பாடசாலையில் சமவயது குழுக்களின் செல்வாக்கு
தனியாள் சமூகமயமாக்கலில் குடும்பத்துக்கு அடுத்ததாக அதிக செல்வாக்கு செலுத்தும் கருவி சமவயதுக் குழு ஆகும். இவை பாடசாலையின் மிக வலுவான சமூக இயைபாக்கக் காரணியாக விளங்குகின்றன. சமவயதினை கொண்ட பிள்ளைகளின் கூட்டத்தினரை சமவயதுக் குழு எனலாம். இக்குழு உறுப்பினர்களிடம் ஒத்த சிந்தனைகள், செயற்பாடுகள், எதிர்பார்ப்புகள், விருப்பு, வெறுப்புகள் ஆர்வங்கள், மொழிக்கோலம் போன்றன இருக்கும். எனவே பாடசாலை என்பது சமூக நிறுவனம் ஆகும். எனவே சமூகத்திற்கு ஏற்றால் போல் மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு பாடசாலைக்கு காணப்படுகின்றது. அதற்கு சமூகமயமாகல் இன்றியமையாத காரணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அதனடிப்படையில் சமவயது குழுக்கள் அதற்கு துணைப்புரிவதை நாம் நோக்கலாம்.
ஒரு பாடசாலையில் பல சமவயது குழுக்கள் காணப்படும். பாடசாலையின் எதிர்பார்ப்பிற்கு அமைய நடக்கும் குழுக்களும், எதிராக இயங்கும் குழுக்களும் காணப்படுவதுண்டு. இதில் சற்று பிரபல்யமானவர்கள் தலைவர்களாக இருப்பர். எதிர் குழு, விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டே இருக்கும். ஆதரவான குழு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு பாடசாலை செயற்பாடுகளில் சமவயது குழுக்கள் முக்கியப்பங்கினை வகிக்கின்றது.
பாடசாலை செயற்பாடுகளில் முக்கிய செயற்பாடு கற்றல் கற்பித்தல் செயற்பாடே, சகபாடிகளுக்கிடையே உடன்பாடான நல்லுறவு நிலவும்போது, வகுப்பில் கற்றல் கற்பித்தலுக்கு வாய்ப்பாக அமைகின்றது. கற்றல் கற்பித்தலுக்கு பயன்படும் சமவயது குழுவினரின் ஒன்றிணைந்த செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் திறனை ஆசிரியர் பெற்றிருப்பது அவசியமாகின்றது. திறமை மிகுந்த ஆசிரியர்கள் பாடசாலை எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற ஒத்தவயதுக்குழுவை பயன்படுத்துவர், கூட்டுக் குழுக்கற்றல்,சகபாடி கற்பித்தல், சகபாடி இணைந்து கற்றல் என சகபாடி கற்றல் மூன்று வகைகளாக பாடசாலையில் நடாத்தப்படலாம். சமவயது குழுக்கள் வகுப்பறைகளில் இருப்பதனால் ஆசிரியருக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இலகுவான முறையில் முன்னெடுக்க முடிகிறது. ஒரே பண்புள்ள ஒரே வயதுக்குழுவிரை வகுப்பறைகளில் இருப்பதனால் ஒரே நேரத்தில், வழிகாட்டி, இலகுவாக கற்பிக்க முடிவதோடு ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பாடவேலைகளை வழங்கக்கூடியதாக உள்ளது.
சமவயது குழு மாணவர்கள் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு கூட்டுக்கற்றலில் ஈடுபடுத்தக்கூடியதாக அமைகின்றது. இவ்வாறான சந்தரப்பங்களில் குழுக்களின் உறுப்பினர்களிடையே ஐக்கியம், ஊக்கம், அனைவருடனும் ஒற்றுமையுடன் செயற்படும் தன்மை என்பன அபிவிருத்தியடைகிறது.
வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் சமவயது குழுக்கள் சகபாடி சுற்பித்தலில் ஈடுபடுத்தக்கூடிய தன்மையும் காணப்படுகிறது. இங்கு ஒரு பிள்ளை மற்றைய பிள்ளைகளுக்கு பாட அறிவை பெற்றுக்கொடுப்பதில் பயிற்சியளிக்கின்றது. பயிற்சியை அளிக்கும் பிள்ளை குறித்த பாடத்தில் பாண்டித்தியம் அடைந்ததாக காணப்படுகிறது. ஒத்தவயதுடையவர்களாக பயிற்றுனரும் பயிலுனரும் இருப்பதால், பயிலுனர் வினாக்கள் கேட்பதிலும் அபிப்பிராயங்கள் கூறுவதிலும் விடைகளை ஊகித்துக் கூறுவதிலும் எவ்வித தயக்கமும் இல்லாமல் சுதந்திரமாக செயற்படுவர். பயிற்றுனரான மாணவன் சகபாடியாக விளங்கும் பொழுது, பயிற்றுனருக்கும் பயிலுனருக்கும் இடையிலான இடைவினைத்தாக்கம் கூடிய அளவிற்கு சமநிலை பேணுவதாயும் உயிர்பானதாயும் அமைகின்றது.
அதே சமயம் சமவயதினர் இணைந்த கற்றலில், ஈடுபடும் போது சிரமமான விடயங்களைக்கூட இவர்கள் கண்டுபிடித்துக் கற்கும் முறையை இது ஊக்குவிக்கிறது. அதேவேளை, சகபாடியின் உதவியையும் ஒத்தாசையையும் பெற இது வாய்பளிப்பதாக அமையும். கூடுதல் ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கு தனிப்பட்ட சக வழிகாட்டி நியமிக்கலாம். இது ஆதரவு தேவைப்படும் மாணவனை வெற்றிப்பெற உதவிச்செய்யும். ஒரு பிள்ளை தன்னை ஒத்த மற்றொரு பிள்ளையுடன் சேர்ந்து வேலை செய்யும்போது, அறிவுக் குறைபாடுகளையோ. தமது குறைபாடுகளையோ தமது குறைபாடுகளாகக் கொள்வதில்லை அல்லது உணர்வதில்லை. பாடசாலை செயற்பாடுகளில் ஒன்றான கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்துவதில் சமவயதுக்குழுவினர் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றனர்.
பல்வேறு சக கற்றல் மாதிரிகளை பாடசாலை செயற்பாடுகளினூடாக சகபாடிகள் தாமாகவே கண்டறிந்து சுயமாக முன்னேறிக்கொள்கின்றனர். அடுத்து சகமதிப்பீட்டு திட்டங்கள், சகஆதரவு குழுக்களால் கூட்டங்கள் பயனுள்ள முறையில் நடைபெறுவதுண்டு பொதுவாக ஆசிரியர் இல்லாமல் வகுப்பிற்கு வெளியே மாணவர்களின் தலைமையில் நடாத்தப்படும் கூட்டங்கள் இவை. சோதனை ஒன்றிற்காக படிக்க அல்லது குழு திட்டமிடலுக்காக சகபாடிகள் சந்திக்கலாம். இங்கு ஒருவருக்கு தெரியாதது இன்னொருவரால் கற்பிக்கவும் கற்றுக்கொள்ளவும்படுகிறது. ஒவ்வொரு கற்பித்தலுக்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இங்கு ஆழ்ந்த அறிவு தேவைப்படுகிறது. ஆசிரியர்களிடம் பழக தயங்கும் மாணவர்கள் சகாக்களிடம் மனந்திறந்து பேசுவோராய் இருக்கும் பட்சத்தில் இவ்வாறான முறைகள் பாடசாலையில் காணப்படுவதனால் மாணவர்கள் தம்மைத்தாமே முன்னேற்றிக்கொள்கின்றனர். இங்கு பல்தரப்பட்ட பின்னனியில் இருந்து வருகைத்தரும் சமவயது மாணவர்கள் இவ்வாறு பாடசாலைகளில் ஒன்று சேர்வதால் சிந்தனைத்தாக்கத்தில் அதிக முன்னேற்றமும், அறிவுப்பகிரவும், தொடர்பாடல் திறனில் முன்னேற்றமும் கற்றலுக்கு உதவுவதாக அமைகிறது.
