மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்கல் செயற்பாட்டில் கலைத்திட்டத்தினுடைய பங்களிப்பு
இன்றைய கல்வி முறை வெறுமனே அறிவை மாத்திரம் பெறுகின்ற மரபு ரீதியான பழைய கல்வி முறைமைக்கு முற்றிலும் மாற்றமானது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்படையில் இன்றைய கல்வியானது காலத்தின் தேவைக்கேற்ப விரைவாக வளர்ச்சியடைந்து கொண்டு செல்கின்றதெனலாம். நவீன கல்வித் தத்துவங்களில் மிகப் பிரதானமாக வாழக் கற்றல், மற்றவர்களோடு சேர்ந்து வாழக் கற்றல் என்பன முக்கியமாக இடம் பெறுகின்றன. அந்தவகையில் கல்விக்கு வரைவிலக்கணம் கூறும் நவீன சமூகவியலாளர்கள் ‘வாழ்க்கையே கல்வி, மனிதப் பண்பு வளர்ச்சியே கல்வி” என்கின்றனர். மேலும் இதற்கான பயிற்சியானது கலைத்திட்டங்களின் வாயிலாக பாடசாலைகளில் வழங்கப்படுகின்றதென்றால் அது மிகையாகாது.
- நான் விரும்பும் பெரியார்
- இலங்கையின் அவசர தொலைபேசி எண்கள்
- ஓசோன் விழிப்புணர்வு கட்டுரை(Ozone Awareness Essay)
- ஈமெயில் மார்க்கெட்டிங் என்றால் என்ன ?
- வேப்பமரத்தின் பயன்கள்(Neem Tree)
தொடர்ச்சியாக பதின் மூன்று ஆண்டுகள் கல்வி கற்கும் ஒரு பிள்ளை (பதின் மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி) தனக்கு தேவையான அனைத்து சமூகவியல் பண்புகளை ‘பாடசாலைக்கல்வி, இணைப்பாட விதான செயற்பாடுகள்’ மூலம் பெற்றுக்கொள்கின்றான். இலங்கை பாடசாலைகளின் கலைத்திட்ட வடிவமைப்பில் மாணவர்களின் சமூகமயமாக்கல் செயற்பாடுகளுக்கு நிறைவான வழிகாட்டல்களும் சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டிருப்பதனைக் காணக் கூடியதாக உள்ளதெனலாம். சமூக நன்மை கருதி செயல்படும் சிறந்த ஆளுமையை தனியாட்களிடம் உருவாக்குவதற்கு பாடசாலை முக்கியமான சில கடமைகளை நிறைவேற்றுவதுடன் எதிர்காலமானது சிறப்படைவதற்கும் துணைபுரிகின்றதெனலாம்.
- பனை மரத்தின் பயன்கள்
- நான் விரும்பும் பெரியார் திருவள்ளுவர் கட்டுரை
- சந்திரயான் 3
- கிட்னி செயலிழப்பு காரணம்
- செப்பேடுகள் என்றால் என்ன?
கலைத்திட்டம் கற்பவர்களின் அனைத்து அனுபவங்களையும் உள்ளடக்கியதாகும். பாடசாலையின் உள்ளே அல்லது வெளியே பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து அனுபவங்களும் அதனுள் அடங்கும். மாணவர்களை உளரீதியாகவும், உடல்ரீதியாகவும், மனவெழுச்சி ரீதியாகவும், சமூகரீதியாகவும், ஒழுக்கரீதியாகவும், அற ரீதியாகவும் விருத்தி செய்வதில் கலைத்திட்டம் பெரும் பங்கு வகிக்கின்றது.
கலைத்திட்டமானது குறிப்பிட்ட இலட்சணங்களை கொண்டிருப்பதனால் கல்விச் சமூகமயமாக்கலிற்கு பெரிதும் துணை நிற்பவையாக காணப்படுகின்றதெனலாம். எடுத்துக்காட்டாக, “கல்வியின் அடிப்படை குறிக்கோள்களை அடைதல், மாணவர்களின் சகல செயற்பாடுகளையும் உள்ளடக்கிய ஓர் முழுமையான செயற்பாடாக காணப்படுதல், இளம் தலைமுறையின் எதிர்கால நிலைப்புக்குத் தேவையான அனுபவங்களை வழங்குவதாக அமைதல், ஒவ்வொரு தனியாளினதும் முழுமையான சமூகத்தினதும் தேவைகளை பிரதிபலிப்பதாக அமைதல், பாடசாலையின் உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் கற்றலுடன் தொடர்புபட்டு காணப்படுதல், மாணவர்களது சமநிலைமிக்க ஆளுமைக்கு உதவக்கூடியதாக இருத்தல்” போன்றவற்றினைச் சுட்டிக்காட்டலாம்.
இதனடிப்படையில் பாடசாலையினுள் கால் எடுத்து வைக்கும் ஒரு பிள்ளை பூரணமான சமூகமயமாக்கல் திறன்களை பெற்று சமூக நற்பிரஜையாக சமூகத்தினுள் கொண்டு சென்று விடும் வரை பாடசாலையில் பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களின் சேவை அளப்பரிய பணியாக காணப்படுகின்றதென்றால் அது மிகையாகாது. ஒரு பிள்ளை தனக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் சமநிலை ஆளுமைப் பண்புகளையும் நிறைவாக தன்னகத்தே வளர்த்துக் கொள்வதற்கு பாடசாலை கலைத்திட்டமானது உந்து சக்தியாக உள்ளதெனலாம். எடுத்துக்காட்டாக, “காலைப்பிரார்த்தனை, விளையாட்டுப் போட்டி, தமிழ்மொழித்தினம், ஆங்கில மொழித்தினம், கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த, இந்துசமய விழாக்கள், சிறுவர் தினம், முதியோர் தினம், மன்ற செயற்பாடுகள், மாணவர் நாடாளுமன்ற செயற்பாடுகள், நூலக செயற்பாடுகள்”; எனப் பல்வேறுபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதனைக் காணக்கூடியதாக உள்ளதெனலாம்.
