பாடசாலைக்கும் சமூகத்திற்குமான உறவு

கல்வி

பாடசாலைக்கும் சமூகத்திற்குமான உறவு

பாடசாலையும் சமூகமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவிற்கு நெருங்கிய தொடர்பை உடையனவாகும். அதாவது ஒரு சமூகத்தின் வளர்ச்சி அச்சமூகத்தில் உள்ள பாடசாலையிலும், அதேபோல் ஒரு பாடசாலையின் வளர்ச்சி அது அமைந்துள்ள சமூகத்திலும் தங்கியுள்ளமை பிரதான விடயமாகும். எனவே பாடசாலை, சமூகம் என்பவற்றுக்கு இடையிலான உறவுநிலை சமூகத்தால் பாடசாலையும் பாடசாலையால் சமூகமும் பயன்பெறக்கூடிய தன்மை கொண்டதாக அமைய வேண்டும். பாடசாலையென்பது ‘விசேட சமூக மற்றும் கலாசாரப் பின்னணியைக் கொண்ட ஒரு நிறுவனமாகும்.’ பாடசாலையின் அபிவிருத்திக்கென சமூகப் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டியதோடு சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பாடசாலையானது முன்வர வேண்டும். இது பரஸ்பர செயற்பாடாக அமைவதுடன் அதனை உரிய முறையில் பேணுவதற்காக பாடசாலை மற்றும் சமூகத்திற்கிடையில் விளைதிறன் மிக்க தொடர்பை கட்டியெழுப்ப வேண்டும். விளைதிறன் மிக்க பாடசாலையொன்றைக் கட்டியெழுப்பவதற்காக சிறந்த சமூகத் தொடர்பை பேணுதல் வேண்டும்.

பாடசாலையுடன் இணைந்துள்ள சமூகத்தை இரண்டு பிரதான பகுதிகளாக ‘உள்ளக சமூகம், வெளிச் சமூகம்’ என பிரித்து வேறுபடுத்திக் கொள்ள முடியும். பாடசாலையிலுள்ள தரப்பினர் உள்ளக சமூகம் என கருதப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், முகாமைத்துவ அணி, கல்விசாரா ஊழியர்கள் போன்றோரினைக் குறிப்பிடலாம். பாடசாலைக்கு வெளியிலிருந்து பாடசாலையுடன் தொடர்பைப் பேணும் அனைவரும் வெளிச் சமூகம் எனக் கருதப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, சமய அமைப்புகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், சமூகத் தலைவர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், நலன் விரும்பிகள், கல்வி உத்தியோகத்தர்கள், வேறு அரச நிறுவனங்கள் போன்ற இன்னோரன்னவற்றினைக் குறிப்பிடலாம்.

யுனெஸ்கோ நிறுவனத்தால் 1970ல் நியமிக்கப்பட்ட சர்வதேச ஆணைக்குழுவின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட வாழ்க்கைக்கான கல்வி எனும் அறிக்கையில் பாடசாலையினுள் இடம்பெறும் முன்னேற்றமானது, பாடசாலைக்கும் சமூதாயத்துக்கும் இடையிலான வகிபங்குகளைக் கொண்ட செயன்முறைத் தொடர்புகளுடனேயே நிகழ்வதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் பாடசாலை மற்றும், சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் காலத்திற்குக் காலம் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமையினைக் காணமுடிகின்றது. ‘1972ல் அறிமுகம் செய்யப்பட்ட தொழில் முன்னிலைப் பாடம், 1976ம் ஆண்டு 100 பிள்ளைகளையும் ஒரு அல்லது இரு ஆசிரியர்களைக் கொண்ட சிறிய பாடசாலை அபிவிருத்தித் திட்டம், 1979ல் பெற்றோர் சாசனம், 1984ல் பாடசாலை மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை உருவாக்குதல்’ போன்ற பல செயற்பாடுகளைக் கூறலாம்.

பாடசாலைக்கு முகாமைத்துவ ரீதியான வலுவூட்டலையும் பாடசாலை சமூகத்துடன் உறுதியான தொடர்பை முன்னெடுத்தலையும், வழங்கும் நோக்குடன் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமானது கொண்டு வரப்பட்டது. பாடசாலை மேம்பாட்டுக்கு, சமுதாயத்தின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கான மிக முக்கிய கருவியாக, அண்மைக்காலம் வரையில் பாடசாலை அபிவிருத்திச் சமூகமே விளங்குகின்றது. அதன் விதிகளும் ஒழுங்குமுறைகளும் 01.05.1982ஆம் திகதிய 1982ஃ2ஆம் இல சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் சமூகத்திற்கிடையிலான தொடர்பினைக் கட்டியெழுப்பக் கூடிய வழிமுறைகளாவன, மாணவர்களின் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக பெற்றோரின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல், வகுப்பு வட்டங்களின் போது கலைத்தி;ட்டம், நவீன போக்குகளுக்கான செயற்றிட்டங்கள் மற்றும் மதிப்பீட்டுச் சுற்றுநிருபங்கள் தொடர்பாக பெற்றோருக்குத் தெளிவூட்டுதல், மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் தொடர்பாக பெற்றோருக்குத் தெளிவூட்டுதல், பின்னூட்டல் மற்றும் மேலதிக உதவிகளுக்காக ஈடுபடுத்திக் கொள்ளுதல், பாடசாலையின் பல்வேறு செயற்பாடுகளுக்காக சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளல், கலைத்திட்டத்தை அமுலாக்கும் போது சமூகத்தின் வளநபர் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் (மாணவர்களுக்குத் தெளிவூட்டுதல், பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்), பாடசாலை பௌதீக வளங்களின் அபிவிருத்தி மற்றும் பராமரிப்புச் செயற்பாடுகளுக்காக சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற இன்னோரன்ன விடயங்களினைச் சுட்டிக்காட்டலாம்.

பாடசாலையானது, சமூகத்திற்கென பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, எழுத்தறிவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், பெற்றோருக்காக தெளிவூட்டல் மற்றும் ஆலோசனை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், முறைசாரா கல்வி வேலைத்திட்டங்களுக்காக பெற்றோரை ஈடுபடுத்துதல், சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றினையும் இவ்விடத்தினில் சுட்டிக்காட்டலாம்.

சமூகத்திற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது “சமூகப் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை இனங்காணுதல், பாடசாலையுடன் தொடர்புடைய சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார நிலைமைகள் தொடர்பான தெளிவு, வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவான நோக்கங்கள் காணப்படுகின்றமை, முன் ஆயத்தத்துடன் மேற்கொள்ளுதல், வேலைத்திட்டங்களுக்காக பங்கேற்கும் நபர்களுக்கென வசதிகளை வழங்குதல், சிறந்த தொடர்பாடலை பேணுதல், பிற்சோதனையை மேற்கொள்ளுதல். தேவையான தகவல்களைப் பேணுதல்.” போன்றவற்றினைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதனை ஒருபோதும் மறக்கக் கூடாது.

பெற்றோர்களின் பங்களிப்பு இன்மை, நிதி தொடர்பான தவறான புரிந்துணர்வு, நேரம் இன்மையும் ஒதுக்காமையும், அலட்சியப் போக்கு, ஆசிரியரின் பங்குபற்றுதல் போதாமை, நிறுவன குறைபாடு, பாடசாலைகள் சமூகத்தின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாமையும் விலகி இருத்தலும், பாடசாலையுடனான சமூதாயத்தின் இணக்கப்பாடு நலிவடைதல் போன்ற காரணிகளால் பாடசாலை-சமூக தொடர்பு விரிசலடைகின்றது

சமூகத் தொடர்பினை வலுவூட்டுவதற்காக சிறந்த தலைவர் என்ற ரீதியில் அதிபரானவர், சமூகத் தொடர்பிற்கான விபரப் புத்தகமொன்றைப் பேணுதல், தகவல்களை வகைப்படுத்தி பேணுதலும் தேவையான சந்தர்ப்பங்களின் போது பாடசாலைச் செயற்பாடுகளுக்காக அவற்றை தொடர்புபடுத்திக் கொள்ளுதலும், பாடசாலை பண்புத்தரத்தின் முன்னேற்றத்தை சமூகத்திற் ஊடுகடத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், பல்வேறு சமூக சேவை செயற்பாடுகளை முன்னெடுத்தல், பிரதேசத்திலுள்ள சமூக அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி செயலாற்றுதல், பாடசாலையிலுள்ள வளங்களை சமூகத்திற்கு வழங்குதல், சமூகத்தின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு முறையியல்களைப் பயன்படுத்துதல் போன்ற செயற்பாடுகளினைச் முறையாகவும் செம்மையாகவும் கொண்டு நடாத்துபவராக திகழ வேண்டும்.

பாடசாலை மற்றும் சமூகத்திற்கிடையிலான தொடர்பினை பேணுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன எனலாம். அதாவது திட்டமிட்ட அடிப்படையில் சமூகப் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதன் மூலம் பாடசாலையின் நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள இயலுதல், மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமையக் கூடிய நபர்களை பாடசாலைக்கு வரவழைத்து மாணவர்களின் ஆளுமையைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பினை உருவாக்குதல், சமூகத்துடன் வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றுவதால் பாடசாலைக்கு சிறந்த உருத்தோற்றத்தை கட்டியெழுப்புதல், பல்வகைத் திறன்களுடன் கூடிய நபர்களை வளநபர்களாக பாடசாலை நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளவதனூடாக பாடசாலையில் பண்புத்தர அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடியதாக இருத்தல், பிள்ளைகளின் கல்விக்கு உதவக்கூடிய விதம் தொடர்பான தெளிவினைப் பெற்று வீட்டில் சிறந்த கற்றல் சூழலொன்றைக் கட்டியெழுப்ப பெற்றோருக்கு இயலுகின்றமை, கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக சமூகத்தின் அறிவு உயர்வதால் அவர்களை பாடசாலையின் அபிவிருத்திக்காக முனைப்புடன் பங்கேற்கச் செய்யக்கூடியதாக இருத்தல் போன்ற எண்ணற்ற நன்மைகளை எமக்கு அள்ளித்தருகின்றதெனலாம்.

பாடசாலைகள் சமூகங்களின் மதிப்புகள், அபிலாஷைகள் மற்றும் சவால்களை பிரதிபலிக்கின்றன. கல்வியின் தரம் மற்றும் பாடசாலைகளினால் நிலைநிறுத்தப்படும் மதிப்புகள், தனிநபர்களின் நல்வாழ்வையும் சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் கணிசமாக பாதிக்கிறது. மேலும் அவை அமைந்துள்ள பரந்த சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவும் தனிநபர்களின் மதிப்புகள், அறிவு, திறன்கள் மற்றும் கல்விச் சமூகமயமாக்கல் ஆகியவற்றை வடிவமைப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றதென்றால் அது மிகையாகாது.

க.நிதுஷா
4 ஆம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *