எடு”
” ம்ம்” எனக் கூறினாள் றினாவின் தாய்.
றினாவும், தாயும் வீட்டை வந்தடைகிறார்கள். தொலைபேசியை எடுத்து தனது தோழிக்கு அழைப்பெடுத்து நீண்ட நேரம் பேசுகிறாள்.
“எனக்கு தூக்கம் வருது நாளைக்கு பேசுறன் குட் நைட்” என சொல்லிக்கொண்டு போனை கட் பண்ணுகிறாள் றினாவின் தோழி.
“எனக்கு தூக்கம் வந்தும் தூங்காம பேசிட்டு இருந்தன். அவளுக்கு தூக்கம் வரயும் தூங்க போறேன்னு சொல்றா. இதான் பிரண்ட்ஷிப்” என மனதிற்குள் முனுமுனுத்துக் கொண்டு தூங்கப் போனாள்.
காலை 8 மணியாகியும் எழும்பாம தூங்கும் றினாவை எழுப்புகிறாள் உம்மா. “றினா விடிஞ்சு எவ்வளவு நேரமாச்சி இன்னுமா தூங்குறாய்… எழும்பு….”
“இன்னும் கொஞ்ச நேரம் விடும்மா” “எழும்பு” என எழுப்புகிறாள் உம்மா.. காலையில என்ன சாப்பாடு என மேசையின் மேல் வைத்திருந்த சாப்பாட்டை பார்க்கிறாள். “இது என்ன? இந்த சாப்பாடு எனக்கு வேணாம்… என்ட வயசு பிள்ளைகள் வேற ஊட்டுல விரும்புற சாப்பாடெல்லாம் பெத்தவங்க வாங்கி கொடுப்பாங்க எனக்கு தான் நான் விரும்புற மாதிரி சாப்பாடு எல்லாம் வாங்கி தாரீங்க இல்ல… “
“ஏன் றினா… இப்படி பேசுற… நீ ஆசைப்படுற சாப்பாடு எல்லாம் வாப்பா உனக்கு வாங்கி தாரார்தானே… உடம்பு ஆரோக்கியம் கெடுற சாப்பாடு எல்லாம் சாப்பிடக்கூடாதுதானே வாங்குறல்ல வாப்பாக்கும் தொழில் இல்ல.. எனக்கும் சுகம் இல்ல… இத ஏன் றினா நீ புரிஞ்சுக்கிறாய் இல்ல.. எல்லாத்துக்கும் அடம்பிடிச்சி கோவிக்கிற…”
” என்ட வயசு புள்ளைகள் எவ்வளவு வகை வகையா ட்ரெஸ் போட்டுட்டு வாராங்க அவங்களுக்கு முன்னாடி நானும் நல்லா ட்ரெஸ் போட்டுட்டு போகணும்…”
மகள் அடுத்தவங்கள போல வாழனும்னு ஆசப்படக்கூடாது நமக்கிட்ட எது இருக்கோ அதவச்சி வாழ பழகிக்கனும்… அடுத்தவங்களுக்காக வாழ்ந்தா நிம்மதி இழந்து கடன் காரனாத்தான வாழனும் . இருக்கிறத வச்சி நிம்மதியா வாழ பழகுங்க”
“உம்மா உங்களோட பழைய காலத்து தத்துவத்தை விடுங்க. அந்த காலம் வேற இந்த காலம் வேற… எனக்கு 10,000 ரூபா வேணும். ட்ரெஸ் வாங்கனும் எப்படியாச்சிம் வாங்கி தாங்க..” எனக்கூறிக் கொண்டே புத்தகத்தை புரட்டி படிக்க ஆரம்பிக்கிறாள் றினா.
மகள் பேசியதை மனதிற்குள் நினைத்துக் கொண்டு தனது வைத்திய செலவிற்கு சேர்த்த பணத்தை கையிலெடுக்கிறாள் தாய். … தன் கணவன் கூப்பிடும் சத்தம். திரும்பி பார்க்கிறாள்.
“நீ இன்டைக்கு மருந்தெடுக்க போகலையா? வருத்தம் வருத்தம் என்று சொல்லிட்டு இருக்காய் . உங்க ராத்தா சொன்னா ஹாஸ்பிடல் நீ போகலன்னு ….
“அது இருக்கட்டும் நாளைக்கு இன்ஷா அல்லாஹ் போறன். உங்க கைக்கு மருந்து எடுத்தீங்களா? கை எல்லாம் புண்ணா போய் இருக்கு. ஏங்க இப்படி கஷ்டமான வேலை எல்லாம் செய்றீங்க?”