பாடசாலை செயற்பாடுகளுள் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் உள்ளடங்கும் விளையாட்டுக்கள், விளையாட்டு போட்டிகள், தமிழ் ஆங்கில ஒலிம்பியாட் மற்றும் சமூக விஞ்ஞானம் போன்ற பல்வேறு வகையான போட்டிகள், மன்றங்கள் (மாணவர், தமிழ், ஆங்கில, சமய, விஞ்ஞான,வணிக மன்றங்கள், பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டங்கள், களப்பயணங்கள். கல்வி சுற்றுலாக்கள், மாணவர் பாராளுமன்றம், அயற்பாடசாலை நிகழ்ச்சிகள், விவாதங்கள் பொதுப்போட்டிகள், நல்லிணக்க செயற்பாடுகள், சாரணியம், சுகாதார சேவை. முதலுதவி, சுற்றாடல் படை, போன்ற துணைச்சேவைகள் என பல செயற்பாடுகளில் சமவயது குழுக்களின் பங்களிப்பு பெறும் பகுதியாக காணப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமவயதுக்குழுக்களை இனங்காண்பதும் வழிநடத்துவதும் மிகவும் அவசியம். இவை பாடசாலையின் அபிவிருத்தியில் பங்கெடுப்பதோடு, தனிப்பட்ட ரீதியில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், ஆளுமை மற்றும் தலைமைத்துவ பண்பு போன்ற பல்தரப்பட்ட வளர்ச்சிக்கும் உதவுவதுண்டு. சுருக்கமாக கூறினால் அறிவு. திறன், மனப்பாங்கு வளர்ச்சிக்கு உதவுவதோடு அவர்களின் சிந்தனையை தூண்டுகின்றது.
களப்பயணம், விவாதம், அர்த்தமுள்ள உரையாடல்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் என்பன பாடசாலைகளில் மிகவும் பொதுவானவை. இவ்வாறான தளத்தை பாடசாலை வழங்கும் பொழுது சமவயதினர் பங்கேற்பதால் சுதந்ததிரமாகவும், தடைகளின்றி வசதியாகவும் உணர்வதுண்டு. அர்த்தமுள்ளதாக இவை. பயன்படுத்தப்படும் பொழுது நேரம் உற்பத்தித்திறன் மிகுந்ததாய் அமையும், ஆதலால் எதிரகால பிரஜைகளான இவர்கள் சமூகத்திறனையும் அறிவையும் ஆழமாக வளர்ப்பதுடன் கூடுதலான நுணுக்கங்கள் மற்றும் முன்னோக்குகளைப் பெறுகின்றனர்.
பிள்ளைகள் சுதந்திரமும் சமத்துவமான உறவை வைத்துக்கொள்வதற்கு முதலில் சந்தர்ப்பம் கிடைப்பது பாடசாலை சமவயது குழுவில் ஆகும். இங்கு சமநிலை உறவு வளர்ச்சி அடைவதுடன் பாலியல் தொடர்பான விடயங்களை அறியும் சத்தர்ப்பம் கிடைக்கிறது. சமூக இயல்பு பற்றி அதிக விளக்கம் இங்கு கிடைக்கிறது. பிள்ளைகளின் உள்ளம் இதனால் விரிவடைவதோடு, புலக்காட்சியும் விரிவடையும், பிள்ளைகள் பரந்த சமூக நோக்கின் அடிப்படையில் அவதானிக்க தூண்டுவதற்கு கலாசாரத்தை ஒப்படைக்கும் பணியும் பாடசாலையின் செயற்பாடுகளுடாக சமவயது குழுவால் நிறைவேற்றப்படும். பாடசாலைகளில் சமவயது குழுக்களால் சமூக நடத்தை பற்றி குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.
நேர்மறையான பக்கத்தில், நல்ல நண்பர்களை எவ்வாறு உருவாக்குவது மற்றும் வைத்திருப்பது, எவ்வாறு ஒன்று கூடி வேலை செய்வது, கற்றுக்கொள்வது. ஒன்றாக விளையாடுவது எவ்வாறு பேசுவது எவ்வாறு என்பதை சமவயது குழுக்களின் தோடர்பு கற்றுக்கொடுக்கிறது,
உதாரணமாக, பாடசாலை எனும் போது பல்வேறு வகைப்பட்ட சமூகத்தில் இருந்து, வேறுபட்ட இன, மொழி மாணவர்கள் வருகைத்தருவதுண்டு. அங்கு அவர்கள் பல மாணவர்களுடன் சமூகமயமாக்களுக்கு உற்படுவதுண்டு. பல்வேறு கலாச்சாரங்களை கற்பதும் உண்டு. மேலும் பலதரப்பினர் இருக்கும் பாடசாலைகளில் பல்வேறான நல்லிணக்க செயற்பாடுகள், அயற்பாடசாலைகளுடளான சமூக ஒருமைப்பாட்டு நிகழ்வுகள். சமய வழிபாடுகள். சரஸ்வதி பூஜை, வெசாக் பண்டிகை, மீளாதுன் விழா, பொங்கல் விழா, ஒளிவிழா போன்றன நடைபெறும் தருணங்களில் சமவயதினர் ஒவ்வொருவரினதும் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள் குறித்து கற்பதோடு ஒற்றுமை, நல்லினக்கம் போன்ற நற்பண்புகளை எடுத்துச் செல்கின்றனர்.
இக்கலாச்சார பண்பாட்டு அம்சங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் கடமை மாணவர்களுக்கே இருப்பதனால் இவ்வாறான பாடசாலை செயற்பாடுகளில் இருந்து இவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு இதனை எடுத்துச் செல்லும் வாய்ப்பு ஏற்படுகின்றது, தேசியம், சமயம், சமூக வகுப்பு என்பனவற்றின் இயல்புகள், மூத்தவர்களின் கலாச்சாரம், ஏனைய கலாச்சாரம் பற்றிய விளக்கங்கள் இங்கு கிடைக்கின்றது. இது எதிர்கால சந்ததிக்கும் எடுத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. வெவ்வேறு சமூக வகுப்பினர், சமூக அமைப்புகள் பற்றி அறிய முடிவதோடு. சமூக ஒருமைப்பாட்டிற்கு உதவுகின்றது. அடுக்கடுக்கான குழுக்கள் கூட்டுப்பணிகளில் ஈடுபடும் தருவாயில் பலதரப்பட்ட விடயங்களை கற்க முற்படுகிறது. உதாரணமாக மாணவர்கள் தாமாக தனிப்பட்ட தலைப்பொன்றை பற்றி அறிந்துக்கொள்ளவும், பின்னர் அதனை சககுழுவுடன் பகிரவும் ஊக்குவிக்கப்படலாம். அந்த குழு அதனை இன்னுமொரு சக்குழுவிடம் பகிர்ந்துக்கொள்ளும், கூட்டுப்பணிகளில் ஈடுபடும் பொழுது தமக்காக நியமிக்கப்பட்ட பணிகளை பொறுப்பாகவும், ஒத்துழைப்புடினும் உரிய காலக்கெடுவில் முடிக்க வேண்டியதன் அவசியத்தை கற்றுக்கொள்கின்றனர்.
மாணவர்கள் தம்மைத்தாமே புதுப்பித்துக்கொள்ள சமவயதுக் குழக்கள் பாடசாலையின் செயற்பாடுகளின் போது முக்கியத்துவம் பெறுகின்றனர். உதாரணமாக விவாதப்போட்டிகள், சமூகவியல், ஒலிம்பியாட், தமிழ் மற்றும் ஆங்கிலத்தின, விளையாட்டு போட்டிகளை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு மாணவளின் திறமை இங்கு வெளிகொணரப்படுகிறது. இங்கு ஒரே வயதுமட்ட குழுவினர்களுடன் போட்டிகளில் இவர்கள் முகங்கொடுக்க நேரிடுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெற்றித் தோல்வியை மாணவர்கள் ஏற்கும் மனப்பாங்கினை வளர்க்க ஏதுவாய் காணப்படுகிறது. புத்தாக்க சிந்தனையை அதிகரிக்கவும், அறிவு மற்றும் மன எல்லையை விரிவு படுத்தவும், தங்கள் கருத்துக்களை பரிமாரவும். புதிய விடயங்களை கற்கவும் பாடசாலையில் சமவயது குழுக்கள் அவசியமாகின்றது.
பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், வலய, மாகாண, அகில மட்ட வினையாட்டுப்போட்டிகள், சாரணர் இயக்கம், போன்ற நிகழ்வுகளின் மூலம் சமவயதுக்குழுக்களினால் பிள்ளைகள் குழுவாக செயற்படவும் ஒத்துழைக்க மற்றும் ஒன்றாக வேலை செய்ய அல்லது செயற்பட கற்றுக்கொள்கின்றனர். பாடசாலையின் மாணவத் தலைவர்களாக, வகுப்புத் தலைவர்களாக, மன்றங்கள் மற்றும் குழுக்களில் தலைமைத்தாங்கும் பொழுது அல்லது பொறுப்பேற்கும் பொழுது வேலைப்பகிர்வு கற்பிக்கப்படுகிறது. வழங்கப்படும் பொறுப்புகளை, சமவயதினருடன் இணையும் தருவாயில் பகிர்ந்தளித்து செயற்பட இயலுமானதாக ஆகின்றது. குறித்த பொறுப்புக்களை அமுல்படுத்த சமவயதுக்குழுக்கள் ஆதரவளிக்கவும் உதவவும் முன்வருவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மனரீதியாக, உணர்ச்சி ரீதியாக சமவயதுக்குழுக்கள் இன்றியமையாதவர்களாக காணப்படுகின்றனர். இங்கு இவர்கள் தாம் பொறுப்பேற்று செயற்படும் பொழுது ஏற்படும் இடர்களுக்கு முகங்கொடுத்து, இடர்களை களைந்து, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தாமாகவே குழுவாக முன்வந்து கண்டறிவதுண்டு. இங்கு இவர்கள் சிறந்த ஆளுமையுள்ள தலைமைத்துவம் வாய்ந்த தனிநபராக மாறுகின்ற எதிர்கால பிரஜைகளாக இருக்க போகும் இவர்களுக்கு பாடசாலையினூடாக இவற்றை கற்றுக்கொள்ள வழங்கப்படும் இந்த வாய்ப்புகள் உறுதுணையாக அமையும். பாரபட்சம், ஒத்துழைப்பு மற்றும் சிக்கல்கள் தீர்க்கும் உத்திகள் மற்றும் முக்கியமான சமூக உணர்ச்சித்திறள்களை பிள்ளைகள் கற்கும் தனித்துவமான சூழலை சமவயதுக் குழுக்கள் வழங்குகின்றன.
சமவயது குழுவினருக்கு அன்பு, கருணை, தைரியம், நம்பிக்கை, சகநோக்கு நிலை, சுறுசுறுப்பான பங்கேற்பு, பணிவு, பரஸ்பர மரியாதை, நன்றியுணர்வு போன்ற பண்புகளை சமவயது குழுக்கள் பாடசாலை செயற்பாடுகளினறுக்கொள்கின்றனர். மாணவர்களின் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் வெளிக்கொணரவும். பொறுப்புள்ள கற்றல் ஈடுபாடுடைய, தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம் மற்றும் மனவுறுதியுடன் கூடிய நல்லிணக்கத்துடன் செயற்படுவோரை உருவாக்கவும், பண்புள்ள, கலாச்சார மற்றும் தார்மீக விழுமியங்களை எடுத்துச்செல்லும், நல்வழியில் நற்பண்புகளுடன் அமைந்த சிறந்த ஆளுமையுடன் கூடிய, தலைமைத்துவம் வாய்ந்த சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் சமவயது குழுக்கள் பாடசாலை செயற்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.
மேலும் பாடசாலை செயற்பாடுகளில் சமவயது குழுக்களுடாக ஆசிரியர்கள் தம்மைத்தாமே இற்றைப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. நவீன தொழில்நுட்பம் தொடர்பான அறிவு. அவற்றை பயன்படுத்தும் முறைகள் என்பனவற்றை சமவயது குழுக்களிடம் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம். பாடசாலை செயற்பாடுகளில் சமவயது குழுக்கள் திட்டங்களை எளிதாக்கும் அல்லது குறைந்த மதிப்பிற்கு உற்படுத்தும் சக்திவாய்ந்த சக்திகளாக இருக்கின்றது. எனவே பாடசாலையின் வளர்ச்சிக்கு சமவயது குழுவானது பாரிய பங்களிப்பை வழங்க கூடிய பிரிவாக உள்ளது.
தே.ஜீவன் பிரசாந்த்
நான்காம் வருட
கல்வியல் சிறப்பு கற்கை மாணவன்
கல்வி மற்றும் பிள்ளை நலத் துறை
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்