விசேட தேவைகளை உடைய மாணவர்களை கல்விச் சமூகமயமாக்குவதில் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பு

கல்வி

விசேட தேவைகளை உடைய மாணவர்களை கல்விச் சமூகமயமாக்குவதில் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பு

தனியாட்களுக்கும் பண்பாட்டுச் சூழலுக்குமிடையே நிலவும் தொடர்பு பற்றிய கல்வியே கல்வி சமூகமயமாக்களாகும். இங்கு பண்பாட்டுச் சூழலானது தனியாள் மீது செலுத்தும் செல்வாக்கினை ஆராய்வதுடன், அச்சூழலை மாற்றியமைக்கும் வழிமுறையாகவும் கல்வி அமைகின்றது. 

கல்விச் சமூகவியலில் சமவயதுக் குழுக்களானவர்கள் மிக முக்கியமானவர்களாவார்கள். இவர்கள் சமூகமயமாக்கல் முகவர்களாக திகழ்வதன் வாயிலாக கல்வி சமூகமயமாக்களிலும் இன்றி அமையாதவர்களாக உள்ளனர்.

கல்விச் சமூகவியல் இன்றைய காலப்பகுதியில் முக்கியத்துவப்படுத்தப்படும் ஒரு துறையாக இருந்த போதிலும் 19ஆம் நூற்றாண்டிலேயே கல்வியில் ஏற்பட்ட சில மாற்றங்களின் வாயிலாக இது முன்னிலைப்படுத்தப்பட்டு, 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் கல்வித்துறையோடு இணைந்த ஒரு கோட்பாடாகக் காணப்படுகின்றது. 

சமூகமயமாக்கல் முகவர்கள் என்ற வகையில் சமவயதுக் குழுக்களானவர்கள் கல்வி சமூகமயமாக்களுக்கும் பாரிய பங்களிப்பினை செய்கின்றனர். அந்த வகையில் உட்படுத்தல் கல்வியோடு அறிமுகமான விசேட தேவைகளுடைய மாணவர்களின் கல்வி சமூகமயமாக்களிலும் சமவயதுக் குழுக்களானவர்கள் பாரிய பங்களிப்புகளை செலுத்தி வருகின்றனர். அவை சாதகமானதாகவும் இருக்கலாம், சில வேலைகளில் பாதக தன்மைகளையும் வெளிப்படுத்தலாம். 

விசேட தேவைகளை உடைய மாணவர்கள் எனும் போது கேட்டல் குறைபாடுடையவர்கள், பார்வை குறைபாடுடையவர்கள், கற்றல் இயலாமையுடையவர்கள், உடலிலியக்க குறைபாடுடையவர்கள், பேச்சு மற்றும் மொழி குறைபாடுடையவர்கள், ஓட்டிசம், மீத்திறன் கொண்டவர்கள் என்பவர்கள் உள்ளடங்குகின்றார்கள். கல்வி நிறுவனங்களை பொறுத்த வரையில் இவர்களின் கல்வி சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்களானவர்கள் குடும்பம், பாடசாலை, உயர்கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள்  என பல்வேறு காலப்பகுதிகளிலும் பாரிய பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். 

விசேட தேவைகளுடைய பிள்ளைகள் என்பவர்கள் உட்படுத்தல் கல்வியுடன் கல்வி சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்களின் பாரிய பங்களிப்புகளில் உடல், உள விருத்தி என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இவர்கள் உடலியல் ரீதியாக கொண்டுள்ள இயலாமைகளினை சமவயதுக் குழுவினரின் ஒற்றுமை உணர்வுகளின் வாயிலாக குறைத்துக் கொள்வதுடன், உளரீதியாக ஆறுதல்களினையும் இக்குழுக்களினால் பெற்றும் வருகின்றனர். எடுத்துக்காட்டாக: நிக் வாய்சிக் மல்பானில் பிறந்தார். இவர் சிறு வயதிலேயே கொக்கா மதியா எனும் நோயால் பாதிக்கப்பட்டார். இருந்தும் இன்று இவர் சிறந்த பேச்சாளராகவும், ஒரு தன்னியக்க நிறுவனத்தின் அதிபதியாகவும் திகழ்வதற்கான காரணிகளில் தனது கல்விச் சமூகமயமாக்களில் நண்பர் குழாமின் பங்களிப்பினையும் எடுத்துக் கூறி பல பேச்சுக்களை பேசியுள்ளார். 

திறன் வெளிப்பாடுகளும் கல்விச் சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்களின் வாயிலாக விசேட தேவைகளை உடைய மாணவர்களுக்கு வெளிப்படுகின்றது. விசேட தேவைகளை உடைய மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு மட்டங்களை எடுத்துக் கொண்டால் அவர்களினை கலை, கலாச்சார நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லுதல், அவற்றில் பங்கு கொள்ள செய்தல் என பல்வேறு செயற்பாடுகளில் இவர்கள் உதவுகின்றனர். 

