கல்வி

தனிமனிதனை சமூகமயமாக்கலில் பாடசாலைமட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வகிபங்கு

|
Share: |

தனிமனிதனை சமூகமயமாக்கலில் பாடசாலைமட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வகிபங்கு

 

சமூகமயமாக்கல் என்பது ஒரு தொடர்ச்சியான கருமத்தொடராகும். இதன் மூலம் ஒருவர் தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதுடன் தம்மைச் சூழவுள்ள கலாசாரத்தின் நம்பிக்கைகளையும் அச்சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் கற்றுக் கொள்கின்றான். அந்தவகையில் சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தனது சமூகச் சூழலிலுள்ள நிலைமைக்கு ஏற்ப இசைவாக்கம் அடையும் செயற்பாடாகவும் அதாவது ஒரு நபர் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு செய்ய வேண்டியவைகள், செய்யக்கூடாதவைகள் , அறிய வேண்டியவைகள் எவை என்பன பற்றி கற்றுக்கொள்ளும் செயற்பாடாகவும் உள்ளது. ஆகவே ஒரு மனிதன் சமூகத்தில் வாழ்வதற்கு சமூகமயமாக்கப்படுவது அவசியமாகும். எனவே பிள்ளைப் பருவத்திலிருந்தே சமூகமயமாக்கல் ஒருவரிடத்தே ஏற்படுத்தப்பட வேண்டும். இச் சமூகமயமாக்கல் முகவர்களாக குடும்பம், பாடசாலை, பல்கலைக்கழகங்கள், சமூக கலாசார நிறுவனங்கள் என்பன தொழிற்பட வேண்டியது அவசியமாகின்றது.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் இத் தலைவர்களை உருவாக்கும் பொறுப்பில் முக்கிய பங்கு வகிப்பது பாடசாலையாகும். பாடசாலைகளே சமூகத்திற்கான சிறந்த சமூகமொன்றை உருவாக்கும் கேந்திர தளமாக உள்ளது. ஒரு பிள்ளையின் சமூகமயமாக்கலில் பங்களிப்புச் செய்யும் நிறுவனங்களில் பாடசாலையும் ஒன்றாகும். பாடசாலை என்பது கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் ஒரு நிறுவனம் ஆகும். பாடசாலைக் கலைத்திட்டமானது கற்றல், கற்பித்தல், கல்விப் புறச்செயற்பாடுகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இக்கலைத்திட்டமானது கல்வி நடவடிக்கைகளை மட்டுமல்லாமல் மாணவர்களுடைய அனைத்து அனுபவங்களையும் செயற்பாடுகளையும் ஒன்று திரட்டி ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு விடயமாக விளங்குகின்றது. அந்தவகையில் குடும்பத்திற்கு அடுத்ததாக பாடசாலையே சமூகமயமாக்கல் நிறுவனமாகத் தொழிற்படுகின்றது. குடும்பத்திலிருந்து நேரடியாக பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையை சமூகமயமாக்கல் செயற்பாட்டில் ஈடுபடுத்தும் செயற்பாடுகளாக பாடசாலை இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொழிற்படுகின்றன எனலாம்.

 

இன்று கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளையே முதன் மையமாகக் கொண்டு கலைத்திட்டம் உருவாக்கப்படுகின்ற போதும் வகுப்பறைக்கு வெளியே இடம்பெறும் விளையாட்டுக்கள், விழாக்கள், கூட்டங்கள், பிராத்தனைகள், போட்டிகள் போன்றவைகளும் முக்கியம் பெறும் நிலையைக் காண்கின்றோம். நூலறிவை மட்டும் மாணவர்களுக்கு வழங்குவதை விடப் புறச் செயற்பாடுகளிலும் முழுமனதோடு விரும்பி ஈடுபடுகின்ற தன்மை மாணவர்கள் மத்தியில் வளர்க்கப்படல் வேண்டும். பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் வகுப்பறைக் கற்றலுக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்காது பாடசாலைகளில் இடம் பெறும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பங்கு கொள்ள வேண்டும். பாடசாலைகளில் இடம்பெறும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் வகுப்பறைக் கற்பித்தலை மேம்படுத்த உதவுவதோடு சமூகமயமாக்கலையும் மாணவர்களுக்கு ஊட்டுவதாக அமைகின்றது. உதாரணமாக - இணைக் கலைத்திட்ட செயற்பாடுகளான நூல் நிலைய வாசிப்பு, விஞ்ஞான ஆய்வுகூடப் பரிசோதனைகள், மனையியல் பயிற்சிகள், விவசாயம், தொழில் முன்னிலைப் பாடங்கள், கைவேலை, தையல் பயிற்சிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இன்றைய பாடசாலைச் செயற்பாடுகளை எடுத்துநோக்கின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைப் போன்றே இணைப்பாடச் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இணைப்பாடச்செயற்பாடு என்ற வரையறைக்குள் பாடசாலைக்கலைத்திட்டத்தில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளைத் தவிர்ந்த அனைத்துச் செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றது. அதாவது இல்ல விளையாட்டுப்போட்டி, கோட்ட, வலய, மாகாண, தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி, தமிழ்த்தினப்போட்டிகள், ஆங்கில, விஞ்ஞான, கணித வினாடிவினாப் போட்டிகள், வாணிவிழா, மீலாத்விழா ,ஒளிவிழா, ஆசிரியர்தினம், பாடசாலைத்தினம், அறிஞர்களின் நினைவுதினம், கல்விச் சுற்றுலா, சாரணர் நிகழ்வுகள், மாணவர் தலைவர் சின்னம் சூட்டும் நிகழ்வுகள், பாடசாலைக் கண்காட்சி கலைவிழா, வெளிக்களச்செயற்பாடுகள் , இசை,நாடக,நடன, சித்திர போட்டிகள் என அனைத்துச் செயற்பாடுகளும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் அடங்கும். இவ்வாறான இணைப்பாடச் செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பிள்ளை தானாகவே சமூகமயமாக்கலுக்கு இட்டுச் செல்லப்படுகின்றது.

 

இணைப்பாடச் செயற்பாடுகளில் ஒன்றான இல்ல விளையாட்டுப்போட்டியை எடுத்துக் கொண்டால் விளையாட்டுப் பிள்ளையிடம் நற்பண்புகளை வளர்ப்பதுடன், விட்டுக்கொடுப்பு, வெற்றி ,தோல்விகளை சமமாக ஏற்றுக் கொள்ளல், தலைமைக்கு கட்டுப்படும் பண்பு விதிகளைக் கடைப்பிடித்தல், சட்டதிட்டங்களை மீறாமை, உடலைக் கட்டாகப் பேணுதல், வெற்றிக்காகப் போராடும் முயற்சியை வளர்த்தல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் மேலும் குற்றச் செயல்களான கொலை, மதுப்பாவனை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதற்கும் விளையாட்டுச் செயற்பாடுகள் உதவுகின்றன. மேலும் கோட்ட, வலய, மாகாண, தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடும் போது கிணற்றுத் தவளையாக இல்லாமல் சமூக விழிப்பு ஏற்பட்டு சமூகமயமாக்கல் தோற்றம் பெறுகின்றது.
அத்துடன் பிறரின் திறமைகளுடன் ஒப்பிடும் போது தான் எந்த நிலையில் உள்ளேன் என்பதையும் இன்னும் எவற்றை வளர்க்க வேண்டும் என்றும் அறிவதுடன் மத, இன, சாதி, பேதங்களை மதிக்கும் தன்மையும், நட்புறவுடன் செயற்படும் ஆற்றலும் வளர்த்தெடுக்கப்படுகின்றது.மேலும் பாடசாலைத் தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி போன்ற போட்டிகளில் ஈடுபடுவதால் மாணவர்களின் அறிவு மேம்படுவதுடன், போட்டி போட்டு செயற்படும் விதத்தை அறிந்து கொள்ளல், சமூகத்தில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு, நட்புறவுகளை வளர்த்துக் கொள்ளல், தோல்வியை ஏற்றுக் கொண்டு வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் பண்பு என சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன. மற்றும் மாணவர் தலைவர் பதவிகள் மற்றும் பயிற்சிப் பாசறைகள் போன்றவைகள் மூலம் தலைமைத்துவப்பண்பு வளர்க்கப்படுவதுடன் வாழ்வில் ஒரு செயலை பொறுப்பெடுத்து சரியாகத் திட்டமிட்டு நடாத்துதல், அதன் போது வரும் முரண்பாடுகளைத் தீர்த்தல், எந்த விடயத்தையும் துணிந்து செய்ய முற்படல், பிறரை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருத்தல், சமூக சேவைகளில் ஈடுபடல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன. அதேபோன்று வாணிவிழா, மீலாத்விழா, ஒளிவிழா போன்ற சமய விழாக்களை பாடசாலை நடாத்துவதன் மூலம் மதங்களை மதித்து நடப்பதற்கு இது உறுதுணை புரிகின்றது. மற்றும் சமூகத்தில் இன, மத, ஒற்றுமைக்கும் இது வழி சமைக்கின்றது. மேலும் இனக்கலவரங்கள் குறைவடைவதற்கும் இதுவே காரணமாகும்.

இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் அடங்கும் கண்காட்சி, புத்தாக்கப்போட்டி, சஞ்சிகை , நாவல் வெளியீடு என்பவற்றினால் பிள்ளையின் அறிவு தூண்டப்படுவதுடன் சமூகத்திற்கு இன்றைய நிலையில் எது தேவை? என்று அறியவும் முடிகின்றது. மேலும் Morning Assemply _Mass Prayer என்பவற்றின் மூலம் நேர முகாமைத்துவம், கலாசாரம் என்பவற்றை எதிர்காலத்தில் சமூகத்திற்குள் நுழையும் பிள்ளை கற்றுக் கொள்கின்றது. மேலும் பாடசாலையில் செயற்படுத்தப்படும் ஒப்படை, ஆக்கச் செயற்பாடுகள் , வெளிக்களச் செயற்பாடுகள் மூலம் கூட்டாக பிறருடன் ஒத்துழைத்துச் செயற்படும் தன்மை வளர்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் சமூகத்திற்குள் செல்லும் பிள்ளை பிறருடன் எவ்வாறு இணைந்து செயற்பாடுகளை செய்ய வேண்டும். சமூகத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எப்படி எனவும் கற்றுக் கொள்கின்றது.

அது மட்டுமன்றி விவாதப்போட்டி, இசை, நடனம், நாடக போட்டிகள், நிகழ்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதால் அவர்களது கூச்ச சுபாவம் அற்றுப் போவதுடன் எதிர்காலத்தில் பிறர் முன் ஒரு விடயத்தை பயமின்றி கூறவும், முன்வந்து செயற்படவும், பின்வாங்குதலை தவிர்த்துக் கொள்ளவும் முடியும். அத்துடன் சுற்றுலா, களப்பயணங்களில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தும் போது பல்வேறு சமூக கலாசாரங்களை உணரவும், சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைவது எப்படி என அறிந்து கொள்ளவும் முடிகிறது. மேலும் வகுப்பறை கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டின் போது இடம்பெறும் குழுச் செயற்பாடுகள், Presentation போன்றவை மூலம் உளவிருத்தி, தன்னம்பிக்கை தலைமைதாங்கும் பண்பு என்பன வளர்க்கப்பட்டு பிற்காலத்தில் சமூகத்தில் நுழையும் பிள்ளைக்கு அவை சமூகத்தில் முன்மாதிரியாக வாழ சமூகமயமாக்கலுக்கு வித்திடுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பயந்து பிறருடன் பேசாமல் ஒதுங்கி இருக்கும் பிள்ளை துணிந்து பிறருடன் சகஜமாக பேச முற்படுகின்றது.
இணைப்பாடச் செயற்பாடுகள் மாணவனை சமூகமயமாக்கலுக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பாடசாலை வரவையும் அதிகரித்து கற்றலின் சலிப்புத்தன்மையை குறைக்கின்றது. இதனால் பிள்ளைக்கு நல்லது எது - தீயது எது என பகுத்துத் தெரிந்து கொள்ளும் அறிவு வளர்க்கப்படும். இவ்வாறே நேரடியாகவும் மறைமுகமாவும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் சமூகமயமாக்கலை ஏற்படுத்துகின்றது.

 

அந்தவகையில் மாணவர்களை சமுதாயத்திற்கேற்ற நற்பிரஜையாக மாற்ற வேண்டிய பொறுப்பு பாடசாலைகளுக்கே உண்டு. பாடசாலைகள் வெறுமனே கல்வி அறிவை மாத்திரம் நோக்கமாகக் கொள்ளாமல் சமுதாயத்திற்கு ஏற்றாற்போல் உடல், உள, சமுக பண்பாடு, ஆளுமை என சகல ஆற்றல்களையும் கொண்ட பூரண மனிதனாக மாற்ற வேண்டும். இவ் ஆற்றல்களை பாடசாலை கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டினால் மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியாது. இவை பாடசாலை இணைக்கலைத்திட்ட செயற்பாடுகள் மூலமாகவே அடையப்பட வேண்டும். ஆகவே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் முக்கியத்துவமும் அவசியம் என்பது பற்றி இன்றைய பாடசாலைகள் உணரவேண்டியது அவசியமானதாகும். சமூகமயமாக்கல் என்பது பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு செயற்பாடு எனலாம். பாடசாலைகள் சமூகத்தின் ஒரு மிக முக்கிய அங்கமாகும். அந்தவகையில் பாடசாலைகள் சமூகமயமாக்கலில் பாரிய பங்களிப்பு செய்கின்றன. பாடசாலையில் ஆசிரியர்களும் அதிபரும் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இணைப்பாடச் செயற்பாடுகளுக்கும் அளிப்பதன் மூலம் பிள்ளைகளிடத்தில் சமூகமயமாக்கலை ஏற்படுத்தி நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்கும் தேசிய இலக்கை அடைய முடியும்.

 

ஞானச்செல்வம் தட்சாயினி,
நான்காம் வருடம் முதலாம் அரையாண்டு ,
கல்வியியல் சிறப்புக்கற்கை,
கல்வி பிள்ளை நலத்துறை,
கலை கலாசாரபீடம்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

 

Written by MindTopper Editor
We write and curate insightful essays, technology updates, business trends, and educational topics exclusively in Tamil to empower minds.

Discussion (4)

தமிழ்ச்செல்வி Jul 02, 2026

அருமையான படைப்பு. தங்களின் தளம் மிகவும் நேர்த்தியாக உள்ளது.

கவிதா Jul 02, 2026

நல்ல பதிவு, மற்றவர்களுக்கும் பகிர்கிறேன்.

மாலதி Jul 02, 2026

இந்த தகவல்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. தொடரட்டும் உங்கள் பணி.

அமுதா Jul 02, 2026

பகிர்ந்தமைக்கு நன்றி, நல்லதொரு பதிவு.