நான் சம்பாதிக்காட்டி யாரு நம்ம குடும்பத்தை பாப்பாங்க.. உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் செய்றன்” என வாய்க்குள் இருந்த தண்ணீரை கொப்பளித்துக்கொண்டு தோளில் துண்டை போட்டுக்கொண்டு மண்வெட்டியை மறுதோளில் வைத்து வெளியே வேலைக்கு செல்கிறார் தந்தை.
“இந்த வீட்டை கொஞ்சம் தூருங்க மகள்.. எனக்கு தலைவலி பனடோலும் , தண்ணியும் எடுத்து தாங்க மகள்…”
“இந்தாங்க பெனடோல், தண்ணி… வீட்ட எல்லாம் என்னால கூட்ட ஏலாது. லீவுல வீட்ட வந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சா வேலதான் சொல்லிட்டு இருக்கிங்க.. எப்படா லீவு முடியும்னு இருக்கு..”
“றினா… என்னால முடியும்னா நான் செய்வன். முடியாம இருக்கபோகயும்தானே சொல்றன்.” காதில் வாங்காமல் செல்கிறாள்.
மறுநாள் தாய் … “நான் மருந்தெடுக்க வைத்தியசாலைக்கு போறன்… மகள் … லேசா எனக்கு தலசுத்து வாரமாதரி இருக்கு நீ துணைக்கு வந்தா ஆறுதலா இருக்கும்.”
“உம்மா இன்டைக்கி ப்ரெண்ஸ்சோட கெட்டுகெத வருஷத்துல ஒருதடவதான். இப்ப போகாம விட்டா இனி அடுத்த வருஷம்தான். நீ ஆட்டோல போய்ட்டு வாம்மா”
மனதிற்குள் தாங்கமுடியா வலியுடன் தாய் மௌனமாய் வைத்தியசாலை செல்கிறாள். அவளை அறியாமலே கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வீடு வந்து சேர்ந்தும் அவளின் கண்ணீர் நதிபோல் ஓடிக்கொண்டிருந்தது.
மகள் றினாவோ நண்பிகளுடன் கொண்டாட்டம். றினா தோழியின் வீட்டில் தனது இன்னொரு தோழிக்கு கோல் செய்கிறாள். ஹலோ… சஸ்னாவா..
“இன்னைக்கி கெட்டுகெத எல்லாரும் வந்துட்டாங்க நீ மட்டும்தான் வரல மறந்துட்டியா … ?”
“இல்ல றினா.. எனக்கு வர முடியாத சூழ்நிலை அதனாலதான் வரல…”
” அப்படி என்ன சூழ்நில”
“அத அப்புறம் சொல்றன். நீ என்ஜோய் பண்ணு..நான் இப்போ பிஸியா இருக்கன். பிறகு பேசுறன்.”
“ஓகே சஸ்னா” போனை கட் பண்ணுகிறாள் றினா.
மாலை ஜந்து மணிக்கு றினா வீடு வருகிறாள். தாய் திண்ணையிலே உறங்கிக் கொண்டிருக்கிறாள். உம்மா நாளைக்கு யுனிவர்சிடி ஸ்டார்ட்டாகப்போகுது. நான் போகனும்.நீ மருந்தெடுக்க போனலா… டாக்டர் என்ன சொன்னார்?”
“ரெஸ்ட் எடுக்க சொன்னார்.”
“ம்ம்.. மறக்காம குளிசைய போடு” என மகள் கூறினாள். மறுநாள் காலை மகள் யுனிவர்சிடி போகிறாள். தாயோ தனி அறையில் உட்கார்ந்து விம்மி விம்மி அழுகிறாள்.
ராத்தா…. ராத்தா… என அவளின் பக்கத்து வீட்டுக்காரி கூப்பிடுகிறாள். “ஏன் அழுவுற? ராத்தா… என்ன நடந்த?” என அவளின் கண்ணீரிற்கு காரணம் அறிய ஆவலுடன் கேட்கிறாள்…
பக்கத்திலிருந்த துணியை எடுத்து தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு “என்ட உம்மாவ நினைச்சிதான் அழுவுறன். இப்ப நான் பர்ர இந்த கஷ்டத்தத்தான் எங்கு உம்மா அப்போ பட்டிருக்கான்னு என் மகள் எனக்கு செஞ்சதால நான் என்ட தாய்ட வலிய உணர்ரன். எங்கும்மா சுகமில்லனு சொல்லி வேல செய்ய சொல்வா, காசு இல்ல இருக்குறத வச்சி வாழ சொல்வா , வீணா நேரத்த செலவுபண்றதவிட அவகூட அரநிமிசமாவது பேசு ஆறுதலா இருக்கும்னு சொல்வா… அப்போ நான் எதையுமே செய்யல எங்கும்மாவ ரொம்ப கஷ்டப்படுத்திருக்கன்னு என் பொண்ணு எனக்கு செஞ்சப்போதான் அந்த வலிய உணர்ரன். எங்கும்மாட்ட எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்கனும்னு மனசு துடிக்குது..”
அவதான் இப்போ உயிரோட இல்லயே… எங்கும்மா சுகமில்லாம படுத்திருந்தப்போ நான் உதவிசெய்யாம வேல சொன்னா ஒரே வேலதான் சொல்றன்னு உதாசீனமா போயிருக்கன்.அத என்டமகள் எனக்கு செய்றதால நான் செஞ்சது நினைவு வந்து என்மனசு கடந்தகாலம் போய் அழுவுது… “
“விடு ராத்தா இந்தகால புள்ளயல் எது சொன்னா கேட்குது..அதுகலா புத்தி புடிபட்டு திருந்தினாத்தான்.”என கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு சென்றாள்.
றினா யுனிவர்சிட்டியில் தனது தோழி சஸ்னாவை சந்திக்கிறாள். “ஏன் சஸ்னா நேத்து நீ வரல? செம்ம எஞ்சாய்.. மிஸ் பண்ணிட்டாய்..”
“எங்க உம்மாக்கு சுகம் இல்லை. சரியான காய்ச்சல் உம்மாவை தனியா விட்டுட்டு எப்படி வார நமக்கு ஒன்னுனா உம்மா எவ்வளவு அக்கறையா பாக்குறாங்க பெத்தவங்க சுகமில்லாமல் இருக்கும் போது நாமதானே பார்த்துக்கனும்.
கிடைச்ச லீவ தாய நல்லா பார்த்துகிட்ட மனத்திருப்தி எனக்கு” என சஸ்னா கூற குற்ற உணர்ச்சியில் தலை குனிகிறாள் றினா. றினாவிற்கு கொஞ்சம் சுகம் இல்லாமல் போனாலும் தனது தாய் அக்கறையாய் பார்த்துக் கொண்டது கண்களில் காட்சியாய்த் தோன்றியது. தனது தவறை உணர்ந்து அழுகிறாள் தாய்க்கு காேல் பண்ணுகிறாள்.
“இப்ப உடம்பு எப்படிமா இருக்கு என்ன மன்னிச்சிடுமா.. உன் கூட இருந்தும் உன்ன அக்கறையா அன்பா பாக்காம விட்டுட்டேன். இப்போதான் உணர்றன். ஐ லவ் யூ மா… ஐ மிஸ் யூ மா… நாளைக்கு யுனிவர்சிட்டி இல்லன்னு வீட்டை போய் ஒரு வாரம் கழிச்சு வர சொன்னாங்கமா.. நாளைக்கு வாரேன். “
தாயின் மனம் குளிர்ந்தது. கிடைத்த ஒரு வார லீவில் தன் தாய்க்கு பணிவிடை செய்து தாயோடு மனம் விட்டு பேசுகிறாள். மகளின் பாச வார்த்தையும் அக்கறை கலந்த அன்பும் தாயின் சுகவீனத்தை குறைத்தது. மன மகிழ்வோடு றினாவின் தந்தையும் ஆனந்த கண்ணீர் சிந்தினார். றினாவிற்கு கோல் வருகின்றது.
“ஹலோ றினாவா … சுகம் இல்லைன்னு சொல்லி வீட்டுக்கு லீவுல போனியே இப்போ எப்படி குணமா உனக்கு?”
மனதிற்குள் புன்னகைத்தவளாய் “சுகம் இல்லாமதான் இருந்துச்சு… இப்ப இந்த மனசு ஆரோக்கியமா இருக்கு” என மனதிற்குள் எண்ணிக்கொண்டு.. தன் தோழியிடம் “இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன் .. ரொம்ப ஆரோக்கியமா இருக்கன். தேங்க்ஸ் சஸ்னா” என தோழியிடம் கூறினாள்.
“எதுக்கு தேங்க்ஸ் சொல்ற… நான் என்ன செஞ்சேன்? நீ தேங்க்ஸ் சொல்வதற்கு” என றினாவை நோக்கி கேட்கிறாள். அதற்கு றினா “தோனிச்சி சொன்னேன்” என சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறாள். இப்போது தாயும் தந்தையும் மனமகிழ்வோடு ஒன்றாக சேர்ந்து றினாவை யுனிவர்சிட்டிக்கு வழி அனுப்பி வைக்கிறார்கள். தன் மகளின் பாசம் முழுமையாக கிடைத்த ஆனந்த கண்ணீரோடு….
மஜினா உமறுலெவ்வை
மாவடிப்பள்ளி.
இந்த கதை பற்றிய உங்களுடைய கருத்துகளை கீழே Comments யில் தெரிவிக்கவும் அல்லது கீழே உள்ள WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்
☎️ WhatsApp No : 0714814412