கல்வி அமைச்சின் விதந்துரைகளுக்கு அமைவாக பாடசாலையில் நடைமுறைப்படும் முறைசார் கலைத்திட்டத்தின் ஊடாக அறிவுத்தொகுதி, திறன்கள், உளப்பாங்குகள் உள்ளடங்கிய சகல கல்விச்செயற்பாடுளும் இதனூடாக வழங்கப்படுகின்றதெனலாம். பாடசாலை கலைத்திட்டத்தில் சமூக செயற்பாடுகளுக்கான பயிற்சியும் வழங்கப்படுகின்றது எனலாம். அந்த வகையில் பாடசாலையில் நடைபெறுகின்ற ‘விளையாட்டுப் போட்டி, கல்விச் சுற்றுலா முறை, குழுமுறைக் கற்பித்தல்’ போன்ற செயற்பாடுகளின் மூலம் சமூகத்தோடு பரஸ்பரம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் குழுக்களாகச் செயற்படவும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.
இணைப்பாடச் செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பிள்ளை தானாகவே சமூகமயமாக்கலுக்கு இட்டுச் செல்லப்படுகின்றது எனலாம். விளையாட்டுப் போட்டியானது பிள்ளையிடம் ‘நற்பண்புகளை வளர்ப்பதுடன், விட்டுக்கொடுப்பு, வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக் கொள்ளல், தலைமைக்கு கட்டுப்படும் பண்பு, விதிகளைக் கடைபிடித்தல், சட்டதிட்டங்களை மீறாமை, உடலைக் கட்டாகப் பேணுதல், வெற்றிக்காகப் போராடும் முயற்சியை வளர்த்தல்’ போன்ற சமூகமயமாக்கல் பண்புகளினை வளர்க்கின்றன எனலாம்.
இதனால் எதிர்காலத்தில், வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும், மத, இன, சாதி, பேதங்களை மதிக்கும் தன்மையும், நட்புறவுடன் செயற்படும் ஆற்றலும் வளர்த்தெடுக்கப்படுவதற்கு உதவுகின்றன.
மாணவர் தலைவர் பதவிகள் மற்றும் பயிற்சிப் பாசறைகளின் ஊடாகவும் கல்விச் சமூகமயமாக்கலானது தினம் தோறும் நடைபெற்று வருகின்றதெனலாம். தலைமைத்துவப்பண்பு வளர்க்கப்படுவதுடன் வாழ்வில் ஒரு செயலை பொறுப்பெடுத்து சரியாகத் திட்டமிட்டு நடாத்துதல், அதன் போது வரும் முரண்பாடுகளைத் தீர்த்தல், எந்த விடயத்தையும் துணிந்து செய்ய முற்படல், சமூக சேவைகளில் ஈடுபடல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன. குழுச் செயற்பாடுகள் போன்றவை மூலமாக உளவிருத்தி, தன்னம்பிக்கை தலைமை தாங்கும் பண்பு என்பன வளர்க்கப்பட்டு பிற்காலத்தில் சமூகத்தில் செல்லும் பிள்ளைக்கு அவை சமூகத்தில் முன்மாதிரியாக வாழ, சமூகமயமாக்கலுக்கு வித்திடுகின்றது.
பாடசாலைகளில் நடைபெறும் போட்டிகளின் ஊடாக, மாணவர்களின் அறிவு மேம்படுவதுடன், சமூகத்தில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு, நட்புறவுகளை வளர்த்துக் கொள்ளல், தோல்வியை ஏற்றுக் கொண்டு வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் பண்பு என சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன. பாடசாலையில் ஆசிரியர்களும் அதிபரும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இணைப்பாடச் செயற்படுகளுக்கும் அளிப்பதன் மூலம் பிள்ளைகளிடத்தில் சமூக மயமாக்கலை ஏற்படுத்தி சமூகத்தில் நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்கும் தேசிய இலக்கை அடைய முடியும்.
ஒட்டு மொத்தமாக கலைத்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் நலன் கருதி கல்விச் சமூகமயமாக்கலானது நடைபெறுகின்றதெனலாம். எடுத்துக்காட்டாக, “சமூக பாதுகாப்பும் மேம்பாடும், அறிவு விருத்தி, நாளாந்த வாழ்வின் பிரச்சனைகள் பற்றிய அறிவு, ஒழுக்க விழுமிய விருத்தி, தேசிய கலாச்சாரம் தொடர்பான அறிவும் தெளிவும், வாழ்க்கைத்திறன் சமூக பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவு” போன்றவற்றினைச் சுட்டிக்காட்டலாம்.
கலைத்;;;;;;;திட்டமானது மாணவனை சமூக மயமாக்கலுக்கு உட்படுத்துவது மட்டுமன்றி கற்றலின் சலிப்புத்தன்மையையும் குறைக்கின்றது எனலாம். ஆகவே நேரடியாகவும் மறைமுகமாவும் கலைத்திட்டமானது கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்துகின்றதென்றால் அது மிகையாகாது.
க.நிதுஷா
4 ஆம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
