♣️ ரூம் நம்பர் 418 தொடர்கதை – பாகம் 3

கதைகள்

ரூம் நம்பர் 418

பாகம் 3

ஒருவாறு மாடிப்படிகளில் ஏறி 418 ரூமுக்கு முன்னால் வந்து நின்ற மிஸ் மாஸ்டர் கீயை எடுத்து கதவின் கைப்பிடியுடன் கீழ் பக்கமாக இருக்கும் துளைக்குள் சாவியை உட்செலுத்தி ஒரு அரை வட்டம் போட்ட போது திடீரென ஒரு சத்தம் கேட்டது.

திடுக்கிட்ட மூவரும் என்னவென்று அங்கும் இங்கும் திரும்பி பார்த்தனர்.

எதுவும் இருப்பதாக தெரியவில்லை.சட்டென்று மேலே பார்த்தால் தலைக்கு மேல் நேராக உள்ள Exit என்று பெயரிடப்பட்டு இரு ஆணிகளின் உதவியுடன் தொங்கிக் கொண்டிருந்த பலகையொன்று ஒரு ஆணி கழன்ற நிலையில் ஒருபக்கம் சரிவாக தொங்கிக் கொண்டிருந்தது.

“இது எப்பிடி கழன்டிச்சி..?” என்று மிஸ் தனக்குள் முணுமுணுத்தவாறே,

நிலை தடுமாறிய இரு தோழிகளையும் பார்த்து,

“ஒன்னும் இல்ல..ஆணி லூசாகி இரிக்கும்..”

“எப்பிடி மிஸ் இப்பிடி ஆகும்..?”

“இல்லமா இது எல்லாம் மிச்சம் பழசாகிட்டு…சோ..இப்பிடி ஒவ்வொன்னா கழன்டு உலுறது வழக்கம் தான்..”

“ஆஹ்..ஆணி கர புடிச்சி இரிக்கும் மிஸ்…” என்று ஏதோ காரணத்தை கண்டு பிடித்த களிப்பில் கமலா சொல்ல,

ம்ம்….என்று மிஸ் அமைதியாக கூறிவிட்டு,

கதவின் பக்கம் பார்வையை செலுத்தி,

கதவின் கைப்பிடியைப் பிடித்து இரண்டு மூன்று அரைவட்டம் போட்டு கதவை திறக்க எத்தனித்த போது..

ச்சே…என்னா இது ஓபன் ஆகுதில்ல… என்று நெற்றியை சுருக்கி கேட்டுக் கொண்டே பலத்துடன் தனது இரு கைகளையும் இழுத்து ஒரு தட்டு தட்டியது தான் தாமதம்…

தடார்….என்று கதவு திறந்து கொண்டது.

புளுதியின் ஆக்கிரமிப்பால் மூவரும் வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு இருமியவாறே நகர்ந்தனர்.

“இந்த ரூம ஓபன் பண்ணியே மிச்ச காலம் போல இரிக்கிது மிஸ்…”

“ஓமா… நா தான் ஆல்ரெடி சொன்னேனே.. இந்த ரூமுக்கு ஸ்டுடன்ட் கீ இல்லாததால இத யாருமே எடுக்குறல்ல…நீங்க தான் வேணும்னு மல்லுகட்டுறீங்க புள்ளகள்…”

இரு தோழிகளும் கள்ளச் சிரிப்புடன் புருவத்தை உயர்த்திக் கொண்டு,

“பரவல்ல மிஸ்…நாங்க க்ளீன் பண்ணி எடுக்குறோம்…”என்றனர்.

“ம்ஹூம்…பட் ரூம் சேன்ஜ் பண்ண தேவபட்டா சொல்லுங்க…எப்ப வேணாலும் சேன்ஜ் பண்ணி தர நா ரெடி தான்…” என்று கூறிய மிஸ்

மாலாவின் முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டி விட்டு கதவில் தொங்கிக் கொண்டிருந்த சாவியை எடுத்துக் கொண்டு மெலிதான புன்னகையுடன் அங்கிருந்து சென்றார்.

கேட்ட ரூமே கிடைத்ததால் ‘நினைத்ததை சாதித்த ஆனந்தத்தில்’ திளைத்து நின்றனர் தோழிகள்.

“அப்பாடா…வாடி…ரூம க்ளீன் பண்ணுவோம்..” என்று கமலா கூற சரியென்று தலையசைத்தவாறே மாலாவும் அறையினுள் நுழைந்தாள்.

உள் நுழைந்தது தான் தாமதம்.இருவரும் பேயரைந்ததை போல சிலையாக நின்றனர்.

அறை முழுக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலந்தி வலைகள்.அவை இன்னும் அறையை இருட்டாகவே காட்டிக் கொண்டிருந்தது.

“அம்மோவ்…என்னடி இவ்வளவ் ஒட்டடையா..?செலந்தி பரம்பரயே இரிக்குது போல… என்று மாலா சொல்ல,

“அடி வாய மூடு… பயமா இரிக்கிடி எனக்கு…”

“அச்சோ பயப்படாதடி…நா பூச்சிக்கெல்லாம் பயமில்ல..ஒனக்கு ஒரு உண்ம தெரியுமாடி..?”

“என்னா…?”

“செலந்தி கடிச்சா தான் ஸ்பைடர் மேன் ஆகேலுமாம் டி தெரியுமா…?”

இதை கேட்ட கமலா கலகலவென சிரித்து விட்டு,

“அடி போடி..நீ என்ன தைரிய சாலியா..?கரப்பான்பூச்ச கண்டாலே அந்த ஓட்டம் ஓடுவாய்…வந்துட்டாளாம் வீராப்பு கதக்க…”

கள்ளப்பூனையை போல திருதிருவென்று கமலாவை பார்த்து கள்ளநகை செய்து விட்டு மெதுவாக நழுவினாள் மாலா.

“ப்பாஹ்….என்னா ஒரு ஊத்தடி இது.‌..கறுப்பு மண்ணா வருது பாரேன்…”என்று ஒருவர் மாறி ஒருவர் கூறிக் கொண்டே ஒவ்வொன்றாக சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

“அடி மாலா இங்க பாருடி….யாரோ சீனியர்ட நோட்ஸ் போல…இத படிச்சாலே போதும்டி… எல்லாம் பக்காவா இரிக்கி…”

“வாவ்!வாவ்!…இந்த ரூம் கெடச்சதால நல்லதா போச்சிடி யம்மா….”

“இன்னும் என்னா சரி இரிக்கும் வாடி மெதுவா பாப்பம்… ” என்று கமலா கூற இருவரும் புதையலை தேடுவதை போல அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

தொடரும்…

✍️ Writer : Noor Shahidha

Noor Shahidha எழுதிய ரூம் நம்பர் 418 தொடர்கதையின் அனைத்து பாகங்களையும் வாசிக்க எங்களுடைய WhatsApp Group யில் இணைந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *