பாடசாலைகளில் சமூக வகுப்புகள்
ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்தவுடன் குடும்பத்திலேயே தங்கி இருக்கிறான். அவன் வளர்ச்சி அடைந்ததும் சமூகத்தில் தங்கி இருக்கின்றான். ஒருவனது பிறப்பு முதல் இறப்பு வரை அவன் என்ன செய்கிறான் என்பதினை இந்த சமூகம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு மனிதனின் வாழ்க்கையை சமூகம் தான் தீர்மானிக்கின்றது.
சமூகம் என்னும் போது சமூகத்தின் வாழ்க்கை கட்டமைப்புகள் சமூக பகுப்புகள் மனிதனின் அங்கம் ஆகின்றன. எமது சமூகத்தை பொறுத்தவரையில் பெருந்தொட்ட தொழிலாளர்களின் வருகையுடன் உயர்ந்த சமூகம், தாழ்ந்த சமூகம் என்ற ரீதியில் சமூக அடுக்கு அமைப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் சமூக வகுப்பு என்பது ஒரு சமூகத்தில் உள்ள தனியாட்கள் அல்லது குழுக்களுக்கு இடையில் படிமுறை அமைப்பிற்கான வேறுபாடு ஆகும். சமூக வகுப்புகள் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டபோதும் பெருமளவிலாக உயர் சமூக வகுப்பு, மத்திய சமூக வகுப்பு, கீழ் வகுப்பு அல்லது சாதாரண வகுப்பு என்ற வகையில் பிரிக்கப்படுகிறது. ஒரு நாட்டில் காணப்படும் சமூக வகுப்புகளை இணங்காண்பதற்கு பொருளாதாரம், மொழி, கல்வி, தொழில், அந்தஸ்து,வாழும் பிரதேசத்தின் தன்மை,சமூக உறவுகள், சமூக வகிப்பாகம், தனிப்பட்ட ஆற்றல்கள், நடை, உடை, பாவனை என்பன உதவுகின்றன.
சமூக வகுப்புகள் கல்வியின் மீது பாரிய செல்வாக்கு செலுத்துகின்றமையினை இக்கட்டுரையின் முடிவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பர்னிஸ்டைன் என்பவரின் கருத்துப்படி, “ஒரு பிள்ளையின் சொற்களஞ்சியம், சொற்பிரயோகம், வாக்கிய அமைப்பு,மொழி மற்றும் எண்ணக்கரு விருத்தி போன்ற அனைத்தும் சமூக வகுப்புகளுக்கு அமைய வேறுபடும்”; என்கின்றார்.
அதற்கமைவாக மாணவர்களது அடைவு மட்டம், மாணவர் நடத்தை, பிள்ளைகளின் மாணவர்களின் மனப்பாங்கு, மொழி, தேர்ச்சி, திறன், பெற்றோரின் நேர்மையான வலியுறுத்தல், பாடசாலையின் வகைப்பாடு, கற்றல் கற்பித்தல் வளங்கள், பாடத்துறை தேர்வு, பாடசாலை வளங்கள், மாணவர் ஒழுக்கம், கல்வி முறைக்குள் நுழைதல், பாடசாலை தெரிவு, கல்விப் பயன்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி சார்ந்த காரணிகளிலும் சமூக வகுப்பு செல்வாக்கு செலுத்துகின்றமையினைக் காணலாம்.
குறிப்பாக பெருந்தோட்ட பாடசாலைகளிலனை நோக்குமிடத்தில் வளங்களினை வழங்கும் போது உயர் சமூக வகுப்பினை கொண்ட சமூகத்தினருக்கு அதிகமாகவும், சாதாரண வகுப்பு சமூகத்தினருக்கு நான்கில் ஒரு பங்கு மாத்திரமே வழங்கப்படுகின்றமையினை அறிய முடிகின்றது. இதன் காரணமாகவே இன்றைய சூழ்நிலையில் சாதாரண வகுப்பு மாணவர்களும் தங்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட துணிந்தாலும் அவர்களுக்கான வளங்கள் சரியாக பகிரப்படாமை கற்றல் அடைவு மட்டத்தினைப் பாதிக்கின்றது.
இதனை இழிவளவாக்குவதற்கு கற்றல் கற்பித்தல் செயன்முறையின் போது பயன்படுத்தக்கூடிய கற்றல் கற்பித்தல் வளங்களை பாரபட்சமின்றி சமத்துவ தன்மையுடன் சமூக வகுப்புகளை கருத்தில் கொள்ளாது பகிர்ந்தளித்தல் வேண்டும். இதனூடாக மத்திய வகுப்பு மற்றும் கீழ் வகுப்பில் காணப்படும் மாணவர்களும் பயனடைய வழி ஏற்படுகின்றது.
இன்று பாடசாலைகளை பொறுத்தவரையில் மாணவர்கள் சமூக வகுப்பின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு உள்வாங்கப்படுகின்றமையினை அறிய முடிகின்றது. எடுத்துக்காட்டாக பாடசாலையிலே நடைபெறும் தமிழ் தின போட்டி அல்லது ஆங்கிலத் தின போட்டி போன்றவற்றிற்கு மாணவ குழுக்களை தேர்வு செய்யும் போது உயர்ந்த சமூக வகுப்பை சேர்ந்தவர்களை தனியாகவும் கீழ் வகுப்பிலுள்ள மாணவர்களை தனியாகவும் பிரித்து அதில் உயர்ந்த சமூக வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுகிறமையினை அவதானிக்க முடிகின்றது.
பாடசாலை மட்டத்திலேயே மாணவர்களுக்கு சமூக வகுப்பு என்ற எண்ணக்கரு இதன் போது விதைக்கப்படுகின்றமையானது கவலைக்குரியது. அதுமட்டுமல்லாது, பாடசாலையில் உயர்ந்த இடத்தில் காணப்படும் பெற்றோரின் பிள்ளைகளை மாணவத் தலைவர்களாகவும், சாரணர் இயக்கம் மற்றும் வகுப்பு தலைவர்களாகவும் தெரிவு செய்யப்படுகின்றமையினைக் காணலாம். சமூக அந்தஸத்தின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுகின்றமையானது இன்று பாடசாலையில் அரசியலினை விதைப்பதற்கு ஒப்பானதாகும். எடுத்துக்காட்டாக வைத்தியரின் மகனுக்கு மாணவத் தலைவர் பதவியை வழங்குவதும் விவசாயியின் மகனுக்கு திறமை இருந்தும் அவன் புறக்கணிக்கப்படுவதும் எமது சமூகத்தில் நடந்தேறிய வண்ணமே காணப்படுகின்றது.
இன்று மாணவர்கள் கற்கும் பாடசாலைகளைத் தெரிவு செய்தலிலும் கூட சமூக வகுப்பின் தாக்கமே செல்வாக்கு செலுத்துகின்றது. உயர் அந்தஸத்தில் காணப்படும் பெற்றோர்கள் தங்களது பிள்ளையை சர்வதேச பாடசாலைகளிலும், தனியார் பாடசாலைகளிலும், தேசிய பாடசாலைகள் மற்றும் 1AB பாடசாலைகளில் உள் நுழைப்பதற்கு எண்ணிலடங்கா பிரயத்தனங்களினை மேற்கொள்கின்றனர்.
தங்களுக்குத் தெரிந்த அரசியல்வாதிகளை நாடுதல், கல்விசார் ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்குதல், பாடசாலையுடன் மறைமுகமாக தொடர்புப்படுதல் போன்றவற்றுடன் தங்களது பிள்ளைகளை உயர் பாடசாலைகளில் உள் நுழைப்பதற்கு போராடுகின்றனர். தற்காலத்தில் பிள்ளைகளை அரசு பாடசாலைகளில் சேர்ப்பதற்கு கூட உயர் சமூக வகுப்பை சேர்ந்தவர்கள் பணத்தில் தங்கியிருக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.
கீழ் வகுப்பை சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும்போது அபிவிருத்திக்காக அறவிடும் பணத்தை கூட செலுத்துவதற்கு வாய்ப்பற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இன்னும் சிலர் குறைந்த வசதிகளை உடைய பாடசாலைகளில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்கின்றனர். வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாமையும் சமூக வகுப்பின் தாக்கத்திலேயே தங்கி உள்ளது. மாணவர்களின் பாடசாலை தெரிவில் கூட சமூக வகுப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செல்வாக்கு செலுத்துகின்றமையினை நடைமுறையில் எம் கண்கூடாக காணலாம்.
எமது நாட்டை பொறுத்தவரையில் வைத்தியரின் பிள்ளை வைத்தியர் ஆவதற்கும், ஆசிரியரின் பிள்ளை வைத்தியர் ஆவதற்கும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் ஒரு தொழிலாளியின் பிள்ளை ஆசிரியர் ஆவதற்கு எந்த அளவு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கேள்விக்குறியே.
சமூகத்தில் தங்கி இருப்பவர்களின் உயர் தொழிலை நிர்ணயிப்பது சமூக வகுப்புகளே. பாடசாலைகளை பொருத்தமட்டில் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பாடசாலையை விடுத்து பாடசாலையில் உள்ள ஆசிரியர்களால் அவர்களுக்கு தனியார் வகுப்புகளிலும் கற்பிக்கப்படுகின்றன. கீழ் வகுப்பை சேர்ந்தவர்களுக்கோ அல்லது மத்திய வகுப்பை சேர்ந்தவர்களுக்கோ தங்களால் இயலுமான அளவு பணத்தை செலுத்தி தனியார் வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு கூட பொருளாதார பற்றாக்குறை காணப்படுவது கவலைக்குரியதே.
எமது நாட்டைப் பொறுத்த வரையில் அநேகமான ஆசிரியர்கள் மத்திய தர வகுப்பினராக காணப்படுகின்றமையும் அவர்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலைகள் பின்தங்கிய கிராமங்களில் காணப்படுவதனையும் அறிய முடிகின்றது. உயர்வகுப்பை சார்ந்தவருக்கு தனியான பாடசாலைகள், தனியான போக்குவரத்து வசதிகள் என்பன காணப்படுகின்றன. இந்நிலையில் கீழ் வகுப்பைச் சார்ந்தோருக்கு மாத்திரம் அரச கலவன் பாடசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணும் அளவுக்கு பின் தங்கிய பாடசாலைகளில் பெரும்பாலும் கீழ் வகுப்பை சேர்ந்தோரின் பிள்ளைகளே கல்வி கற்கின்றனர். கல்வி கட்டமைப்பை பொறுத்தவரையில் இந்நிலை பெரும்பாலும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது.
அதேபோல உயர் சமூக வகுப்பை சார்ந்தவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்படும் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் கீழ் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்குமிடையில் வித்தியாசம் காணப்படுவதனையும் அறியலாம். குறிப்பாக உயர் சமூகத்தினை சார்ந்தவர்கள் கற்கும் பாடசாலைகளில் இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு தேவையான அனைத்து கற்றல் கற்பித்தல் உபகரணங்களும் அளவுக்கு அதிகமாக காணப்படுகின்றது. கீழ் வகுப்பு பிள்ளைகள் கற்கும் பாடசாலையில் மாத்திரம் வளப்பகிர்வு சமமின்மையினையும், அடிப்படையான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் கூட இன்மையினையும் அறியலாம்.
அதுமட்டுமல்லாது இலங்கை நாட்டில் சில தொழில்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்ற கௌரவம் ஏனைய நாடுகளில் வழங்கப்படுவதே இல்லை. அதுபோலவே கௌரவமிக்க தொழில்களில் உள்ளோரின் பிள்ளைகளை மாத்திரம் பாடசாலைகளில் தனியாக கவனிக்கின்ற போக்கு காணப்படவே செய்கின்றது. இங்கு மாணவர்களின் பாடத் தெரிவிலும் சமூக வகுப்பு செல்வாக்கு செலுத்துகின்றது.
எடுத்துக்காட்டாக வைத்தியரின் பிள்ளை உயர்தரத்தில் விஞ்ஞான பாடத் தெரிவினையும் அல்லது கீழ் வகுப்பினை சார்ந்தவர்களில் பெரும்பாலானோர் வேறு பிரிவுகளையும் தேர்ந்தெடுப்பதினையும் கருத்திற் கொள்ளலாம். இதன் பின்னணியினை நோக்கும் போது உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள் தன் பிள்ளையின் பாடத்தெரிவில் அதிக அக்கறை காட்டுவதோடு அவர்கள் அதற்கு பொருத்தமான பாடசாலைகளையும் ஆசிரியர்களும் தாமாகவே தெரிவு செய்து கொள்கின்றனர். காரணம் எதிர்காலத்தில் அவர்களது சமூக வகுப்பு சார் அந்தஸ்தினை தக்க வைத்துக் கொள்வதற்கு பாடத் தெரிவு ஒரு உத்தியாக அமைவதினை காணலாம்.
இன்று உயர் சமூக வகுப்பினரின் பிள்ளைகள் வெளியிடங்களுக்கு சென்றால் அவர்களின் பாடத் தெரிவை வைத்து அவர்களை மதிப்பிடுகின்ற போக்கு காணப்படுகிறது. அதேபோல கலை பிரிவை தேர்வு செய்த மாணவர்களை கீழ் வகுப்பு பிள்ளைகள் என தாமாகவே யூகிக்கின்ற நிலையும் எம் சமூகத்தில் காணப்படவே செய்கின்றது.
ஒருவருடன் இடைத்தொடர்பு பேணுவது என்பது எம் உள்ளார்ந்த ஆற்றலே ஆகும். எனினும் இடைத்தொடர்பு பேணுவதில் கூட பாடசாலையில் சமூக வகுப்பு செல்வாக்கு செலுத்துகின்றமை சிக்கல்களுக்குரியதே. இன்றைய பிள்ளைகள் முன்பள்ளியில் இருந்து சமூக வகுப்புகளில் தாக்கத்தினை அனுபவிக்கின்றனர். பெரும்பாலும் கீழ் வகுப்பை சார்ந்த பிள்ளைகள் தாங்கள் கீழ் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணக்கருவை தனக்குள்ளேயே உருவாக்கிக் கொள்கின்றனர்.
இதன் காரணமாக அவர்கள் பாடசாலைகளிலே நடாத்தப்படும் எந்த ஒரு கற்றல் கற்பித்தல் சார் செயற்பாடுகளிலும் அல்லது இணைபாட விதான செயல்பாடுகளிலோ தாமே முன் வருவதற்கு அஞ்சுகின்றனர். தங்களுக்குள் ஏராளமான திறமைகள் காணப்படும் பொழுது ஆசிரியர்கள் ஒரு சில மாணவர்களுக்கு மாத்திரம் வகுப்பறையில் முன்னுரிமை வழங்குவதனை மாணவர்கள் அறிந்து கொண்டு அவர்களே பின் வாங்குகின்றனர்.
இதன் போது கீழ் வகுப்பை சேர்ந்தவர்கள் வெறுமனே கீழ் வகுப்பை சார்ந்தவர்களாக மாத்திரம் இருப்பதற்கு பாடசாலைகள் களம் அமைத்து கொடுக்கின்றமையானது குறிப்பிடத்தக்கது. “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே” என்பார்கள். இன்று ஒரு பிள்ளையை நல்லவனா அல்லது தீயவனா என்று தீர்மானிப்பது குடும்பத்தை விட பாடசாலை எனலாம்.
காரணம் 13 வருடம் உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வியில் மாணவர்கள் பெரும்பாலான நேரத்தினை பாடசாலையிலேயே கழிக்கின்றனர். மாணவர்கள் பாடசாலையுடன் கொண்ட தொடர்பில் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். சமூகத்தில் சாதி, மதம், இனம்,கலாச்சாரம் என்ற ரீதியில் பிரிவினைகள் காணப்படும் பட்சத்தில் மாணவர்களும் தங்களது சமூக கட்டுப்பாட்டின் அடிப்படையில் பாடசாலைகளில் இனம், மதம், சாதி, கலாச்சாரம் என்ற ரீதியில் பாகுபாட்டுடன் செயற்படுவதினை காண முடிகின்றது.
ஒரு பிள்ளைக்கு பிள்ளை பருவத்தில் ஏற்படுத்தப்படும் நடத்தை கோலங்களுள் முக்கியமானவை யாதெனில் முன் பருவக்கால சமூகமயமாக்கலினூடாக பிள்ளைகள் கற்றுக் கொள்வதையே சமூகத்தில் பிரதிபலிக்கின்றான். இதன் அடிப்படையிலேயே இன்று சமூக வகுப்புகள் பற்றிய எண்ணம் பிள்ளைகளிடம் விதைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல எமது நடைமுறையும் காணப்படுகிறது. பாடசாலை என்பது அனைவருக்கும் கல்வியினை சமத்துவமாகவும் இலவசமாகவம் வழங்க வேண்டிய இடமாகும். இங்கு சமூக வகுப்புகளின் செல்வாக்கு தலை தூங்கி நிற்கும் போது மாணவர்களின் நடத்தை கோலமும் அவ்வாறே காணப்படும்.
“சமூக வகுப்பினை உள்ளவாறு பேணுவதற்கான சமூக கருவியாகவும் கல்வி தொழிற்படுகின்றது எனினும் அவ்வாறான நிலையிலிருந்து விடுப்படுவதற்கு ஏற்றவகையில் கல்வி வழங்கப்பட வேண்டும்” என்பது கார்ல் மாக்ஸ் என்பவரின் கருத்தாகும். இவரின் கருத்துப்படி இன்றைய பாடசாலைகள் சமூக வகுப்பை உள்ளவாறே பேணுவதில் அதி கவனம் செலுத்துகின்றன எனலாம். மாணவர்களின் சமூக வகுப்பு சார் பிரச்சினைகளை இணங்கண்டு அதற்கேற்றாற் போல சமூகத்தினை மாற்றியமைப்பது பாடசாலைகளின் கடமையாகும்.
பாடசாலைகளில் சமூக வகுப்புக்களினைக் கொண்டு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது எதிர்காலத்தில் அரசியல்வாதிகளை உருவாக்குவதற்கு சமனானதாகும். மேற்குரிய சமூக வகுப்புக்களின் செல்வாக்கினை பாடசாலையில் இழிவளவாக்குவதற்கு பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் தாழ்வு சிக்கல் ஏற்படாது சிநேக மனப்பான்மையுடன் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். சமூக அந்தஸ்து, சமூக வகுப்புகளை கருத்திற் கொள்ளாது அனைவருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கி கற்றல் கற்பித்தல் செயன்;முறையை முன்னெடுத்து செல்ல ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.
சமூகம் ஒன்றின் அபிவிருத்திக்கு கல்வி முக்கியமானது போல கல்வி அபிவிருத்திக்கு சமூகம் பொறுப்பாக உள்ளது. தனியாட்களின் ஆளுமை விருத்திக்கு அடிப்படையாக அமைவது போன்று சமூக நலன்களை பெறுவதற்கும் கல்வி இன்றி அமையாதது. சமூகத்தின் இயல்புகள், சமூகத்தின் தராதரம் மற்றும் சமூக வகுப்புகள் கல்வியின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன. சமூக கட்டுப்பாடுகளுக்கு பொறுப்பாக உள்ள சமூக வகுப்பு கல்விமுறையிலும் நிர்வாக முறையிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது.
பல்வேறு சமூக வகுப்புகளும் தமக்கே உரிய ஆர்வத்துடன் செயல்பட முற்படும் பொழுது அத்தகைய ஆர்வமானது வழங்கப்பட வேண்டிய கல்வி முறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. பெற்றோருடைய சமூக பொருளாதார நிலை உயர்ந்து செல்லும் பொழுது பிள்ளைகளின் வினையாற்றலும் உயர்ந்து செல்வதாக கருதுகின்றனர். இதற்கமைவாக சமூக வகுப்பின் நிலை பிள்ளைகளின் கல்வியினை தீர்மானிக்கின்றது. அந்தவகையில் பாடசாலைகளில் சமூக வகுப்புகளின் தாக்கம் காணப்பட்டாலும் அதனை இல்லாதழித்து நல்ல பிரசைகளை சமூகத்திற்கு கொடுத்தல் பாடசாலையினது தலையாய கடமையாகும்.
மாணிக்கவாசகர் பிரஷாந்திகா,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கலை கலாசாரபீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
வந்தாறுமுலை.