சமூக உணர்வுகள் என்பது அதிகரிப்பதற்கும் கல்வி சமூகமயமாக்களில் விசேட தேவைகளை உடைய மாணவர்களுக்கு சமவயதுக் குழுக்கள் உதவுகின்றனர். எடுத்துக்காட்டாக: இலங்கை போன்ற பல்லின கலாச்சாரங்களையுடைய நாடுகளில் சமூகமானது பல்லின மொழி, கலாச்சார மாண்புகளை வெளிப்படுத்தும் ஒன்றாக காணப்படுவதனால் இவ்வாறான மாணவர்களின் ஒன்று சேர்கையில் விசேட தேவைகளை உடைய மாணவர்களுக்கும் சமூக உணர்வுகள் எழுகின்றது.

கல்வி சமூகமயமாக்களில் விசேட தேவைகளுடைய மாணவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுவதில் சமவயதுக் குழுக்களானவர்கள் பாரி பங்களிப்பினை செய்கின்றனர். உதாரணமாக: சுதந்திரமான மற்றும் சமத்துவமான உறவு நிலைகளினை தங்களது வயதை ஒத்தவர்கள் எனும் அடிப்படையில் சமவயதுக் குழுக்கள் காட்டுவதன் வாயிலாக விசேட தேவைகளை உடைய மாணவர்களிடையே சுதந்திரமான உணர்வுகள் ஏற்பட்டு, அவர்களின் திறன்கள் வெளிப்படுவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. இதன் வாயிலாகவே இன்றைய பல்கலைக்கழகங்களில் விசேட தேவைகளை உடைய மாணவர்கள் தங்களது பட்டக் கற்கையினை நிறைவு செய்து செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. 

கல்விச் சமூகவியல் சூழலில் தனியாட்களுக்கும், பண்பாட்டுச் சூழலுக்குமிடையே தொடர்பு நிலையை ஏற்படுத்தும் பாரிய பணியினை செய்கின்றது எனும் அடிப்படையில், பல்லின கலாச்சார பண்புகளை அறிந்து கொள்வதற்கும் விசேட தேவைகளுடைய மாணவர்களுக்கு இச்சமவயதுக் குழுக்கள் உதவுகின்றன. இன்றைய நாடுகள் அதிகௗவாக பல்பண்பாட்டுச் சூழலை உள்ளடக்கியது என்பதனால் பாடசாலை, உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கிடைக்கும் பல்லின கலாச்சார நண்பர்களின் வாயிலாக அவர்கள் ஏனைய கலாச்சார மாண்புகளை உடையவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் பழக்கப்படுகின்றனர். 

மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வதற்கும், அதனூடாக தங்கள் திறன்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கும், விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் அடைவுகளுக்கும், கல்வி சமூகமயமாக்களின் ஒரு பகுதியாக இந்த சமவயதுக் குழுக்கள் உதவுகின்றனர். எடுத்துக்காட்டாக: செங்கலடி விவேகானந்தா வித்யாலயத்தின் விசேட தேவையுடைய குபேந்திரன் ரிநோபன் எனும் மாணவன் தனது கால்களும், கைகளும் ஒழுங்காக செயற்பட முடியாத நிலையிலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமைக்கு தனது நண்பர்கள் பாரிய பங்களிப்புக்களினைச் செய்துள்ளனர் எனக் கூறியமை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். 

வகிபங்கு மாற்றச் சமூகமயமாக்களானது பண்பாட்டுச் சூழலுக்கிடையே கல்வி சமூகமயமாக்களில் இடம்பெறுவதற்கும் இந்த சமவயதுக் குழுக்களானது அதிகரித்த பங்களிப்பினை செலுத்துகின்றது. நண்பர் குழாத்துடன் இனையும் போது விசேட தேவைகளை உடைய மாணவர்களில் இயலாமையுடைய மாணவர்கள் தங்களிடையே சமத்துவமான ஒரு உணர்வினை உணர்வதன் வாயிலாக தங்களது இயலாமைகளை மறந்து முடியவில்லை என்று கூறும் செயற்பாடுகளை விடுத்தும் அவர்கள் புதிய புதிய திறன்களை தங்களிடத்தில் வளர்த்துக் கொள்கின்றனர். அது மாத்திரமில்லாமல் மீத்திறனுடைய மாணவர்களுக்கும் இந்த வகிபங்கு மாற்றச் சமூகமயமாக்களில் பல்வேறு உதவிகளையும் சமவயதுக் குழுக்கள் செய்கின்றனர். பாடசாலை, பல்கலைக்கழகம், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு மட்டங்களிலும் இவர்களின் முயற்சிகளுக்கும், மேலதிக செயற்பாடுகளுக்கும் இவர்கள் பல்வேறு உதவிகளினையும் செய்து வருகின்றனர். 

எவ்வாறாயினும் கல்வி சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பானது விசேட தேவைகளை உடைய மாணவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன. உலகில் அவ்வாறான செயற்பாடுகளுக்கும் பல்வேறு சம்பவங்களும் எடுத்துக்காட்டாக உள்ளன. 

இவ்வாறான விசேட தேவைகளை உடைய மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் போது அவர்களை ஒதுக்கி வைத்தல் என்பது சமவயதுக் குழுவினரின் மிக முக்கியமான செயற்பாடாக காணப்படுகின்றது. ஆகவே, கல்விச் சமூகமயமாக்களில் அதிகமாக இயலாமையுடைய மாணவர்களை சாதாரண மாணவர்கள் தங்களோடு இணைத்துக் கொள்வதற்கு முன்வருவதில்லை. இதன் காரணமாக அவர்கள் உடல், உள, மனவெழுச்சி ரீதியாக இன்னும் பின்னடைவுக்கு செல்லக்கூடிய நிலையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இந்நிலையானது வளர்ச்சியடைந்த வல்லரசு நாடான அமெரிக்காவின் உட்படுத்தல் கல்வியில் கூட அவதானிக்க கூடியதாகவே உள்ளது. 

ஒதுக்கி வைத்தலோடு மாத்திரமில்லாமல், அவர்களின் குறைகளை கூறி அவர்களை இழிவுபடுத்தக்கூடிய ஒரு நிலையானதும் இன்று கல்வி சமூகமயமாக்கலில் சமவயதுக் குழுக்களினால் விசேட தேவைகளை உடைய மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் ஒரு பாதகமான விளைவாகவே உள்ளது. இவ்விளைவின் காரணமாக அவ்வாறான மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். 

கேலி, கிண்டல் போன்றனவற்றால் சமவயதுக் குழுக்கள் விசேட தேவைகளை உடைய மாணவர்களை பகிடி செய்வதும், அவ்வாறே அவர்களுக்குரிய கலாச்சார விடயங்கள் சம்பந்தமாகவும், திருமண நிகழ்வுகள் சம்பந்தமாகவும் பல்வேறு விமர்சனங்களை செய்வதன் வாயிலாகவும் விசேட தேவைகளை உடைய மாணவர்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்ளக்கூடிய நிலைகள் கூட இன்று குடும்பம், பாடசாலை, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக: பாகிஸ்தானிய முபினா மசாரியின் தற்கொலை முயற்சியினை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். 

உடல் ரீதியாக காயங்களுக்கு உட்படுத்துதல் என்பதும் விசேட தேவைசார் மாணவர்களை நண்பர் குழாத்தினர் கல்வி சமூகமயமாக்களில் எதிர்மறையான விளைவுக்கு இட்டுச்செல்லும் ஒரு விடயமாக காணப்படுவதுடன், சில சமவயதுக் குழுக்கள் இவ்வாறான மாணவர்களை போதை வஸ்து பழக்கங்களுக்கும் இட்டுச் செல்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். 

கல்விச் சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்கள் என்பது எவ்வளவு முக்கியமோ அதேயளவு உட்படுத்தல் கல்வியின் பின்னர் விசேட தேவைகளை உடைய மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்கல் செயன்முறைக்கும் சமவயதுக் குழுக்கள் பாரிய பங்களிப்பினை செய்கின்றனர். அவர்களின் பங்களிப்புகளில் ஒரு பகுதியானது சாதகமான விளைவுகளினைத்தர, மற்றைய பகுதியானது அதற்கு எதிரான வகையில் பாதகமான பல்வேறு விளைவுகளினை ஏற்படுத்திகின்றன. எனவே, கால ஓட்டத்தில் இவர்களின் குறைபாடுகளை பிறந்ததிலிருந்து மரணம் வரை மறைக்கக் கூடிய ஒரே ஒரு உறவு நிலை நண்பர் குழாத்தினரானவர்கள். இவர்களின் கற்றல் – கற்பித்தல், சமூக மனவெழுச்சி ரீதியான பல்வேறு மாற்றங்களுக்கும் சமவயதுக் குழுக்களானவர்கள் பாரியளவில் பங்களிப்பு செய்து உதவ வேண்டும் என்பது இன்றைய பல்லின கலாச்சார நாடுகளுக்கு அத்தியாவசியமான ஜனநாயகத் தேவையாக உள்ளது.

நிசார் பாத்திமா நிஸ்மினா
நான்காம் வருட 
கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி 
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை 
கிழக்குப் பல்கலைக்கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *