ரூம் நம்பர் 418
பாகம் 4
புதையலை தேடும் ஆவலில் இருவரும் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
“டக் டக்…”
கதவு தட்டும் சத்தம் போலிருந்தது.
“யாரு…? வாங்க உள்ளுக்கு…..”
எந்த பதிலும் இல்லை.
“டொக் டொக்…”
மீண்டும் அதே சத்தம்.அதுவும் இன்னும் அழுத்தமாக…!
“வாங்கடா டோர் ஓபனா தான் இரிக்கி….”
ஒரு கணம் சத்தம் வந்த திசையை நுணுக்கமாக காது கொடுத்த கமலா,
“ஏய் மாலா…சவுண்ட் பின்னுக்கு இருந்து தான் வருதுடி….”
அவளும் சட்டென்று பின் கதவின் பக்கம் திரும்பி பார்த்து விட்டு,
ஓமா….பெல்கனி டோர்…..!! என்று கமலாவை பார்த்து ஆச்சரியமாக கேட்டுக் கொண்டே கையில் இருந்த குறிப்பு தாள்களை அப்படியே போட்டுவிட்டு எழுந்து வந்தாள்.
“டி….நீ எங்க போறாய்…?”
“கொஞ்சம் பொறு டி…என்னானு பாப்போம்…” என்று கூறிக் கொண்டே பெல்கனியின் அருகில் வந்து நின்றாள்.
“கடகட கடகட…” என்று நடுங்கியபடி பெல்கனி கதவு ஆடிக் கொண்டிருந்தது.
என்னவென்று அவள் யோசிக்கும் முன்பே ஏதோ நிழல் ஒன்று கதவை நெருங்கி வருவதை போன்றிருந்தது.
உடனடியாக அவள் கதவை திறப்பதற்காக கையை நீட்டிய மறுகணமே கதவின் மேல் ஏதோ மோதி விழுந்தது. திடுக்கிட்டவள்,
“கம….லா….!” என்றாள்..
விழிபிதுங்கி வாய்திறந்த நிலையில் மூச்சை மட்டும் மேலும் கீழும் தங்கு தடையின்றி இழுத்துக் கொண்டிருந்த அவளை பார்த்த கமலா,
“என்னாச்சு டி…போகாதனு சொன்னேனே கேட்டியா…??” என்று அவளை உரிமையுடன் கடிந்து கொண்டாள்.
“இல்லடி…ஏதோ கதவுல பட்டு விழுந்திச்சி டி….”
“என்னடி சொல்றாய்…?”
“ஆமாம் டி…நா நல்லா பயத்துட்டன் டி…”
“ம்ஹூம்….சும்மா கண்டதுகளுக்கு எல்லாம் பயப்படாதடி…இரி வாறேன்…” என்று அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே கமலா கதவின் அருகில் சென்று பார்த்தாள்.
உண்மையில் கதவு ஆடிக்கொண்டு தான் இருந்தது.ஏன் இப்படி கதவு ஆடுகிறது என்று யோசித்து கொண்டே சுற்றுவர பார்த்தாள்.அப்போது தான் அவளுக்கு ஒரு உண்மை புலப்பட்டது.
ஆம்! கதவு தானாக ஆடவில்லை.அது ஆட்டுவிக்கப்படுகிறது என்று…!
“மாலா…இங்க வந்து பாரேன் கொஞ்சம்…”
“என்னடி…?” என்ற கேள்வியுடன் பெல்கனி கதவருகில் வந்தவளின் கையைப் பிடித்து,
“வாடி என்னோட….” என்று அவளையும் இழுத்து கொண்டு பெல்கனி கதவை திறந்தாள் கமலா.
ஸ்ஸ்ஹு…ஸ்ஸ்ஹூ…என்ற ஓசையுடன் பலத்த காற்று வீச; நீண்ட உயர்ந்த தென்னை மரம் காற்றின் தாலத்திற்கு ஏற்ப தனது ஓலைகளை அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டிருக்க; வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது.நிலத்தில் தென்னோலை பட்டையொன்று விழுந்து மழையில் நனைந்து கொண்டிருந்தது.
இப்போது இருவருக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க கூடியதாக இருந்தது.
ஒரு கணம் பயத்தில் உறைந்து போன தனது உடலை நினைத்து இருவருக்கும் சிரிப்பு தான் வந்தது.
பெல்கனி கதவு பூட்டப்டிருந்ததால் வெளியில் மழை பெய்வது கூட இருவருக்கும் தெரியாமல் இருந்தது.
“இதுக்கு போய் பயத்துடோமே…” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டனர் தோழிகள்.
“ஒரு ரூம நிம்மதியா க்ளீன் பண்ண விடுறியாடி….” என்று மாலா கூற,
“அடி போடி…நா என்ன பண்ணேன்..? நீ தான்…” என்று பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் இருவரும் மழுப்பி கொண்டிருந்தனர்.
நீண்ட பெருமூச்சுடன் ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பெல்கனி யன்னலை பார்த்துக் கொண்டிருந்த கமலாவின் பார்வை ஒருகணம் இமைக்க மறுத்தது.
தொடரும்…!
NoorShahidha
Noor Shahidha எழுதிய ரூம் நம்பர் 418 தொடர்கதையின் அனைத்து பாகங்களையும் வாசிக்க எங்களுடைய WhatsApp Group யில் இணைந்து கொள்ளுங்கள்