பண்பாட்டு வளர்ச்சியில் கல்வியின் பங்களிப்பு

கல்வி

பண்பாட்டு வளர்ச்சியில் கல்வியின் பங்களிப்பு

பண்பாட்டு வளர்ச்சியில் கல்வியின் பங்கு மகத்தானது இளம் சமூதாயத்தினருக்கு அவர்களது பண்பாட்டு அம்சங்களை கையளிப்புச் செய்கின்ற வழி கல்வியாகும். ஒரு நாட்டின் பண்பாட்டில் முழுமையாக இசைந்து வாழ, அப்பண்பாட்டினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வை அதன் உறுப்பினர்கள் பெற்றிருக்க வேண்டும்.

கல்வியின் வாயிலாக குழந்தைகளும் சமூதாயத்தின் புதிய உறுப்பினர்களும் பண்பாட்டுச் செய்திகளைப் பெற்று அதன் சூழலோடு வாழ முயல்கின்றனர். அதாவது பண்பாட்டின் இயல்புகளை மனிதனுக்கு அறிமுகப்படுத்துவதும் ஏற்றுக் கொள்ளப்பட முறைகளைப் பயன்படுத்தி அதோடு இசைந்து வாழச் செய்வதும் கல்வியின் முக்கிய பணியாகும்.

பண்பாடு தொடர்பான அனைத்து விழாக்களையும் பாடசாலையில் நடார்த்துதல், அதாவது பண்பாடு தொடர்பான தியானம், பூசைகள், இசை நிகழ்ச்சிகள், ஒவ்வொரு மதக் கொள்கைகளையும் பின்பற்றுவோர்களது வணக்க முறைகள் போன்ற அனைத்து அம்சங்களையும் பாடசாலையில் நடை முறைப்படுத்துவதோடு அதனை அவர்களது வாழ்வில் பின்பற்றுவதற்காக சந்தர்ப்பங்கள் மற்றம் பழக்கங்களை உருவாக்கி கல்விச் செயற்பாடுகளின் மூலம் பண்பாடுகளை வளர்த்துச் செல்ல முடிகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். உதாரணமாக பாடசாலையில் தியானப் பயிற்சிகளை வழங்குதல் அதனை வீடுகளிலும் செயற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல். இதன் மூலம் ஆன்மீக அறிவியல் கருத்துக்களானது மாணவர்கள் மத்தியில் வளர்வதற்கான சந்தர்ப்பமானது அதிகமாகக் காணப்படுதல்.

கல்வியும் பண்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கல்வி வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. இதன் மூலமாகச் சமூதாயம் உயர்நிலையை அடைகின்றது. அதாவது பண்பாடு இல்லையென்றால் ஒரு பிள்ளையினால் தனது கல்வியினை சிறப்பாக கொண்டு செல்லமுடியாது. ஆகையினால் பண்பாடானது கல்வி கற்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் மிகவும் அவசியமானதாகும். உதாரணமாக பாடசாலைகளில் நடைபெறும் பண்பாட்டை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம். அதாவது விளையாட்டு போட்டியின் போது வினோத உடைகள், காலைப் பிரார்த்தனை, சமய நிகழ்வுகள், சைவ சமய விழாக்களின் போது கலாசார ஆடை அணிதல். (ஆண்கள் வேட்டி மற்றும் சட்டை, பெண்கள் பட்டுப்பாவாடை, தாவணி, புடவை.)

பண்பாட்டு அம்சங்கள் பற்றிய அறிவானது கல்வி மூலம் மாணவர்களுக்குச் சென்றடைவதற்கான வாய்ப்பானது அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது மாணவர்களுக்கு பல வகையான பாடங்களைக் கற்பிக்கும் போதும் பண்பாட்டு அம்சங்கள் தொடர்பான அறிவானது வளர்ச்சி அடைவதற்கான சந்தர்ப்பமானது அதிகமாகக் காணப்படுகின்றது. உதாரணமாக பாடங்களைக் கற்பிக்கும் போது பண்பாட்டு அம்சங்களாகக் கொள்ளப்படுகின்ற ஆலயங்கள், சிறப்புவாய்ந்த பழமைப் பண்பாட்டினைப் பேணும் கட்டிடங்கள் மற்றும் ஒவியங்கள் போன்றவற்றின் அம்சங்களை ஆசிரியர்கள் எடுத்துரைப்பதற்கும் அவை பற்றிய அறிவனை மாணவர்களுக்கு வழங்குவதற்குமான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்துவதாக பாடசாலையானது விளங்குகின்றது. மேலும் கோவில்கள், சிற்பக்கலை, மற்றும் மற்றும் கட்டிடக்கலை இவற்றினைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கல்வி என்பது பொதுவானது அதன் மூலம் பாடசாலைகளில் பண்பாடு பரப்பப்படுகின்றது. இதன் மூலமாக சமூதாயம் உயர்நிலையடைகின்றது. பண்பாட்டின் மூலம் சமூதாயமானது உயர் நிலையை அடைகின்றது. சமூதாயத்தில் இடம்பெறும் பாரம்பரிய நிகழ்வுகளை எடுத்துக்காட்டலாம். உதாரணமாக கோவில் திருவிழாக்கள், விரதங்கள், கலாசார நிகழ்வுகள், சடங்குகள்.

கல்வியானது பண்பாட்டுப் பாரம்பரியங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றாற்போல் பண்பாடானது வளர்ச்சியடைகின்றது. கல்வியானது எதிர்பார்ப்புள்ள புதிய சமூதாயக் கருத்துக்களை பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. மாறுபடும் தேவைகளுக்கு ஏற்ப தனி மனிதன் ஒருவன் கலாசாரப் பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் திறனை வழங்குகின்றன.

இளைஞர்களிடையே அறிவை உருவாக்குவதற்கும் பரப்புவதற்கும் கல்வி நிறுவனங்களின் பங்கானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. பண்பாட்டினை வளர்த்தெடுப்பதில் இளஞர்களின் பங்கானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. உதாரணமாக, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவை இச்செயற்பாடுகளில் முன்னேற்றமான வகிபங்கினை வகிப்பதனை அவதானிக்க முடிகின்றது. இவர்களின் மூலமே பண்பாடு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான வீதி நாடகங்கள் போன்றவற்றினையும் ஏற்பாடு செய்து சமூகத்தில் வழங்குபவர்களாகக் காணப்படுகிறன்றார்கள்.

கல்வி மற்றும் கல்வி நிறுவனங்கள் என்பன பண்பாட்டைப் பாதுகாத்தல், பண்பாட்டைப் பரப்புதல், பண்பாட்டை வளர்த்தல் ஆகியவற்றிற்குப் பெரும் பங்கு வகிக்கின்றது, பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் என்பன பண்பாட்டை வளர்ப்பதில் உறுதுணையான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

பண்பாடுகளில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கல்வி அவசியமாகிறது. பண்பாடு என்பது தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வரும் ஒன்றாகும். பண்பாடு சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சாமர்த்தியத்தை தனிமனிதரால் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏனையவர்களின் உதவியை நாடாது தமக்குள்ளே கலந்தாலோசித்து சரியான முடிவுகளை எடுப்பதற்கு பண்பாடே இன்றியமையாததாகும்.

எனவே கல்வியானது பண்பாட்டினை மேம்படுத்துகின்றது, சமூதாய நிலமைகளைப் பிரதிபலிப்பதோடு நிற்காமல் சமூதாயத்தை மேம்படுத்துவதும் வேகமாக வளர்ந்து வரும் உலகத்தோடு பொருந்தி வாழவும் சமூதாயத்தின் தேவைப்படாத புதிய கருத்துக்கள் நம்மை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளவும், பண்பாடு வழிகாட்ட வேண்டும். கண்மூடித்தனமாகப் புதிய வளர்ச்சிகளைப் பின்பற்றாமல் கல்வி வழியாக கடந்த காலத்தை மதிப்பிட்டு, நிகழ்காலத்தைப் புரிந்து கொண்டு, எதிர்காலத்தைச் சந்திக்கத் தயாராக இருத்தல் வேண்டும். மாணவர்கள் கடந்த கால உன்னத எண்ணங்களால் தூண்டப்பட்டு, வலிமைமிக்க நிகழ்காலத்தில் வாழ்ந்து எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எதிர் கொள்ள கல்விப் பண்பாட்டுப் பாரம்பரியம் மிகவும் அவசியமானது.

சிவசேகரம் ராதிகா,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *